TNPSC Thervupettagam

தனிப் பள்ளிகள் தேவையில்லை

April 13 , 2023 647 days 455 0
  • தேசத்தின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்கிறது கோத்தாரி கல்வி குழு. விளிம்பு நிலையில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி நலனில் சிறப்பு கவனம் செலுத்திடும் உயர்வான நோக்கத்தில் 1898-இல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு என தனியான பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.
  • சிறப்பு கவனம் செலுத்துவதற்காக தொடங்கப்பட்ட இப்பள்ளிகள் துரதிருஷ்டவசமாக கண்டுகொள்ளப்படாத பள்ளிகளாகவே நாளடைவில் மாறின.
  • தற்போதைய நிலையில் பள்ளி கல்வித் துறையுடன் இணைக்கப்படும் 1,834 பள்ளிகளில் 1.6 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். 1,138 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 95,013 மாணவர்களும், 328 பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 31,153 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளிக் கல்வித் துறையின் பள்ளிகளில் பட்டியலின மாணவர்கள் 31.1 லட்சம் பேர்தான். அதாவது மொத்தமுள்ள பட்டியலின மாணவர்களில் 4 % மாணவர்களே இந்த நலத்துறை பள்ளிகளில் பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 50 %}க்கு மேல் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது ஓரிரண்டு ஆசிரியர் பணியிடங்களுடன் தரம் உயர்த்துவது வழக்கம். அதற்குப் பின் எந்த முன்னேற்றமும் காண முடியாது. உதாரணமாக ஈரோடு மாவட்டம் பர்கூர் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, உயிரியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பணியிடங்களே இதுவரை உருவாக்கப்படவில்லை. இந்த அவலம் 25 ஆண்டுகளாக தொடர்கிறது.
  • இந்த அவலத்தை கண்டித்து அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோருடன் 2017-இல் பர்கூரில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அப்போதைய கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் "இப்பள்ளி எங்களது துறையின் கீழ் வருவதில்லை. ஆகவே இதற்கு நான் பொறுப்பேற்க முடியாது' என்று கூறினார்.
  • அதனால் அந்தப் பெற்றோர்கள், "இவ்வளவு நிர்வாக சீர்கேடுகள் மிகுந்த இந்தத் துறையோடு எங்களது பள்ளிகள் நீடித்தால் எங்களது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். ஆகவே பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்து விடுங்கள்' என்று அரசைக் கேட்டுக் கொண்டனர்.
  • சமையல் உதவியாளர், துப்புரவுப் பணியாளர், இரவு காவலர், உடற்கல்வி ஆசிரியர், அலுவலக உதவியாளர் என எண்ணற்ற காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே நிரப்பப்படாமல் உள்ள அவலம் தொடர்கதையாக நீடிக்கிறது.
  • ஈரோடு மாவட்டத்தில் 22 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இன்றளவும் தங்குமிட வசதி ஏற்படுத்தப் படவில்லை. ஆகவே இந்தப் பள்ளிகள் உண்டு உறைவிடப் பள்ளி எனும் பெயரைத் தாங்கி இயங்கினாலும், உண்டு செல்லும் பள்ளிகளாகவே செயல்பட்டு வருகின்றன. காலை உணவை காலை 9 மணிக்கும், இரவு உணவை மாலை 4 மணிக்கும் வழங்கும் நிலை உள்ளது.
  • மேலும் விடுதி கட்டடம், வகுப்பறை கட்டடம், சமையலறை, கழிப்பறை, ஆய்வுக்கூடம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பல பள்ளிகள் தவிக்கின்றன.
  • இப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே விடுதிக் காப்பாளர்களாகவும் செயல்படுகின்றனர்.
  • ஒரு விடுதி காப்பாளர் நான்கு பள்ளிகளை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். பெரும்பாலான விடுதி காப்பாளர்கள் விடுதிகளில் தங்குவதில்லை. எனவே, விடுதிக் காப்பாளர்களும் தலைமை ஆசிரியர்களும் தனித்தனியாக நியமிக்கப்பட வேண்டும்.
  • தற்போது இந்தப் பள்ளிகளை கண்காணிக்கும் பணியை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இது சற்றும் பொருத்தமானதாக இல்லை. கல்வித்துறையில் குறுவட்ட அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் என பல அடுக்கு கட்டமைப்பு வசதிகளும் தொடர் கண்காணிப்பும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நலப் பள்ளிகளில் ஆண்டுக் கணக்கில் அவலங்கள் தொடர்கின்றன.
  • கடந்த ஆண்டு தேர்வு முடிவின்படி, 17 துறைகளின் சார்பில் தேர்வு எழுதியவர்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 82.21 %, பழங்குடியினர் நலப் பள்ளிகள் 86.81 % தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற துறைகளை ஒப்பிடுகையில் நலப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிகவும் பின் தங்கி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இவ்வாறான அவலங்கள் தொடர்ந்து நீடிப்பதால் இந்த நலப் பள்ளிகளை பள்ளி கல்வித் துறையுடன் இணைத்திட வேண்டும் என 2017-ஆம் ஆண்டு பழங்குடியினர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் கல்வியாளர்கள் அரசை வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் அமைப்புகளும் இதனை வலியுறுத்தி அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தன.
  • இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள் அனைத்தையும் பள்ளிகல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது. பட்டியலினக் குழந்தைகள் பட்ட துயரங்கள் நீங்க இந்த அறிவிப்பு வழிவகுக்கும்.
  • இணைப்பிற்கு பிறகும் இவர்கள் பெற்று வந்த சலுகைகள் தொடர்வதை அரசு உறுதி செய்திட வேண்டும். சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளுக்கு எதிரான ஜாதி வெறி, ஜாதிப் பாகுபாடு, ஜாதி இழிவு, ஜாதி ஆதிக்கம் ஆகியவற்றில் இருந்து மனிதர்களை விடுபட வைப்பது தான் இன்றைய தேவை. இந்நோக்கம் நிறைவேற சமச்சீர்க் கல்வி முறை வளர வேண்டும்.
  • எனவே, இணைப்பின் மூலம் தற்போதுள்ள அவல நிலையில் இருந்து நலத்துறைப் பள்ளிகள் மேம்பட முடியும் என்பதையும் சமச்சீர்க் கல்வி முறை வளர இது போன்ற நடவடிக்கைகள் அவசியமானவை என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
  • சமூகப் பிரிவு அடிப்படையில் தனிப் பாதை கூடாது, தனி மயானம் கூடாது, தனிக்குடியிருப்பு கூடாது என்று முழங்கும்போது, தனிப்பள்ளிகள் மட்டும் எதற்காக? ஜாதி ஒழிப்பிற்கு தனிப் பள்ளி தீர்வல்ல. அது அவர்களை மேலும் தனிமைப்படுத்தவே வழிகோலும்.

நன்றி: தினமணி (13 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories