TNPSC Thervupettagam

தனி ஒருவன்!

July 26 , 2024 174 days 156 0
  • ஒலிம்பிக்கில் இனியும் ஒருவர் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸின் சாதனையைத் தகர்ப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒலிம்பிக் வரலாற்றில் நீண்ட நாள்களுக்கு அவருடைய பெயர் நீடித்து நிலைத்திருக்கும். அதற்குக் காரணம், தனியொருவனாக அவர் மட்டுமே ஒலிம்பிக்கில் வென்ற 28 பதக்கங்கள் என்கிற மகத்தான சாதனைதான்.
  • சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு கவனச் சிதறல் மற்றும் மிகை இயக்க நிலை (ஏடிஎச்டி) குறைபாடு இருக்கும் செய்தி பரவலாகப் பேசப்பட்டது அல்லவா? அது போன்ற ஒரு குறைபாடு உள்ளவர்தான் மைக்கேல் பெல்ப்ஸ். சிறு வயதில் மைக்கேலின் நிலை கண்டு நிலைகுலைந்து போனவர்தான் அவருடைய தாய் டெபோரா.
  • ஆனால், சிறந்தப் பயிற்சியும் சரியான வழிகாட்டலும் எந்தக் குறைபாடுடைய குழந்தையாலும் சாதிக்க முடியும் என்கிற முன் உதாராணமாகிக் காட்டினார் மைக்கேல் பெல்ப்ஸ். சிறு வயதில் ஊரே ஒதுக்கித் தள்ளிய மைக்கேல் பெல்ப்ஸை ஒலிம்பிக் வரலாற்றில் ஒப்பற்ற நாயகனாக்கியது, அவருடைய பயிற்சியாளர் பாப் போவ்மன்.
  • மைக்கேலை சிறிது சிறிதாகச் செதுக்குவதில் அவ்வளவு ஈடுபாடு காட்டினார் பாப் போவ்மன். அந்த விடாமுயற்சியால், 10 - 15 வயதுக்குள் அமெரிக்காவில் தேசிய அளவில் பல வெற்றிகளைப் பெற்று சாதனை மேல் சாதனைகளைப் படைத்தார் மைக்கேல் பெல்ப்ஸ்.
  • மைக்கேலின் சிறு வெற்றிகூட தலைகேறாமலும் பார்த்துக் கொண்டார் போவ்மன். ‘அடுத்து... அடுத்து...’ என்று மைக்கேல்லை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். மைக்கேலும் நீச்சலில் புதிய புதிய நுணுக்கங்களைத் தேடித்தேடிக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். எப்போதும் தீவிரப் பயிற்சியில் இருந்தார். இவற்றையெல்லாம் விடாப்பிடியாகப் பின்தொடர்ந்த மைக்கேல், 19ஆவது வயதில் நீச்சலில் உச்சம் தொட்டார்.
  • ஆம், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நீச்சலில் பல்வேறு பிரிவுகளில் முதன் முறையாகப் பங்கேற்று 6 தங்கம், 2 வெண்கலம் என 8 பதக்கங்களை அள்ளி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் மைக்கேல் பெல்ப்ஸ். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் அவருடைய வெற்றிகளுக்கு மகுடமானது.
  • அப்போது அவர் பங்கேற்ற 8 நீச்சல் பிரிவுகளிலும் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகளையே தலைகீழாகப் புரட்டிப் போட்டார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கம், 2 வெள்ளி என 6 பதக்கங்களைப் பெற்று தன்னுடைய வெற்றிப் பதக்க எண்ணிக்கையில் புதிய உச்சத்தைத் தொட்டார். 2016 ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் 5 தங்கம், ஒரு வெள்ளி என 6 பதக்கங்களை வென்றார். அதோடு ஒலிம்பிக் போட்டிகளுக்கு ‘பை பை’ சொன்னார்.
  • 2004 முதல் 2016 வரை பங்கேற்ற ஒலிம்பிக்கில் மொத்தமாக 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்று, ஒலிம்பிக்கில் அதிகப் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளின் பட்டியலில் முதல்வனாக நீடித்து வருகிறார் மைக்கேல் பெல்ப்ஸ்.
  • நான்கு ஒலிம்பிக்கிலும் மைக்கேல் பெல்ப்ஸ் பங்கேற்ற எல்லாப் போட்டிகளிலும் பதக்கம் வென்றவர் என்பது இன்னொரு தனிச் சிறப்பு. இதுபோன்ற ஒரு சிறப்பை வேறு எந்த வீரருமே பெற்றதில்லை. இனியும் ஒருவர் பெறுவாரா என்கிற கேள்விக்கு விடையளிப்பதும் சுலபமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories