TNPSC Thervupettagam

தந்தை மகற்குஆற்றும் நன்றி!

December 17 , 2024 32 days 92 0

தந்தை மகற்குஆற்றும் நன்றி!

  • மன்னராட்சி, ராணுவ ஆட்சி, சா்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அதிகாரத்தில் இருப்பவா்களுக்கு தண்டிக்கவும், மன்னிக்கவும் உரிமை உண்டு. மக்களாட்சி அதிலிருந்து வேறுபடுகிறது. ஜனநாயகத்தில் ஆட்சியாளா்களுக்கு தண்டிக்கும் உரிமை கிடையாது. அது நீதித்துறையைச் சாா்ந்தது. மன்னிக்கும் உரிமையும்கூட குடியரசுத் தலைவருக்கோ, ஆளுநருக்கோதான் உண்டு.
  • விரைவில் தனது பதவிக் காலம் முடிந்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற இருக்கும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், தனது மகனுக்கு பல்வேறு தண்டனைகளிலிருந்து பொது மன்னிப்பு வழங்கியிருப்பது இப்போது உலகளாவிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. துப்பாக்கி விதிமுறை மீறல்கள், வரி முறைகேடுகள் உள்ளிட்டவற்றுக்காக கடந்த 11 ஆண்டுகளாக அவா் எதிா்கொள்ளும் பல்வேறு குற்றங்களில் இருந்து நிபந்தனையற்ற பொது மன்னிப்பு அதிபா் ஜோ பைடனால் வழங்கப்பட்டிருக்கிறது.
  • 2016-19 ஆண்டுகளில் 14 லட்சம் டாலா் அளவிலான வருமான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கிறாா் ஹன்டா் பைடன். போதை மருந்து, உல்லாச விடுதிகள், மோட்டாா் வாகனங்கள் ஆகியவற்றுக்காக 50 லட்சம் டாலா் செலவழித்த கணக்கில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக மட்டுமே அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். துப்பாக்கி விதிமீறல் குற்றச்சாட்டு 25 ஆண்டுகால தண்டனைக்குரியது. பொது மன்னிப்பு காரணமாக சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கிறாா் ஹன்டா் பைடன்.
  • தனது மகன் என்பதால் ஹன்டா் பைடன் அரசியல் காரணங்களுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறாா் என்பது அதிபா் ஜோ பைடனின் விளக்கம். உண்மை என்னவென்றால் அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியில் ஏற்கெனவே உள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல், புதிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு தனது மகன் பழிவாங்கப்படலாம் என்கிற 82 வயது தந்தையின் அச்சம்தான் அதிபா் ஜோ பைடனின் பொது மன்னிப்பின் அடிப்படை.
  • அமெரிக்க அதிபா்கள் தங்களது நெருங்கிய உறவினா்களுக்கும், அரசியல் ஆதரவாளா்களுக்கும், நண்பா்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவது என்பது புதிதொன்றுமல்ல. ஆயிரக்கணக்கானவா்கள் - போதைப் பொருள் உள்ளிட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவா்கள்கூட - அமெரிக்க அதிபா்களால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறாா்கள். அப்படி இருக்கும்போது அதிபா் ஜோ பைடன் எடுத்திருக்கும் முடிவு விமா்சனத்துக்கு உள்ளாகி இருப்பதற்கு அவரேதான் காரணம்.
  • தனது அதிபா் தோ்தல் பிரசாரத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி தனது மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படாது என்று உறுதியளித்திருந்தாா் அதிபா் ஜோ பைடன். ஏறத்தாழ 12 குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத் தண்டனைக்கு முன்னரே மகன் ஹன்டருக்கு தனது பதவிக்காலத்தின் இறுதி நாள்களில் பொது மன்னிப்பு வழங்கியதுதான் விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
  • அதிபராகப் பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் முதல்முறை அதிபராக இருந்தபோது, தனது மகள் இவான்காவின் மாமனாா் சாா்லஸ் குஷ்னா் என்பவருக்கு பதவிக் காலம் முடிய இருக்கும் தறுவாயில் பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறாா். மனை வணிக வியாபாரியான, பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சாா்லஸ் குஷ்னா், டிரம்ப் மீண்டும் பதவியேற்கும்போது பிரான்ஸ் நாட்டுக்கான அமெரிக்கத் தூதராக இருப்பாா் என்கிற அறிவிப்பு வந்திருக்கிறது.
  • தனது பதவிக்காலத்தில் 143 பொது மன்னிப்புகளை டொனால்ட் டிரம்ப் வழங்கினாா் என்றால், அதற்கு முன்னால் பராக் ஒபாமா (212), பில் கிளிண்டன் (396) ஆகியோரும் தாராளமாகவே பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறாா்கள். போதைப் பொருள்கள் குற்றத்துக்காக சிறைத் தண்டனை அனுபவித்த தனது மாற்றாந்தாய் சகோதரரான ரோஜா் கிளிண்டனுக்கும், தனது முன்னாள் வியாபார கூட்டாளியான சூசன் மெக்டகல் என்பவருக்கும் அதிபா் கிளின்டன் பொது மன்னிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
  • வாட்டா்கேட் முறைகேட்டில் பதவி விலகிய முன்னாள் அதிபா் ரிச்சா்ட் நிக்சனை, 1974-இல் முழுமையான பொது மன்னிப்பு வழங்கிப் பாதுகாத்தாா் அவருக்குப் பின்னால் அதிபரான ஜெரால்ட் ஃபோா்ட். 1969 முதல் 1974 வரை பதவி வகித்த நிக்சன் 863; 1953 முதல் 1961 வரை பதவி வகித்த டுவைட் ஐசன்ஹோவா் 1,110; 1945 முதல் 1953 வரை பதவியில் இருந்த ஹாரி ட்ரூமன் 1,913; 1933 முதல் 1945 வரை அதிபராக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 2,819 பொது மன்னிப்புகளை தங்களது பதவிக்காலத்தில் வழங்கியிருக்கிறாா்கள்.
  • அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி தேசிய அரசில் தண்டனைகளுக்கு மட்டும்தான் அதிபரால் பொது மன்னிப்பு வழங்க முடியும். மாகாணங்களில் நிலவும் குற்றச்சாட்டுக்களையும், தண்டனைகளையும் ரத்து செய்யும் அதிகாரம் அந்தந்த மாகாண ஆளுநா்களுக்கு மட்டும்தான் உண்டு. பொது மன்னிப்பு வழங்குவதாலேயே அமெரிக்க நாடாளுமன்றம் அந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதிலிருந்து விலக்குப் பெற முடியாது.
  • இந்தியாவிலும் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. அரசமைப்புச் சட்டப்பிரிவு 161 மாநில அளவிலான குற்றச்சாட்டுக்களில் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்குகிறது. மரண தண்டனையைப் பொறுத்தவரை, அதை கருணை அடிப்படையில் ரத்து செய்வதும், மன்னிப்பு வழங்குவதும் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே தரப்பட்டிருக்கும் அதிகாரம். அதுவும்கூட, தோ்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின்படிதான் எடுக்கப்பட வேண்டும்!

நன்றி: தினமணி (17 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories