- மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காதபோது, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம். இந்தக் கூட்டணி தேர்தலுக்கு முன்பே அமைந்ததாகவும் இருக்கலாம். சட்டமன்றத் தேர்தலுக்கும் இது பொருந்தும். இந்தியாவுக்குக் கூட்டாட்சி புதிதல்ல. ஆட்சி அமைக்கவிருக்கும் கட்சியுடன் பிற கட்சிகள் கூட்டணி அமைத்து, அமைச்சர் பதவிகளைப் பெற்று ஆட்சியில் பங்கேற்பதும் உண்டு. வெளியில் இருந்து ஆதரவு தருவதும் உண்டு.
கைகொடுக்கும் கட்சிகள்:
- மத்தியில் ஆட்சி தொடர்வதையும் கவிழ்வதையும் கூட்டணிக் கட்சிகளே தீர்மானிக்கின்றன. 1975இல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையானது, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் தொடக்கத்துக்குக் காரணமாக அமைந்ததுடன், 1977இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வியிலும் முக்கியப் பங்கு வகித்தது. மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி 298 இடங்களையும் கூட்டணிக் கட்சிகளோடு 345 இடங்களையும் வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து 189 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் அல்லாத முதல் ஆட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் அமையவும் அந்தத் தேர்தல் வழிவகுத்தது.
ஊசலாடும் ஆட்சி:
- இந்திரா காந்தியை எதிர்ப்பதற்காக பாரதிய ஜன சங்கம், பாரதிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துதான் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. மொரார்ஜி தேசாயின் ஆட்சியில் நடைபெற்ற இந்து - முஸ்லிம் பிரச்சினைகளால் இவ்விரு கட்சிகளும் ஜனதா கட்சியிலிருந்து விலக, ஜனதா கட்சி பெரும்பான்மையை இழந்தது. காங்கிரஸின் ஆதரவோடு 1979இல் சரண் சிங் பிரதமரானார். நெருக்கடி நிலை தொடர்பான வழக்குகளைத் தள்ளுபடி செய்யுமாறு காங்கிரஸ் அழுத்தம் கொடுத்ததாலேயே தான் பதவி விலகுவதாக சரண் சிங் அறிவித்தார். இப்படி 1977 தொடங்கி 1998 வரை வெவ்வேறு காலகட்டங்களில் கூட்டணி ஆட்சிகள் அமைந்ததன் காரணமாக வி.பி.சிங், சந்திரசேகர், தேவகெளடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் உள்ளிட்ட ஏழு பேர் பிரதமர்களாகப் பதவியேற்றார்கள். இவர்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சிகள் அதிகபட்சம் இரண்டு, மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தன.
நீடித்த கூட்டணி ஆட்சி:
- 1999 செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து பாஜக வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மத்தியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீடித்த காங்கிரஸ் அல்லாத பாஜக தலைமையிலான முதல் கூட்டணி ஆட்சி இதுதான். அதற்கடுத்து நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. மன்மோகன் சிங் பிரதமர் பதவி வகித்தார். 2014, 2019 தேர்தல்களில் பாஜக 282, 303 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பெரும்பான்மை இருந்ததால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பதைவிடவும் மோடி அரசு என்றே அது அறியப்பட்டது.
சாதக பாதகங்கள்:
- பிற கட்சிகளோடு கூட்டணி அமைப்பதால் கொள்கைகளில் பன்மைத்துவம் கடைப்பிடிக்கப்படுவது கூட்டாட்சியால் விளையும் நன்மைகளில் ஒன்று. குறிப்பிடத்தகுந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களும் வளர்ச்சியும் கூட்டாட்சிக் காலத்தில் நடைபெற்றுள்ளன. 1998 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டது, மக்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனத்தை எதிர்கொண்டது. ஆனால், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, பொருளாதாரக் கொள்கைகளில் நெகிழ்வு, சாலைகள் விரிவாக்கம், ஐ.டி. துறை வளர்ச்சி, வெளியுறவுக் கொள்கைகளில் சுமுகத்தன்மை போன்றவை இவரது தலைமையிலான கூட்டாட்சியில் விளைந்த நன்மைகள்.
- மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது தாராளமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டது. இந்தியப் பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பி என அவர் கொண்டாடப்பட்டார். ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தேசிய ஊரக நலத் திட்டம், கல்வி உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவை இடதுசாரிக் கூட்டணியுடனான காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள்.
அதிகாரப் பகிர்வு:
- தற்போது மத்தியில் அமைந்திருப்பதும் கூட்டணி ஆட்சிதான். புதிய அரசை அமைப்பதற்கு இலக்கான 272 இடங்களை பாஜக பெறவில்லை. 240 இடங்களில் வென்ற அக்கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடனும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடனும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஏற்கெனவே பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தவைதான். இருந்தபோதும் பாஜகவோடு குறிப்பாகப் பிரதமர் மோடியுடன் கருத்து வேறுபாடு கொண்டு கூட்டணியிலிருந்து விலகியிருந்தன.
- 2024 தேர்தலுக்கு முன்பு மீண்டும் கூட்டணியில் இணைந்தன. அப்போது பாஜக தனிப் பெரும்பான்மையுடன் இருந்ததால், இவர்களது விலகல் ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தற்போது இவ்விரு கட்சிகளும் 28 இடங்களைத் தங்கள்வசம் வைத்திருப்பதால், பாஜக அரசு ஆட்சியில் நீடிக்க இவர்களது ஒத்துழைப்பு அவசியம். கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைக் காட்டுவதற்காக 24 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு அல்லது மூன்று கட்சிகளைச் சார்ந்து ஆட்சி அமைக்கும் அரசுகள் கவிழ்வதற்கான சாத்தியம் அதிகம் என்பதைத்தான் முந்தைய ஆட்சிக் கவிழ்ப்புகள் உணர்த்துகின்றன. கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளை அனுசரித்துப்போவதற்காகக் கொள்கைரீதியான முடிவுகளைக்கூடத் தளர்த்திக்கொள்ள நேரிடும்.
- கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சி அமைத்திருக்கும் பாஜக, முன்புபோல் எதேச்சதிகாரத்துடன் செயல்பட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. அதிகாரப் பரவலாக்கம், நீதித் துறை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சுதந்திரச் செயல்பாடு போன்றவற்றோடு எதிர்க்கட்சிகளின் குரல் நாடாளுமன்றத்தில் வலுத்து ஒலிப்பதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது.
ஏன் பெரும்பான்மை கிடைப்பதில்லை?
- சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளையும் வேட்பாளர்களையும் மக்கள் நன்கு அறிந்திருப்பர். மக்களவைத் தேர்தலிலும் இதேநிலைதான் என்றாலும் தேசியக் கட்சிகளோடு கூட்டணி வைப்பது முடிவுகளைச் சாதகமாகவோ பாதகமாகவோ ஆக்குகிறது. பொதுவாக, மக்களுக்குச் சட்டமன்றத் தேர்தலில் இருக்கிற ஈடுபாடு மக்களவைத் தேர்தலில் இருப்பதில்லை. நாம் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்புகிறவர்களால் மாநிலங்களுக்கு நேரடியாகப் பெரும்பான்மையான பொருளாதாரப் பலன்கள் கிடைப்பதில்லை என்றும் சிலர் நம்புகிறார்கள். வாக்குவிகிதம் சரிவைச் சந்திப்பதற்கும் இது காரணம். மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புவார்கள். ஆட்சியில் இருந்தபோது கட்சிகள் செய்த செயல்களும் கொள்கை முடிவுகளும்கூட மாற்றத்தை நோக்கி மக்களை நகர்த்தும். பொதுசிவில் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், விவசாயிகள் போராட்டம், பண மதிப்பிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையும் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் சரிவுக்குக் காரணங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 06 – 2024)