TNPSC Thervupettagam

தண்ணீர்ப் பற்றாக்குறை தவிர்ப்பது எப்படி

March 22 , 2024 301 days 386 0
  • மார்ச் 22ஆம் தேதி உலகத் தண்ணீா் நாள். ஆனால், தண்ணீா் பற்றிச் சமீப காலமாக வரும் தகவல்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன. தண்ணீருக்காகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் 2001ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். தென் ஆப்ரிக்காவின் தலைநகரங்களில் ஒன்றான கேப்டவுனில் 2018இல் நிகழ்ந்ததுபோல, தற்போது பெங்களூருவில் வரலாறு காணாத தண்ணீா்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் உலகத்திலுள்ள மூன்றில் இரண்டு பகுதி மக்கள் கடுமையான தண்ணீா்ப் பஞ்சத்தை சந்திப்பார்கள் என்கிறது உலக உணவு - விவசாய அமைப்பு. இப்பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

நீர்த் தேவையில் மாற்றங்கள்

  • மத்திய நீா்வள அமைச்சகத்தால் வெளியிடப்படும் தரவுகளின்படி, ஓா் ஆண்டில் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் நீரின் அளவு 1,123 பிசிஎம் (billion cubic meter). ஆனால், அதிகரித்துவரும் மக்கள்தொகையாலும், விவசாயம், தொழில் துறைகளின் அதிவேக வளர்ச்சியாலும், தண்ணீரின் தேவை பல மடங்கு உயா்ந்துள்ளது. உதாரணமாக, மத்திய நீா் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 2000இல் 634 பிசிஎம் ஆக இருந்த, நாட்டின் மொத்த நீா்த் தேவையானது, 2025இல் 1,093 பிசிஎம்மாகவும், 2050இல் 1,447 பிசிஎம்மாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மொத்தத் தண்ணீா்த் தேவையானது, தண்ணீா் இருப்பைவிட அதிகரிக்கக்கூடும்.
  • தண்ணீா்ப் பஞ்சத்தை மதிப்பிடுவதற்காக உலகளவில் பயன்படுத்தப்படும் அளவுகோலின்படி, எங்கெல்லாம் தனிநபா் பயன்பாட்டுக்காக ஓர் ஆண்டில் கிடைக்கின்ற தண்ணீர் 1,700 கனமீட்டர் (Cubic meter) அளவுக்குக் குறைவாக உள்ளதோ, அங்கே தண்ணீா்ப் பஞ்சம் உள்ளதாகக் கூறலாம். இதன்படி, இந்தியாவில் தற்போது ஏறக்குறைய 76% மக்கள் தண்ணீா்ப் பஞ்சத்தில் உள்ளார்கள். மத்திய நீா் ஆணையத்தால் மொத்தமாக வகைப்படுத்தப்பட்டுள்ள 20 பெரிய ஆற்றுப் படுகைகளில் (river basin), வெறும் ஒன்பது படுகைகளில் வசிப்பவா்கள் மட்டுமே தற்போது தண்ணீா்ப் பஞ்சம் இல்லாமல் வாழ்கிறார்கள்.
  • நாட்டின் தண்ணீர்ப் பயன்பாட்டிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போது மொத்தமாகப் பயன்படுத்தப்படும் 1,093 பிசிஎம் நீரில், ஏறக்குறைய 84% விவசாயத்துக்கும், 16% வீடு, தொழிற்சாலை, இதர துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2050இல் நீரின் மொத்தத் தேவையானது 1,447 பிசிஎம்மாக உயரலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. விவசாயத் துறையின் தேவை 910 பிசிஎம்மிலிருந்து 1,072 பிசிஎம்மாகவும், மற்ற துறைகளின் தேவை 183-லிருந்து 375 பிசிஎம்மாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மொத்த நீர்ப் பயன்பாட்டில், விவசாயத் துறையின் பயன்பாடு 74% ஆகக் குறையும், மற்ற துறைகளின் பயன்பாடு 26% ஆக அதிகரிக்கும். இத்தரவுகள் தண்ணீரின் தேவை பன்மடங்கு அதிகரிக்கப் போவதாக எச்சரிக்கின்றன.

செய்ய வேண்டியவை

  • தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க இரண்டு வகையான தீர்வுகள்முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, நீர் ஆதாரத்தைப் பெருக்குவது. மற்றொன்று, நீரைச் சேமிப்பது. அணைகள் கட்டியும், புதிய குளங்களை வெட்டியும், ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தும்நீர் இருப்பை உயர்த்தலாம் எனச் சிலர் கருதுகிறார்கள். ஆனால், தண்ணீரின் கொள்ளளவைநினைத்தபோதெல்லாம் உயர்த்த முடியாது. ஒரு நாட்டின் - பயன்படுத்தக்கூடிய மொத்தத் தண்ணீரின் அளவு (water potential) வரையறுக்கப்பட்டஒன்று. அதை மீறி அணைகள் கட்டினால், சுற்றுச்சூழல்பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடும். நமதுநாட்டின் பயன்படுத்தக்கூடிய மொத்த நீர்ப்பாசனஅளவு (Irrigation potential) 13.99 கோடிஹெக்டேர்கள், இவற்றில் ஏறக்குறைய 90%உருவாக்கப்பட்டுவிட்டன. எனவே, புதிய நீராதாரத்தைப் பெருக்குவது கடினம். இதன் காரணமாக, நீரின் தேவையைக் குறைத்து, நீரின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
  • நீர் ஒரு விலையில்லாப் பொருள் (free good) என்ற கருத்து நம் நாட்டில் நிலவிவருகிறது. இதனால், நீர் பயன்பாட்டுத் திறன் (water use efficiency) மிகவும் குறைவாக உள்ளது. நீருக்கு விலையை நிர்ணயிப்பதால் மட்டும், நீர்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றாலும், குறைந்தபட்ச அளவீட்டு விலையை (volumetric pricing) நிர்ணயிப்பதன் மூலம், இதன் பயன்பாட்டுத் திறனை அதிகரித்து, நீரைச் சேமிக்க முடியும்.
  • ஏறக்குறைய 85% நீரைப் பயன்படுத்தும் விவசாயத் துறையில், நீரைச் சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும். தற்போது நடைமுறையில் இருந்துவரும் பழங்கால வாய்க்கால் பாசன முறையில் நீர் பயன்பாட்டுத் திறன் வெறும் 35-40% மட்டுமே. வாய்க்கால் மூலம் பயிர்களுக்கு நீரைக் கொடுப்பதால் ஏறக்குறைய 60% நீர் விரயமாகிறது. ஆனால், சொட்டு நீர் (drip irrigation), தெளிப்பு நீர் (sprinkler irrigation) முறைகளின் மூலமாகக் குறைந்தபட்சம் 50% நீரைச் சேமிக்க முடியும். 40-60%வரை அதிக மகசூல் கிடைக்கும். குறைந்த சாகுபடிச் செலவுடன் மின்சாரத்தையும் சேமிக்க முடியும். நுண் நீர்ப்பாசனத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முறைகளைக் கண்டறிவதற்காக மத்திய விவசாய அமைச்சகத்தால் 2004இல் அமைக்கப்பட்ட குழு (Report of the task force on micro irrigation), குறைந்தது 85 பயிர்களைஇந்நீர்ப்பாசன முறையின்கீழ் பயிர்செய்ய முடியும் என்றும், ஏறக்குறைய 7 கோடி ஹெக்டேர் இப்பாசன முறைக்குச் சாத்தியமான பரப்பளவாக இருப்பதாகவும் கணக்கிட்டுள்ளது. தற்போது ஏறக்குறைய 1.5 கோடி ஹெக்டேர் மட்டுமே இப்பாசன முறையைப் பயன்படுத்திவருகின்றன.
  • கால்வாய்ப் பாசனம் மூலமாக ஏறக்குறைய 1.9 கோடி ஹெக்டேர் பரப்பளவில் தற்போது பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீர்ப் பாசனத்துக்கான விலைக் குழு (Report of the committee on pricing of irrigation water) கால்வாய்ப் பாசனத்தில் நீர் பயன்பாட்டுத்திறன் மிகக் குறைவு எனக் கூறியுள்ளது. விவசாயிகளுக்குப் பொருந்தக்கூடிய நீர்ப்பாசன விலையை நிர்ணயித்து, நீர் எப்படி, எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கணக்கு முறையை (water accounting) அறிமுகப்படுத்தியதால், மகாராஷ்டிர மாநிலம் கால்வாய் நீர்ப் பயன்பாட்டுத் திறனை அதிகரித்துள்ளது. இதே போன்று நீர்க் கணக்கு முறையை நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும்.
  • தற்போதுள்ள மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவான 98 மில்லியன் ஹெக்டேரில், நிலத்தடி நீர்ப்பாசனத்தின் பங்கு ஏறக்குறைய 68%. ஆனால், நிலத்தடி நீர், கட்டுப்பாடில்லாமல் உறிஞ்சப்படுவதால் அதன் மட்டம் வேகமாகக் குறைவதோடு, சுற்றுச்சூழல்சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. நிலத்தடி நீர் திறனற்ற முறையில் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம், மாநில அரசுகளால் வழங்கப்படும் இலவச மின்சாரம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனவே, குறு - சிறு விவசாயிகள் தவிர, மற்றவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை முறைப்படுத்துவது நல்லது.
  • நெல், கரும்பு, வாழை, கோதுமை, காய்கறிகள் போன்ற அதிக நீர் குடிக்கும் பயிர்களின் பரப்பளவு இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இதன் சாகுபடிப் பரப்பளவைக் கட்டுப்படுத்துவதற்கு, குறைந்தபட்ச ஆதார விலைக் கொள்கைகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். வேகமாக நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றங்கள், மழை அளவைக் குறைத்து, தண்ணீர்ப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. தண்ணீர்த் தட்டுப்பாடு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வறுமையை அதிகரிக்கும். அரசு சுதாரிக்க வேண்டிய தருணம் இது!

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories