TNPSC Thervupettagam

தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

August 12 , 2023 522 days 354 0

புதுடெல்லி

  • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி நீரை திறந்துவிடக்கோரிய‌ தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுத்ததால் தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டுள்ளார்.
  • கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பொழிந்தது. போதிய அளவில் மழை பொழியாததால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முறையாக வழங்கவில்லை. இதனால் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம்எழுதினார். அதில், ‘உச்ச நீதிமன்றஇறுதி உத்தரவின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறந்துவிட, கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினார். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் ஷெகாவத்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
  • இந்நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற‌து.
  • இதில் தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள், கேரள மாநில நீர்வளத் துறை அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டனர். கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்வளத் துறை அதிகாரிகள் இணைய வழியாக பங்கேற்றனர்.
  • இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத் துறை கூடுதல் செயலர் சந்தீப் சக்சேனா, ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்கவேண்டிய காவிரி நீரை திறந்துவிடவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் முறையாக சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் வழங்க வேண்டிய நீரில் 37.9 டிஎம்சி இன்னும் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள இந்த நீரை உடனடியாக திறக்க வேண்டும். கர்நாடக அரசு தினசரி எவ்வளவு நீரை திறக்க வேண்டும் எனஆணையம் உத்தரவிட வேண்டும்'' என வலியுறுத்தினார்.
  • இதற்கு கர்நாடக நீர்வளத் துறை செயலர் ராகேஷ் சிங் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் அவர், ‘‘கர்நாடகாவில் குறைந்த மழைப்பொழிவால் மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த‌ விவசாயிகளின் பாசனத்துக்கு தேவையான நீரை இன்னும் திறந்துவிடவில்லை. எங்களது அணைகளின் நீர் இருப்பை பொருத்து, தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
  • இதனால் அதிருப்தி அடைந்த தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் ஆணையக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
  • இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழக நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா கூறியதாவது: காவிரியில் தமிழகத்துக்கு கடந்த ஆக.9-ம் தேதி வரை வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நிலுவை நீரை உடனடியாக‌ திறந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தோம். எங்களது கோரிக்கையை க‌ர்நாடக அரசு ஏற்கவில்லை. இனிமேல் தினசரி எவ்வளவு நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு ஆணையம் வழிகாட்டுதல் வழங்க வேண்டும் வலியுறுத்தினோம். அதையும் கர்நாடகா ஏற்க மறுத்தது. கர்நாடக அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசினர். அதனால் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம். தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைக்க எங்களுக்கு அனுமதிவழங்கப்படவில்லை’’ என்றார்.

ஆணையம் உத்தரவு

  • இந்த சூழலில், ஆணையத்தின் கூட்டம் மாலை 6.30 மணி வரை நடந்தது. கூட்டத்தின் இறுதியில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும். ஆக.9-ம் தேதி வரை நிலுவையில் உள்ள நீரையும் திறந்துவிட வேண்டும். அந்த வகையில், பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு திறக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

  • இந்நிலையில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஒவ்வொரு மாதமும் கர்நாடகா காவிரியில் எவ்வளவு நீர் திறக்க வேண்டும் என்றும், பிலிகுண்டுலுவில் அது அளவீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. அதன்படி, 2023 ஜூன் 1-ம் தேதி முதல் ஆக.11 வரை கர்நாடகா 53.77 டிஎம்சி தமிழகத்துக்கு வழங்கி இருக்க வேண்டும்.
  • ஆனால், வெறும் 15.80 டிஎம்சி மட்டுமே வழங்கியுள்ளது. ஆக, நமக்கு பற்றாக்குறை 37.97 டிஎம்சி. நமது வற்புறுத்தலுக்கு இணங்கி கடந்த 10-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்குமுறை கமிட்டி கூட்டத்தில் விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீரை 15 நாட்களுக்கு விடுவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 11-ம் தேதி (நேற்று) நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இது குறித்து 3 மணி நேரத்துக்கு மேல் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் தேவை கடுமையாக வலியுறுத்தப்பட்டது.
  • ஆனால், கர்நாடகா சார்பில் வழக்கம்போல தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விநாடிக்கு 8,000 கனஅடி மட்டுமே, அதுவும் ஆக.22 வரைதான் தர முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
  • கர்நாடகாவில் இருக்கும் 4 அணைகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 114.57 டிஎம்சியில் 93.54 டிஎம்சி தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அதாவது கர்நாடகாவின் மொத்த இருப்பில் 82 சதவீதம் தண்ணீர் கர்நாடக வசம் இருப்பில் இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் போவதை தவிர தமிழக அரசுக்கு வேறு வழி இல்லை. விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, உரிய நீர் பெறப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: இந்து தமிழ் திசை (12  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories