TNPSC Thervupettagam

தண்டனைக்கு அப்பாற்பட்டவர்களா காவல் துறை உயரதிகாரிகள்

January 25 , 2024 215 days 195 0
  • திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் சரகக் காவல் உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சர்ச்சைக்குரிய காவல் துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள்கூட எடுக்கப்படுவதில்லை என்ற விமர்சனத்துக்கு இந்த உத்தரவு வலுசேர்க்கிறது.
  • 2023 மார்ச் 23 அன்று கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிலர், தங்கள் பற்கள் உடைக்கப்பட்டதாகவும் விதைப்பைகள் நசுக்கப்பட்டதாகவும் காணொளி மூலம் தெரிவித்தது, சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. வேறு சில வழக்குகளின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிலரும் இதேபோல் சித்ரவதைக்கு ஆளானதாகக் குற்றம்சாட்டினர்.
  • இதையடுத்து, திருநெல்வேலி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி அப்போதைய சேரன்மாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தலைமையில், பல்வீர் சிங் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போதைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா நேரடியாகச் சென்று விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. பின்னர், சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு..ஸ்டாலின், பல்வீர் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகச் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
  • இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நம்பிக்கை அளித்தன. ஆனால், தற்போது பல்வீர் சிங்கின் பணியிடைநீக்கத்தைத் தமிழ்நாடு அரசு ரத்துசெய்திருப்பது, முந்தைய நடவடிக்கைகளைக் கண்துடைப்பாகவே கருத வைக்கிறது. 2020இல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகனை அடித்துச் சித்ரவதை செய்து அவர்களுடைய மரணத்துக்குக் காரணமான காவலர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்ததுபோல, பல்வீர் சிங் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
  • கூடவே, கீழ்நிலைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு, ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டுகிறதோ என்னும் சந்தேகமும் எழுகிறது. ஏற்கெனவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தால் நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட அப்போதைய தென் மண்டல .ஜி.சைலேஷ்குமார் யாதவுக்கு அண்மையில் டிஜிபி பதவி உயர்வு வழங்கப்பட்டது.
  • மனித உரிமை மீறலில் ஈடுபடும் காவல் உயரதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதில் அரசுக்குத் தயக்கம் இருப்பதை இதுபோன்ற நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. குற்றம்சாட்டப்பட்ட பல்வீர் சிங் மீண்டும் பணிக்குத் திரும்பும்போது, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கிலிருந்து தப்பிக்க முயல மாட்டாரா?
  • புகாருக்கு ஆளாகும் காவல் துறை உயரதிகாரிகள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை, பணியிடைநீக்கத்தை ரத்துசெய்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் அரசு தீர்க்கமான ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். பணியிடைநீக்க விவகாரத்தில் அரசு கவனமில்லாமல் நடந்துகொண்டால், பின்னாளில் எந்த அதிகாரியும் மனித உரிமை மீறலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு உரிமம் தந்ததுபோல ஆகிவிடும் என்பதையும் உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories