TNPSC Thervupettagam

தடுமாறும் நேபாளம்

July 18 , 2024 178 days 205 0
  • நேபாளத்தைப் பொருத்தவரையில், அரசியல் மாற்றங்கள் புதிது ஒன்றும் அல்ல. 2008-இல் மன்னராட்சி முறை அகற்றப்பட்டு ஜனநாயகப் பாதைக்கு நேபாளம் திரும்பிய பின்னர் கடந்த 16 ஆண்டுகளில் 13 அரசுகள் மாறியிருக்கின்றன. எதிர்பார்த்ததைப் போலவே இப்போது மீண்டும் ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.
  • நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் மையம் (சிபிஎன்-எம்சி) தலைவரும், முன்னாள் கொரில்லா தலைவருமான புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைய, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவர் கட்க பிரசாத் சர்மா ஓலி 4-ஆவது முறையாகப் பிரதமராகியிருக்கிறார்.
  • 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் கே.பி.சர்மா ஓலியின் ஆதரவுடன் பிரசண்டா பிரதமரானபோதே அந்தக் கூட்டணி நீண்ட நாள்கள் நீடிக்காது என்பது அறிந்ததுதான். அப்போது நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவுபா பிரதமராகக் கூடாது என்பதற்காகவே, நாடாளுமன்றத்தில் வெறும் 32 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் பிரசண்டாவுக்கு ஆதரவளித்து அவர் பிரதமராகத் துணைநின்றார் சர்மா ஓலி. இப்போது அதே ஷேர் பகதூர் தேவுபாவுடன் கைகோத்து பிரதமராகியிருக்கிறார் அவர்.
  • நேபாளத்தில் எத்தனையோ கூட்டணிக் குழப்பங்களும், அரசியல் மாற்றங்களும் நடைபெற்றுள்ளன என்றாலும், 2022 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரங்கேறிய கூட்டணி மாற்றங்களுக்குக் காரணகர்த்தா தற்போது பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கும் பிரசண்டாதான். 2022 தேர்தலில் ஷேர் பகதூர் தேவுபாவின் நேபாளி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது நேபாளி காங்கிரஸுடன் பிரசண்டா கூட்டணி அமைத்திருந்தார்.
  • ஷேர் பகதூர் தேவுபாவும், பிரசண்டாவும் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள்; தேவுபா பிரதமர் ஆவார் எனக் கருதப்பட்ட நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், தேவுபாவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சர்மா ஓலியுடன் கைகோத்து புதிய கூட்டணியை உருவாக்கி 2022 டிசம்பரில் பிரதமரானார் பிரசண்டா. ஆனால், அந்தப் புதிய கூட்டணி மூன்று மாதங்களே நீடித்தது.
  • அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரசண்டா ஆதரவு தெரிவித்ததால், அவருக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றார் சர்மா ஓலி. பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தேவுபாவின் நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் வென்று ஆட்சியைத் தக்கவைத்தார் பிரசண்டா.
  • தேவுபாவுடன் பிரசண்டா புதுப்பித்த பழைய கூட்டணியும் சுமார் ஓராண்டே நீடித்தது. தேசிய சபை தலைவர் நியமன விவகாரத்தில் தேவுபாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2024 மார்ச்சில் கூட்டணியை முறித்துக்கொண்டு சர்மா ஓலியுடன் மீண்டும் கைகோத்தார் பிரசண்டா. இப்போது பல்வேறு விவகாரங்களில் சர்மா ஓலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் ஒருமுறை கூட்டணியில் பிளவு ஏற்பட்டு பிரதமர் பதவியை பிரசண்டா இழந்து புதிய பிரதமராகியிருக்கிறார் சர்மா ஓலி.
  • இப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில், முதல் ஒன்றரை ஆண்டு காலம் சர்மா ஓலியும், அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் ஷேர் பகதூர் தேவுபாவும் பிரதமராக இருப்பார்கள் என்பது இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒப்பந்தம். இந்த மூன்று ஆண்டுகளுக்குள் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடக்குமோ தெரியாது.
  • மீண்டும் பிரதமராகியிருக்கும் சர்மா ஓலிக்கும், சீன ஆதரவாளராக அறியப்படும் சர்மா ஓலி மூலம் இந்தியாவுக்கும் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. 2020-இல் சர்மா ஓலி பிரதமராக இருந்தபோதுதான் நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்தியப் பகுதிகளான லிம்பியதுரா, காலாபாணி, லிபுலேக் ஆகிய மூன்றும் நேபாளத்தின் பகுதிகள் என அந்நாடு புதிய வரைபடத்தை வெளியிட்டது. மக்கள் மத்தியிலும், கட்சியிலும் தனக்கு எதிராக எழுந்த அழுத்தத்தை சமாளிக்க இந்தப் பிரச்னையை பயன்படுத்திக் கொண்டார் சர்மா ஓலி.
  • இந்தியாவுடனான பழைய கசப்பை மறந்துவிட்டு நல்லுறவைப் பேணுவது, ஷேர் பகதூர் தேவுபாவை அனுசரித்துச் செல்வது ஆகியவை சர்மா ஓலி முன் இருக்கும் சவால்கள். சர்மா ஓலிக்குக் கடிவாளமாக இந்திய ஆதரவு நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தேவுபா இருப்பார் என்பது ஆறுதலான விஷயம். அதேபோல சர்மா ஓலி இந்த முறை நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவார் எனவும், இந்தியாவுடன் நட்புறவு பேணாமல் நேபாளம் வளர்ச்சியடைய முடியாது எனவும் சர்மா ஓலியின் சிபிஎன்-யுஎம்எல் கட்சி கூறியிருப்பது நல்ல மாற்றம்.
  • இந்தியா, நேபாளம் இடையிலான உறவு எல்லைப் பகிர்வு, பொருளாதாரத் தொடர்பு ஆகியவற்றுடன் மட்டுமன்றி, கலாசார ரீதியாகவும் பின்னிப் பிணைந்தது. நேபாளத்துக்கு ராணுவ உதவி உள்பட இந்தியா அளித்துவரும் உதவிகளும் ஏராளமானவை. இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தபோதெல்லாம் நேபாளம் இழந்ததுதான் அதிகம். இவை சர்மா ஓலி அறியாதவை அல்ல.
  • அதேபோல, நேபாளம் சீனாவின் அணுக்க நாடாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது. நேபாளத்துக்கு நாம் உறுதி அளித்திருக்கும் கட்டமைப்புப் பணிகளைத் தாமதமின்றி நிறைவேற்றுவது உடனடிக் கடமை!

நன்றி: தினமணி (18 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories