- கரோனா தீநுண்மி பாதிப்பு 2019-இல் தொடங்கி இந்தியா உள்பட உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கொள்ளை நோய்த்தொற்று பாதிப்புக்குப் பிந்தைய நாள்களில், பெரும் வல்லரசான அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் உலக அளவில் மிகவும் வலுவாக இருப்பதாகக் கருதப்படும் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் கடும் நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளது.
- உயர்ந்து வரும் பணவீக்கம் என்ற அசுரனின் தாக்குதல்தான் இதற்கு முக்கியமான காரணமாகும். பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அடுத்தடுத்து உயர்த்தின. இதனால், மக்கள் கடும் இறுக்கத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய வங்கிகள், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. நடந்துகொண்டிருக்கும் உலகளாவிய பணவியல் இறுக்கமான மாரத்தானில், பாதி தொலைவைதான் நாம் கடந்துள்ளோம். இன்னும் இலக்கை அடையவில்லை.
- பணவீக்கம் தணிந்து, கொள்கை விகிதங்கள் உச்சத்தை எட்டியபோதும், மத்திய வங்கிகள், விகித அதிகரிப்புக்குத் திரும்பியுள்ளது என்பதுதான் உண்மை.
- கடந்த வாரம், பாங்க் ஆஃப் இங்கிலாந்து, சந்தைகளை ஆச்சரியத்துக்குட்படுத்தியது. எதிர்பார்த்ததை விட 0.50 சதவீதம் வட்டி உயர்வை அந்த வங்கி அறிவித்தது.
- அதைத் தொடர்ந்து நார்வே, துருக்கி ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களின் வட்டி விகிதத்தை உயர்த்தின. இதில் துருக்கி மத்திய வங்கி 6.5 சதவீதம் உயர்வுடன் ஒரு படி மேலே சென்றது. இது கிட்டத்தட்ட அதன் நாணயத்தை முடக்கியது. சில நாள்களுக்கு முன்பு, ஐரோப்பிய மத்திய வங்கியும் ஜூலையில் மேலும் அதிகரிப்பு இருக்கும் என மறைமுகமாகத் தெரிவித்தது.
- இந்த நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பவல், வரவிருக்கும் மாதங்களில் கூடுதல் விகித உயர்வுகள் தேவை என்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது உலகளாவிய நிதி மற்றும் பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மோசமாக்கியுள்ளது.
- இதற்கிடையே, ஐரோப்பாவில், பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றிய கவலைகள் சிக்கலை மேலும் அதிகமாக்கியுள்ளது. இந்த நிலையில், சீனாவின் மத்திய வங்கி பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வட்டி விகிதங்களைக் குறைத்தாலும், விகிதக் குறைப்புகளின் அளவு மிகவும் சிறியதாகவே இருந்தது.
- இது முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மொத்தத்தில், மத்திய வங்கிகளின் நடவடிக்கை கடந்த நாட்களில் உலகளாவிய அளவில் நிதி மற்றும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
- இதற்கிடையே, 2023-2024-ஆம் ஆண்டு, உலகின் மிகப் பெரிய பொருளாதார மந்தநிலை ஆண்டாக இருக்கும் என பல மதிப்பீடுகள் கூறுகின்றன. எந்தவொரு நிதி சார்ந்த கொந்தளிப்பான, அதிரடியான முடிவுகள் உலகின் பிற பகுதிகளுக்கும் ஆபத்தானதாகவே அமையும்.
- அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித வழிகாட்டுதல், ஜூலை உயர்வு 75 புள்ளிகள் அல்லது 50 புள்ளிகளாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்து வரும் நாள்களில் நெருக்கடி இன்னும் அதிகமாவதற்கே வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
- இந்தச் சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூறுவது போல, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸýம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பணி பாதிதான் முடிந்துள்ளதாகவும், எம்பிசி இன்னும் விகித இறுக்கமான சுழற்சியில் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். வட்டி விகித உயர்வு என்பது மிகவும் அதீதமாக இருக்கக் கூடாது. பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான கூர்மையானஆயுதமாக இருக்க வேண்டும்.
- பணவீக்கத்துக்கு எதிரான இந்தப் போராட்டம், ஒருங்கிணைந்த மற்றும் ஆக்ரோஷமான கொள்கை முடிவுகள் வெற்றியைத் தருமா என்பது கேள்வி அல்ல; ஆனால், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே கவலை.
- உதாரணமாக, அமெரிக்க மத்திய வங்கியின் அளவுக்கதிகமான வட்டி விகித உயர்வுகள், ஆங்கிலத்தில் "ரிஸஷன்' என்று சொல்லப்படும் பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறியாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
- எந்தவொரு மத்திய வங்கியும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி பாதிப்பு சாத்தியத்தை முன்கூட்டியே உறுதிப்படுத்தத் தவறிவிட்டன.
- மேலும், தென்மேற்கு பருவமழை குறைவாக இருக்கும்பட்சத்தில் பயிர் சாகுபடி குறைவதற்கான வாய்ப்பை நிராகரிப்பதற்கில்லை. அது போலவே, காய்கறிகளின் விலை உயர்ந்து, உணவுப் பணவீக்க அபாயங்கள் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
- பருவமழை மற்றும் பயிர் உற்பத்தி ஆகியவை மிக முக்கியமானவை. ஏனெனில், அவை கிராமப்புற நுகர்வு மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது வளர்ச்சிக்கு முக்கியமானது.
- ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் தற்போதைய கொள்கையானது, உண்மையான வட்டி விகிதங்கள் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் நிலைகளை நெருங்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
- எனவே, எம்பிசியின் அடுத்த கொள்கை நடவடிக்கைகள் நன்கு சமநிலையில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி: தினமணி (03 – 07 – 2023)