TNPSC Thervupettagam

தனியார் வசம் மின்சாரம் தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கை

November 9 , 2023 383 days 238 0
  • 2022 ஆகஸ்ட் 8ஆம் தேதி, மின்சாரச்சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, உடனடியாக நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப் பட்டு விட்டது. ஆனால், அடுத்தடுத்து நடக்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில், ஏதேனும் ஒன்றில் இம்மசோதா சட்டமாக்கப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை. சரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதுஏன்? இந்தச் சட்டத்திருத்தத்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுமா?
  • கால் பதிக்கும் தனியார் நிறுவனங்கள்: மின்சார உற்பத்தியில் ஏற்கெனவே தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தச் சூழலில், இத்திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால், மின்சாரம் கடத்துதல் (transmission), விநியோகத்தில் தனியார் முதலாளிகளும் ஈடுபட வழிவகுக்கும் என்கிற அச்சம் பரவலாக எழுந்திருக்கிறது. இதற்கென்று இம்முதலாளிகள் தனிக் கட்டமைப்பு வசதிகள் எதையும் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.
  • ஒரே கம்பி இணைப்பில் எப்படி எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஒளிபரப்பாகின்றனவோ அதேபோல் ஒரே கம்பியில் அதானி, அம்பானி, டாடா, அரசு மின்சாரம் அனைத்தும் உங்கள் இல்லங்களில் வந்து ஒளி வீசும். தனியார் நிறுவனங்களுக்கு எனப் பிரத்யேகமாகப் பகுதிகள் ஒதுக்கித் தரப்படும். அதிக மின்நுகர்வு உள்ள பகுதிகள்தான் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது சொல்லாமலே விளங்கும்.
  • காலப்போக்கில், பொதுத் துறை நிறுவனமான மின்சார வாரியம் நலிவடைந்து, தனியார் நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சும் துறையாக மின் துறை மாறிவிடும். தனியார் முதலாளிகளின் ஒரே இலக்கு - லாபம்தான். தாத்ரா - நகர் ஹவேலி, தமன் - தீவ் ஒன்றியப் பிரதேசத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டோரன் என்கிற தனியார் நிறுவனம், 2022-23இல் மட்டும் 371% லாபம் ஈட்டியது இதற்கு உதாரணம்.

கூடுதல் சுமை

  • இதற்கான முன்னோட்டமாக, மின்சாரம் (நுகர்வோரின் உரிமைகள்) விதிகள் 2020ஐ மின் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவராமலேயே திருத்தம் மேற்கொண்டு, 2023 ஜூன் 14இல் மத்திய அரசிதழில் வெளியிட்டுவிட்டது. இந்தத் திருத்த விதிகளின்படி, நாடு முழுவதும் ஏற்கெனவே நல்லமுறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து மின் மீட்டர்களும் நீக்கப்பட்டு, கட்டாயமாக ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தப்படும்.
  • இதைப் பொருத்துவது, பராமரிப்பது போன்ற பணிகளைத் தனியார் நிறுவனங்கள்தான் செய்யும். இதற்கான பணத்தை மின்வாரியங்கள் அந்நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.3,000 கோடி தேவைப்படுமாம். பழைய மீட்டர்களைக் கழற்றி அப்புறப்படுத்துவதற்கான செலவு தனி. ஏற்கெனவே, வாங்கிய கடனுக்கு வட்டி உட்பட ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது; மின்சார வாரியத்துக்குச் சொந்தமான சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் நிலைமையைச் சமாளித்துக்கொண்டிருக்கிறோம் என்று புலம்புகின்றனர் அதிகாரிகள். இந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் செலவு கூடுதல் சுமை.
  • வர்த்தகம் - தொழில் நிறுவனங்களில் 10 கிலோ வாட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 2024 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட வேண்டும். விவசாய மின்நுகர்வோரைத் தவிர, இதர அனைத்து மின்நுகர்வோருக்கும் 1.4.2025க்கு முன்பாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என்கிறது மின்சாரம் (நுகர்வோரின் உரிமைகள்) விதிகள் 2020.
  • திருத்தப்பட்ட விதிகளில் நேரத்துக்கு ஏற்றவாறு மின்கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் பயன்படுத்தும் நேரம் மூன்று ஒதுக்கீடு நேரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது 1. காலை 6 மணி முதல் 10 மணி வரை, 2. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை, 3. காலை 5 மணி முதல் 6 மணி வரை, பிறகு 10 மணி முதல் மாலை 6 மணி வரை. மின்சாரத்தை உச்சபட்சமாகப் பயன்படுத்தும் நேரம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், இந்த நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு 10 முதல் 20% வரை கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்படும்.

முன்கூட்டியே கட்டணம்

  • ஸ்மார்ட் மீட்டருக்கு மற்றொரு பெயர், ‘பிரீபெய்டு மீட்டர்’. செல்போனுக்கு முன்கூட்டியே பணத்தைச் செலுத்திப் பேசுவதைப் போல மின்சாரத்துக்கும் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி மின் அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பணம் தீர்ந்தவுடன் இணைப்பு தானாகவே துண்டிக்கப்படும். பெரிய மனது வைத்துக் குறுஞ்செய்தி அனுப்பினாலும் அனுப்புவார்கள்.
  • முன்கூட்டியே கட்டணம் செலுத்தி மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், இனி இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் என்பதெல்லாம் இருக்காது. தமிழ்நாட்டில், விவசாயத்துக்கும் குடிசைகளுக்கும் முற்றிலும் இலவச மின்சாரம். வீடுகளுக்கு 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகளுக்குக் குறிப்பிட்ட யூனிட் அளவு கட்டணமில்லா மின்சாரம் நடைமுறையில் இருக்கிறது.
  • அதிலும் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் என்பது விவசாயிகள் போராடி, உயிரைத் தியாகம் செய்து பெற்ற உரிமை. விவசாயத்தில் லாபம் இல்லாமல் பல்வேறு நெருக்கடிகளை விவசாயிகள் எதிர்கொண்டாலும் விவசாயத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, இலவச மின்சாரம். இது ரத்து செய்யப்படுமானால், ஆழ்குழாய் - கிணற்றுப் பாசனத்தின் மூலம் விவசாயம் செய்யும் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறிவிடுவார்கள். இதனால், உணவு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதுடன், வேளாண் பொருளாதாரத்திலும் கிராமப்புறங்களிலும் கடுமையான நெருக்கடிகள் உருவாகும்.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு

  • ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தவில்லை என்றால் மின்சார மானியம், பல்வேறு மின்சாரத் திட்டங்களுக்கான நிதியுதவி வழங்கப்படாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது.
  • எனினும், கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டது. இதனால், ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்தது. எனினும், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை ஏற்பதைவிட, இந்த மானியத்தை வேறு வகையில் ஈடுகட்டுவது எப்படி என்று முடிவு செய்துகொள்கிறோம் என்று உறுதியாகக் கூறிவிட்டது கேரள அரசு. மக்கள் நலன் சார்ந்து இப்படியொரு முடிவைத் தமிழ்நாடு அரசும் எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

மின்சாரம் அடிப்படை உரிமை

  • தற்போதைக்கு வர்த்தகம் - தொழிற்சாலைகளுக்கு என்று சொல்லப்பட்டாலும், நாளடைவில் அனைத்து மின்நுகர்வோருக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரி தனது அலுவலகத்திலிருந்தே ஒவ்வொரு மீட்டரிலும் பயன்படுத்தப்பட்டுள்ள மின்அளவைத் தெரிந்துகொள்ள முடியும். இதனால், மின்நுகர்வு கணக்கெடுக்கும் பணியில் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். புதிதாக ஆள்களைப் பணிக்கு எடுக்காத நிலையும் உருவாகும்.
  • இதனால், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு என எல்லாமே கேள்விக்குறியாகிவிடும். ஏற்கெனவே, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிரத்தில் என்ரான் (Enron) என்கிற அமெரிக்க நிறுவனத்துக்கு மின்விநியோக உரிமை வழங்கப்பட்டு, அதனால் மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை இப்போதைய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படை உரிமையான மின்சாரத்தை, அனைவரும் கட்டுப்படியாகும் விலையில்கிடைக்கச் செய்வதே அரசின் கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories