TNPSC Thervupettagam

தனித்துவ அடையாளங்கள்

September 20 , 2024 68 days 117 0

தனித்துவ அடையாளங்கள்

செங்கல்:

  • சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த முதல் தொல்பொருள் செங்கற்கள்தான். சுடப்பட்ட, நவீன வடிவிலான இந்தச் செங்கற்கள் அனைத்தும் ஒரே அளவில் கிடைத்தன. கிட்டத்தட்ட அரையடி நீளம், அதில் பாதி அகலம், அதிலும் பாதித் தடிமனை இவை கொண்டிருந்தன. சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த பகுதி முழுவதும் இதுபோன்ற செங்கற்களே கிடைத்தன. எனவே, அவை ஒரு குழுவால் தரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பெருங்குளம்:

  • மொகஞ்சதாரோவில் மிகப் பெரிய குளம் ஒன்று இருந்திருக்கிறது. உடை மாற்றும் இடங்கள், படிக்கட்டுகள், கரைப்பகுதிகள் ஆகியவை இதில் உண்டு. சிந்துவெளி நாகரிகத்திலும், பண்பாட்டிலும் நீர் முதன்மை இடம் பிடித்ததற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சான்று. திராவிடச் சடங்குகள் நீரை மையமாகக் கொண்டு நடப்பதை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் பெருங்குளம் உருவாக்கப்பட்டதன் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

சிந்துவெளி முத்திரைகள்:

  • சிந்துவெளி முத்திரைகள் எனப்படுபவை மாக்கல்லால் (Soapstone) செய்யப்பட்ட சிறிய அளவிலான அடையாளச் சின்னங்கள். காளை, யானை, காண்டாமிருகம் போன்ற உயிரினங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலிருக்கும் குறியீடுகளை இன்னும் வாசிக்க இயலவில்லை. இந்த முத்திரைகள் அடையாள அட்டை போலவோ, பெயர் தாங்கிய அடையாளங்களாகவோ பயன்பட்டிருக்க வேண்டும்.

பூசாரி - அரசர் சிற்பம்:

  • மொகஞ்சதாரோவில் கிடைத்த அரிதான ஆண் கற்சிலைகளில் ஒன்று பூசாரி-அரசர் சிற்பம். மூவிலை/மலர் அச்சு பதிக்கப்பட்ட துணியை அவர் போர்த்தியிருக்கிறார். திருத்தப்பட்ட தாடியுடன் தலையில் நெற்றிப்பட்டம் ஒன்றையும், கையில் அதேபோன்ற நகையையும் அவர் அணிந்திருக்கிறார். சிந்துவெளியில் அரசர்கள் போன்ற ஒற்றைத் தலைவர்கள் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்பதால், இவர் தலைமைப் பூசாரியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நடன மங்கைச் சிலை:

  • சிந்துவெளியில் கிடைத்த வெண்கலத்தால் செய்யப்பட்ட நடன மங்கைச் சிலை சிறியது என்றாலும் தனித்துவமானது. உலோகச் சிலை வார்ப்பில் சிந்துவெளி மக்கள் பெற்றிருந்த திறனுக்கு இந்தச் சிலை சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் பெண் சிலை ஒல்லியாக, தலையலங்காரம் செய்யப்பட்டு, கழுத்தணி, கை முழுக்க வளையல்களுடன் உள்ளது. சிந்துவெளியின் கலை வெளிப்பாட்டுக்கு இது ஒரு சிறந்த அடையாளம்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories