TNPSC Thervupettagam

தனித்துவம் மிக்க தலைவிகள்

March 10 , 2024 134 days 174 0
  • பல நூறு ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டுப் பொதுவாழ்வில் பங்கெடுப்பதற்கான உரிமைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சமூக மாற்றத்தின் விளைவுகளாலும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இன்று பல துறைகளிலும் பெண்கள் தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு, தங்கள் தலைமைத்துவத்தை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
  • மிகக் குறிப்பாக, அனைத்துச் சமூகப் பிரிவுகளிலிருந்தும் பெண்கள் தங்களுக்கான இடத்தைப் போராடிப் பெற்றுக்கொண்டிருக் கிறார்கள். உள்ளூர் நிர்வாகத்திலும் எந்த விதத்திலும் குறைவில்லாமல் சவால்களை எதிர்கொண்டு, தங்களின் தலைமைத்துவத்தை நிரூபித்த, நிரூபித்துக்கொண்டிருக்கிற பெண் ஆளுமைகள் சிலரைப் பற்றி அறிந்துகொள்வது சர்வதேச மகளிர் நாளின் கொண்டாட்டத்துக்குப் பொருள் சேர்க்கும்

காத்திருக்க வேண்டாம்

  • இன்றளவும் நம் செயல் பாடுகளுக்கு ஊக்கமளிப்பவை, மறைந்த ஜேசுமேரியின் பணிகள்.தமிழ்நாட்டின் ஒரு சிற்றூராட்சியில் இருந்து அவர்செய்த பணி, பொது நிர்வாகத்திற்கான எடுத்துக் காட்டாக விளங்கியது. “உள்ளூர் நிர்வாகம் என்பது கட்டிடங்கள் கட்டுவதைத் தாண்டி, அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்என்பதை எப்போதும் சொல்லி வந்திருக்கிறார். ஊராட்சிகளின் கதவுகள் மக்கள் தட்டுவதற்காகக் காத்திராமல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும் என்பார். காரணம், “நம் நிர்வாகத்தைச் சார்ந்திருக்கும் மக்கள் மிக எளியவர்களாகவும் பொது நிர்வாகத்தை நேரடியாக அணுகுவதில் அச்சம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சாமானிய மக்கள் நம்மோடு பணி செய்வதற்கான, பொது நிர்வாகத்தில் பங்கெடுப்பதற்கான மன உறுதியை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்புஎன எங்களுக்கெல்லாம் சொல்லியிருக்கிறார்.
  • ராமநாதபுரம் மாவட்டம், மைக்கேல்பட்டினம் ஊராட்சியில் மக்களை ஒருங்கிணைத்து, மழைநீர் சேகரிப்பு முறையை முழுமையாக ஏற்படுத்தி உவர்ப்பாக இருந்த நிலத்தடி நீரை நன்னீராக்கிய இவரது முயற்சி முன்மாதிரித் திட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அது அன்றைய அரசின் மூலம் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விளிம்பு நிலை மக்களுக்கான பணியில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கை இவருடையது.

அனைவருக்குமான பொது நிர்வாகம்

  • சமூக நீதி என்பது நம் அரசமைப்புச் சட்டம் ஊராட்சி நிர்வாகத்திற்குக் கொடுத்திருக்கும் அடிப்படைப் பணி. சமூக நீதியை முழுமையாக நடைமுறைப்படுத்திய ஒரு நிர்வாகத்தைக் கொடுத்தவர் சுமதி. தனது ஊராட்சிக்கு அருகில் இருக்கும் நகரங்களின் தெருக்களிலும் பாலங்களுக்குக் கீழும் வசித்துக்கொண்டிருந்த வாக்ரி மக்கள் பலரிடம் பேசி, குறிப்பாக வாக்ரி இனப் பெண்களிடம் பேசி அவர்களின் ஒப்புதலோடு பல குடும்பங்களை ஊருக்கு அழைத்துவந்து, அவர்கள் பாதுகாப்புடன் வசிப்பதற்கான ஒரு புதிய குடியிருப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
  • ஊராட்சி நிர்வாகத்தில் குடிதண்ணீர் கொடுப்பது, சாலைகள் அமைப்பது, தெரு விளக்குப் பொருத்துவது என்பதோடு அவர் நின்றுவிடவில்லை. அவற்றைச் செய்வதற்கு ஓர் ஊழியர் போதுமே. மாறாக, ஓர் ஊராட்சி அரசு அமைக்கப்பட்டதற்கான முழு நோக்கத்தைச் செய்துகாட்டினார் சுமதி. 50% மகளிர் ஊராட்சி நிர்வாகத்தில் இருக்கும் தமிழ்நாட்டில், அனைத்துப் பெண் மக்கள் பிரதிநிதிகளும் முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய பணிகள் சுமதியுடையவை. உள்ளூரில் இருந்தும், அரசு நிர்வாகத்திடம் இருந்தும் வந்த பல சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொண்டு, பல தலைமுறைகளாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் பல தலைமுறைக்கும் பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் ஊராட்சித் தலைவராக சுமதி மேற்கொண்ட இந்த முயற்சி தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று

வெட்டி வேலை அல்ல, வெற்றி வேலை

  • இன்று விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் பல மக்கள் நலத்திட்டங்களில் பிரதானமான ஒன்று 100 நாள் வேலைத் திட்டம். இது வெட்டி வேலை என்றும் விவசாயத்தை அழிக்கின்ற வேலை என்றும் அடித்துச் சொல்பவர்கள் பலர் இருக்க, ‘அது வெட்டி வேலை அல்ல, எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிற வெற்றிகரமான வேலைஎன இன்றளவும் நிரூபித்துவருகிறார் சத்யகலா. பேச்சுரிமை, எழுத்துரிமை, தகவல் பெறும் உரிமை போன்ற உரிமைகளைப் போல ஒரு கிராமத்தில் வசிக்கக்கூடிய 18 வயது நிரம்பிய எவர் ஒருவரும் வேலை பெறுவதற்கான உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கி இருப்பது இந்தத் திட்டத்தின் மூலமாகத்தான்.
  • தொடக்கத்தில் சரியாக இருந்த திட்டம் காலப்போக்கில் சம்பிரதாயமான பணியாக ஆக்கப்பட்ட அவல நிலையில் தத்தளித்துக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனால், வேதாரண்யம் அருகில் இருக்கும் இவரது பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் நீர்நிலைகளைத் தூர்வாருதல், சிறு பாலங்கள் அமைத்தல் என இந்தத் திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் இல்லாமல் தங்கள் மக்களை வைத்தே பணியை முடித்திருக்கிறார். சட்டத்தின் வாயிலாகக் கிடைத்த அதிகாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்தியதால் வரக்கூடிய பயன்களை இப்பகுதி மக்கள் அறுவடை செய்திருக்கிறார்கள்.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிய ஆரம்ப நாள்களில், ‘நாங்கள் அதிக நேரம் வேலை செய்ய முடியாது, இது எங்களால் சாத்தியமில்லைஎன்கிற எதிர்ப்புக் குரல் வந்தது. இருந்தபோதிலும் தொடர்ந்து மக்களுக்கு வேலை கிடைத்ததாலும் முழு ஊதியம் பெற்றதாலும் பணிகள் வேகம் எடுத்தன. சமீபத்தில் அவரது ஊருக்குச் சென்று பார்த்தபோது, ஏரிக்கரைகளில் மரக்கன்றுகள் நடுவது முதல் வாய்க்கால்கள் தூர்வாருவது, புதிய சாலைகள் அமைப்பது, கரைகளைப் பலப்படுத்துவது, சிறு பாலங்கள் அமைப்பதென இந்த ஒரு திட்டத்தின் மூலம் பல கோடி ரூபாய் மக்கள் பெற்றிருப்பது மட்டுமல்லாமல் ஊருக்கும் பொதுச் சொத்துகள் பல உருவாகி இருக்கின்றன.
  • இந்தப் பணிகளின் மூலம் அவர் எதிர்கொண்ட அரசியல் அழுத்தங்களும் எதிர்ப்புகளும் உண்மையில் அவரின் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இருந்தன. இருப்பினும் நம்பிக்கையோடு அவற்றை எதிர்கொண்டு தமிழ்நாட்டில் முன்மாதிரியாக, கிராமத்தின் ஆதாரங்களைப் பெருக்கி இருக்கும் சத்தியகலாவின் முயற்சி பாராட்டுக்குரியது.
  • தலைமைத்துவம் நிறைந்த இந்தப் பெண் ஆளுமைகளைப் போலத் தமிழ்நாட்டில் பல மகளிர் நம்பிக்கையோடு இயற்கை வளங்களையும், விளிம்புநிலை மக்களையும் மேம்படுத்தி, நாளைய தலைமுறைக்குமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆணாதிக்கத்தின் அழுத்தத்தில் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி நிர்வாகம் செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த ஆளுமைகள் நம்பிக்கை நட்சத்திரங்களே!
  • நன்றி: இந்து தமிழ் திசை (10 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories