TNPSC Thervupettagam

தடுமாறும் இளைய தலைமுறை

October 14 , 2019 1903 days 1440 0
  • இன்றைய உலகில், மிதமிஞ்சிய வளர்ச்சியால் இளைய தலைமுறைக்குக் கிடைத்திருக்கும் வசதிகளும் வாய்ப்புகளும் ஏராளம். அதே சமயம், அளவுக்கதிகமான வாய்ப்புகள் அவர்களைத் தடுமாற வைக்கின்றன.
  • பத்தாம் வகுப்பு முடிக்கும்போதே தடுமாற்றம் தொடங்கி விடுகிறது. பிளஸ் 1 வகுப்பில் எந்த பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது எனக் குழப்பம் ஏற்படுகிறது. இளைய தலைமுறையினர் எவ்விதத் தெளிவுமின்றி பெரும்பாலும் தத்தம் நண்பர்களோடு சேர்ந்து படிக்கும் வகையில் பாடப் பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மாற்றங்கள்

  • கணிதமும் அறிவியலும் படித்தால் தேவைக்கேற்ப மருத்துவமோ, பொறியியலோ படிக்கலாம் என்று பலர் அந்தப் பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் நிலை இருந்து வந்தது; ஆனால், வரும் கல்வியாண்டு முதல் (2020-21) பொறியியல் அல்லது மருத்துவத்துக்கு உரிய பாடப் பிரிவுகளை மாணவர்கள் குறிப்பிட்டு தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழக கல்வித் துறை மாற்றங்களைச் செய்துள்ளது; இது வரவேற்கத்தக்கது.
     "இந்தப் பாடம் எனக்கு மிகவும் விருப்பமானது' என்ற ஆர்வத்தில் யாரும் பாடங்களைத் தேர்வு செய்வதில்லை.
  • பெற்றோர்களும் தங்கள் கனவுகளைக் குழந்தைகளின் மீது ஏற்றி அவர்களுக்கு விருப்பமானதைப் படிக்க விடாமலும், விருப்பமில்லாததைப் படிக்கும்படியும் கட்டாயப்படுத்துகிறார்கள்.
  • பத்தாம் வகுப்பிலிருந்து பிளஸ் 1 (11-ஆம்) வகுப்புக்குச் செல்லும்போது பலரும் தமிழை மொழிப் பாடமாக எடுப்பதா, வேண்டாமா என்று தடுமாறுகிறார்கள். பெரும்பாலானோர் தமிழை விடுத்து பிரெஞ்சு, ஜெர்மன் என்று தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • இந்த மொழிகள் மீதுள்ள ஆர்வத்தால் தேர்வு செய்வதில்லை; மாறாக, தமிழை விடப் பிற மொழிகளில் மதிப்பெண் வாங்குவது எளிது என்பதால்தான் அவ்வாறு தேர்வு செய்கின்றனர்.
  • பத்தாம் வகுப்புவரை தமிழைப் படித்துவிட்டு திடீரென்று ஒரு வேற்று மொழியை, அதுவும் அரைகுறையாகக் கற்பதில் என்ன நன்மை என்று மாணவர்களுக்கும் தெரிவதில்லை, பெற்றோர்களுக்கும் புரிவதில்லை. இதுவே வெளிநாடுகளில், இந்திய மாணவர்கள் படிக்க வேண்டுமானால், அந்த நாட்டு மொழியில் குறிப்பிட்ட அளவு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே படிக்க முடியும்.

கல்லூரிகளில் சேர்க்கை

  • பெரும்பாலான மாணவர்கள், எந்தத் தெளிவுமின்றிப் பல கல்லூரிகளிலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றனர். எதில் சேருவது என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது. கூட்டம் கூட்டமாக பலரும் மருத்துவம், பொறியியல் ஆகியவற்றில் "தம்மால் இத் துறையில் மிளிர முடியுமா' என்று யோசிக்காமல் சேர்கிறார்கள்.
  • கல்லூரியின் தரம் குறித்தோ, படிப்புக்குப் பிறகான வேலைவாய்ப்பு குறித்தோ யோசிக்காமல் இடம் கிடைத்தால் போதும் என்று பணத்தைக் கொட்டிச் சேர்க்கிறார்கள். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை போன்ற தொழிற்கல்வியைப் படித்து முடித்துவிட்டு சிலர் திடீரென்று அந்தத் துறைகளை விட்டுவிட்டு அரசுப் பணிகளுக்கும், குடிமைப் பணிகளுக்கும் செல்கிறார்கள்.
  • முதலிலேயே பாடப் பிரிவை தெளிவாகத் தேர்வு செய்திருந்தால், இவர்களுக்கு வழங்கப்பட்ட தொழிற்கல்வி இடம் இன்னொருவருக்குக் கிடைத்திருக்குமல்லவா?
  • இவர்களது படிப்புக்குண்டான செலவுகள், காலம், ஆற்றல் எல்லாமே மிச்சமாகியிருக்குமல்லவா?
  • மேலும், இளைய தலைமுறையினர் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போதே, தாங்கள் இருக்கும் ஊரில் கிடைக்கும் படிப்பைவிட வெளியூரில் கிடைக்கும் படிப்பையே விரும்புகின்றனர். இதனால், குடும்பம் என்னும் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம்.

பாதுகாப்பு

  • தங்கும் விடுதிகள் புறாக்கூடுகள் மாதிரி மிகக் குறைந்த வசதிகளோடு இருக்கின்றன. நல்ல உணவு கிடையாது. தண்ணீர் வசதி இல்லை. பாதுகாப்பு இல்லை.
  • இங்கு தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தனிமை, சலிப்பு, வெறுப்பு ஆகியவை வெகு சீக்கிரம் வந்துவிடுகின்றன. சிலர் படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் திரும்பி விடுவதும் நடக்கிறது.
  • சிலரோ சிரமப்பட்டு எப்படியாவது முடிக்க வேண்டுமே என்று படிப்பை முடிக்கின்றனர்.
  • இத்தனை தடுமாற்றங்களுக்கிடையே எப்படியோ படிப்பையும் மேற்படிப்பையும் முடித்த பின்னர் சிலர் உடனே வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அதிலாவது ஒரு நிலைத்த தன்மை ஏற்படுகிறதா என்றால் இல்லை.
  • "இதைவிட அந்த நிறுவனம் அதிக ஊதியம் தருகிறதே, அதற்குப் போய்விடலாமா' என்று தடுமாற்றம் ஏற்படுகிறது.
  • அடுத்தடுத்து வேலையையும் ஊரையும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அடுத்தது திருமணம். இங்குதான் தடுமாற்றத்தின் உச்சத்தைக் காண்கிறோம். படிப்பு, வேலை நிமித்தம் வெளியூரிலும் வெளிநாட்டிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள் "வாழ்க்கைப் பொறுப்பை' ஏற்க மிகுந்த தயக்கம் கொள்கின்றனர்.

கட்டுப்பாடு

  • திருமணம், குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றைச் சுமையாகக் கருதுகின்றனர். கைநிறையச் சம்பாதித்து, இஷ்டம்போல் செலவு செய்துவிட்டுத் திடீரென்று திருமணம் என்னும் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொள்வதா என்ற தடுமாற்றம் ஆண், பெண் இருபாலரையும் ஆட்டிவைக்கிறது.
  • பலர் முடிந்தவரை திருமணத்தைத் தள்ளிப் போடுகின்றனர். சிலர் மணவிழா, புது ஆடைகள், புது உறவுகள் என்ற மயக்கத்தில் திருமணம் செய்து கொண்டுவிட்டு, ஓர் ஆண்டு கழித்து, "நாம் தனியாகவே இருந்திருக்கலாமோ' என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இதில் ஆண்களை விடப் பெண்கள் அதிகம் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
  • காலம் எவ்வளவு மாறினாலும் நம் நாட்டில் ஆண்களின் மனப்போக்கு மாறவில்லை. குடும்ப பாரத்தைச் சுமக்க பெரும்பாலானோர் தயாராக இல்லை. பணம் சம்பாதித்துக் கொடுப்பதோடு அவர்களது பங்களிப்பு முடிந்துவிடுகிறது.
  • பெரும்பாலான பெண்களும், நல்ல பதவியில் நல்ல ஊதியம் வாங்கிவிட்டுத் திருமணம் என்றதும் வேலையை விட்டுவிடவேண்டியது கட்டாயமாகிறது. அதிலேயே சோர்ந்துவிடும் இவர்கள் மேலும் குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றைத் தனியே சமாளிக்க முடியாமல் விரக்தியடைந்து விடுகிறார்கள். இதனாலேயே பல
     திருமணங்கள் சீக்கிரத்திலேயே முறிந்து விடுகின்றன.

இயற்கை வளம்

  • இன்று பெரும்பாலான இளைஞர்களும் இளம் பெண்களும் திருமணத்தைத் தவிர்க்க முற்படுகிறார்கள். இது நன்மை பயக்குமா, தீமை பயக்குமா? கடும் வேகத்தில் பெருகும் மக்கள்தொகை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.
  • நிலம், நீர், காற்று போன்ற இயற்கை வளங்களின் தேவை குறையக்கூடும். வேலைவாய்ப்பின்மை குறையலாம். ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் சாராது சுயமாக வாழக் கூடும்.
  • இதனால், குடும்பம் என்னும் அமைப்பு முற்றிலும் காணாமல் போய் மேலைநாடுகளில் உள்ளது போன்ற சூழ்நிலை உருவாகலாம்.
  • திருமணத்தைத் தவிர்ப்பதென்றால், உணர்ச்சிகளுக்குக் கடிவாளம் போடவேண்டியிருக்கும்.
  • ஆன்மிகம், சமூக சேவை என்று ஏதாவது ஒரு பற்றினை ஏற்படுத்திக் கொண்டு அதனை ஒட்டி மிகவும் மனக் கட்டுப்பாட்டுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
  • வெளிநாடுகளில் சகோதர, சகோதரிகள் அல்லது நண்பர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழும் முறை உள்ளது. நம் நாட்டில் இம்முறை பெரிய அளவில் இல்லை.
  • இனி உருவானால் நல்லதுதான். ஆண்கள் தனியாக வாழ்வது சற்றே எளிது. பெண்களுக்கு நம் சமூகத்தில் பாதுகாப்பு குறைவு என்னும்போது பெண்கள் தனியாகவோ சேர்ந்தோ வாழ்வது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை.

சரி செய்யும் வழிமுறைகள்

  • இப்படி இளையதலைமுறை தடுமாறுவதை எப்படி சரி செய்யலாம்?
    • பெற்றோரும் வாரிசுகளும் உட்கார்ந்து பேசி, வாரிசுகளுக்குப் பிடித்த, குடும்பத்துக்கு ஏற்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்;
    • அவரவர் தகுதி, திறமை, குடும்பம் மற்றும் பொருளாதாரத் தேவை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அதற்குத் தகுந்த கல்வி, வேலையை அமைத்துக் கொள்ள வேண்டும்;
    • ஆண்களும், பெண்களும் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு கட்டம் என்பதை உணர்ந்து, தடுமாற்றமின்றி மகிழ்ச்சியோடு திருமண பந்தத்தில் நுழைய வேண்டும்; இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்;
    • பெண்களுக்கு வீட்டிலிருந்தே பொருளீட்டும் வகையில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் நல்லது. கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தால் பொறுப்புகளைப் பலரும் பகிர்ந்துகொள்ள, சிரமங்கள் குறையும்;
    • திருமணம் வேண்டாம் என முடிவெடுப்பவர்கள் அந்த முடிவில் உறுதியோடு இருக்க வேண்டும். குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். பெற்றோரின் துணையோடு அந்தக் குழந்தைகளை வளர்க்கலாம். வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட இது வழி வகுக்கும்.
  • எந்த முறையைத் தேர்ந்தெடுத்தாலும், இளைய தலைமுறையினர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒருமுறை சென்ற பாதையில் திரும்பி வருவது இயலாது.
  • ஒருமுறை தவறவிட்ட வாய்ப்பைப் திரும்பப் பெற முடியாது. ஒருமுறை தொலைத்த வாழ்க்கையை திரும்பக் கொண்டு வர முடியாது.
  • இதனை நன்குணர்ந்து, அந்த "ஒரு முறையை' நன்முறையில் தடுமாற்றமின்றித் தேர்ந்தெடுத்துச் செயல்பட்டால் வாழ்க்கை இனிதாகும்.

நன்றி: தினமணி (14-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories