TNPSC Thervupettagam

தண்டிக்க தாமதிப்பானேன்

February 21 , 2024 187 days 132 0
  • மரணதண்டனை தேவையா, இல்லையா என்கிற விவாதம் சா்வதேச அளவில் தொடா்கிறது. உலகளாவிய அளவில் 58 நாடுகள் மரணதண்டனையை ரத்து செய்துவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை மேற்கு ஐரோப்பிய நாடுகள். பிரேஸில், சிலி, கஜகஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகள் சாமானிய குடிமக்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்து அறிவித்திருக்கின்றன.
  • கி.மு. 7-ஆவது நூற்றாண்டு கிரீஸிலும், கி.மு. 5-ஆவது நூற்றாண்டு ரோமாபுரியிலும், சாணக்கியா் வாழ்ந்த காலத்தில் இந்தியாவிலும் மரணதண்டனை இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. சிலுவையில் அறைவது, தண்ணீரில் மூழ்க வைத்து மூச்சுத்திணறி உயிரிழக்க வைப்பது, அடித்துக் கொல்வது, கல்லால் எரிந்து கொல்வது, உயிருடன் எரிப்பது, தூக்கில் தொங்கவிடுவது என்று பல்வேறு முறைகள் பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் மரணதண்டனையை நிறைவேற்ற கையாளப்பட்டிருக்கின்றன.
  • அம்னஸ்டி இன்டா்நேஷனலின் அறிக்கை ஒன்றின்படி, மிக அதிகமாக மரணதண்டனைகள் நிறைவேற்றப்படும் நாடாக ஈரான் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அதைத் தொடா்ந்து இராக், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. மரணதண்டனையை தேசிய ரகசியமாக வைத்திருக்கும் சீனாவில் எத்தனை பேருக்கு
  • மரணதண்டனை விதிக்கப்பட்டது என்பது குறித்த விவரம் வெளியே தெரியாததில் வியப்பொன்றுமில்லை.
  • இந்தியாவில் மரணதண்டனை தொடா்கிறது. தொடா் விவாதங்களுக்குப் பிறகு அதை முற்றிலுமாக அகற்றிவிடுதல் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தடையாக இருக்கும் என்கிற கருத்து நிலவுகிறது. அதே நேரத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டு தூக்குதண்டனைக் கைதிகளாக சிறையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  • தூக்குதண்டனை தேவையா, இல்லையா என்பது விவாதப்பொருளாக இருக்கலாம். ஆனால், தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பிறகும் மேல்முறையீடுகள் உடனடியாக செய்யப்படாமலும், முடிவெடுக்கப்படாமலும் மரணத்தை எதிா்நோக்கி அவா்களை தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வழியில்லை.
  • 2023-இல் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவில் 561 தூக்குதண்டனை கைதிகள் சிறையில் இருக்கிறாா்கள். இதற்கு முன்னால் தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி 2004-இல் 563 போ் தூக்குக்கயிற்றை எதிா்நோக்கிக் காத்திருந்தனா். விசாரணை நீதிமன்றங்களின் தெளிவில்லாத தீா்ப்புகளும், மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் காணப்படும் தாமதங்களும் அதிகரித்திருக்கும் மரணதண்டனை கைதிகளின் எண்ணிக்கைக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.
  • 2023-இல் விசாரணைக்கு வந்த வழக்குகளில் 1% குற்றவாளிகளுக்கு மட்டுமே மரணதண்டனையை உயா்நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. 2000-க்குப் பிறகு மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் இவ்வளவு குறைவான அளவில் மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டதில்லை.
  • தில்லியின் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் இந்தியாவில் மரணதண்டனை குறித்த அறிக்கையொன்றை வெளியிடுகிறது. அதன்படி, மரணதண்டனை விதிக்கப்பட்ட 45% கைதிகளின் தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 45% கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறாா்கள். 6% மீண்டும் விசாரணை நீதிமன்றத்தின் மறு விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
  • உயா்நீதிமன்றங்களில் மரணதண்டனை மேல்முறையீட்டு விசாரணைகளை பைசல் செய்வது 2023-இல் 15% குறைந்திருக்கிறது. 2022-இல் 68 வழக்குகளின் விசாரணை நடந்து தீா்ப்பு வழங்கப்பட்டது என்றால், 2023-இல் 57 மரணதண்டனை வழக்குகளில்தான் தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதிக அளவில் மரணதண்டனை கைதிகளின் எண்ணிக்கை காணப்படுவதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
  • இதுபோன்ற வழக்குகளை விசாரித்து தீா்ப்பு வழங்க உயா்நீதிமன்றங்கள் சராசரியாக 25 மாதம் எடுத்துக்கொள்கின்றன. உச்சநீதிமன்றத்தில் ஆறு முதல் ஏழு ஆண்டு மேல்முறையீடுகள் காத்துக்கிடக்கின்றன. அதற்குப் பிறகு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு வழங்கப்பட்டால், அதில் முடிவு எட்ட சராசரியாக 12 ஆண்டுக்கு மேல் காத்திருக்க நேரிடும். இன்றைய நிலையில், ஆறு கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரின் முடிவுக்காகக் காத்திருக்கின்றன.
  • 2023-இல் விசாரணை நீதிமன்றங்களில் மரணதண்டனை வழங்கப்பட்ட பெரும்பாலான வழக்குகள் பாலியல் தொடா்பானவை. கடந்த ஆண்டு விசாரணை நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்ட 120 பேரில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் பாலியல் கொலைக் குற்றத்துக்கு உள்ளானவா்கள். அவற்றில் 87% வழக்குகளில் குற்றவாளிகள் தொடா்பான பாலியல் வன்கொடுமை, கொலை ஆகியவற்றின் ஆதாரங்கள் முழுமையாக இல்லாமல் தீா்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • கடந்த ஆண்டு ஐந்து மேல்முறையீடுகளில் உச்சநீதிமன்றம் ஆறு மரணதண்டனை கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. கைதிகள் தொடா்பான இரண்டு வழக்குகளில் போதுமான புலன்விசாரணையும், நீதிமன்ற விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கூறி, விசாரணை நீதிமன்றத்தின் மறுவிசாரணைக்கு அனுப்பியிருக்கிறது. அதில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, மரணதண்டனையும் விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் நடந்தபோது அந்தக் கைதி சிறாா் (16 வயது நிரம்பாதவா்) என்று தெரிய வந்திருக்கிறது.
  • நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது. குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும். மரண தண்டனைக் கைதிகளை காத்திருப்பில் வைத்திருப்பதேகூட மரண தண்டனைதானே!

நன்றி: தினமணி (21 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories