TNPSC Thervupettagam

தனி​ந​ப‌ர் முனைப்பே தீ‌ர்​வு!​

March 10 , 2025 4 days 24 0

தனி​ந​ப‌ர் முனைப்பே தீ‌ர்​வு!​

  • இந்தியாவில் 8 பேரில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளது என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
  • கடந்த 20 ஆண்டுகளில் நோய் என்று அறியப்படாத வகையைச் சேர்ந்த உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவது பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.
  • சமீபத்திய ஆண்டுகளில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் எண்ணிக்கை நான்கு மடங்கு ஆகி உள்ளது. சர்க்கரை நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரலில் பாதிப்பு, பக்கவாதம், பதற்றம், மனச்சோர்வு போன்றவற்றுக்கு உடல் பருமன் காரணமாக உள்ளது.
  • உடல் பருமன் குறித்த பல்வேறு ஆய்வறிக்கைகளின் தரவுகள் அச்சமூட்டுபவையாக உள்ளன. 2019-21-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி ஆண்களோ, பெண்களோ நான்கில் ஒருவர் உடல் பருமனுடன் உள்ளார். பல்வேறு மாநிலங்களிலும் அதிக எடை அல்லது உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 முதல் 50 சதவீதம் வரை உள்ளது.
  • "இதை எதிர்கொள்ள நாம் உண்ணும் உணவில் 10 சதவீதம் எண்ணெயைக் குறைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் வாங்கும்போது 10 சதவீதம் குறைத்து வாங்க வேண்டும். இது தொடர்பாக 10 பேருக்குப் பரிந்துரைப்பேன். இதேபோல நீங்களும் 10 பேருக்கு கோரிக்கை விடுக்க வேண்டும்' என்று பிரதமர் மோடி கடந்த பிப். 23 ஆம் தேதி "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசியது ஓரளவு விழிப்புணர்வை உண்டாக்கியுள்ளது.
  • உலக உடல் பருமன் கூட்டமைப்பின் கணிப்புப்படி, உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த 2023-ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வின்படி, 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 கோடி பேர் தொப்பையுடனும், 25 கோடி பேர் உடல் பருமனுடனும் காணப்படுகின்றனர்.
  • இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களாகக் கருதப்படும் தில்லி, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில்தான் உடல் பருமனால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் சராசரி மக்களின் வாழ்க்கைமுறை மாற்றமே இதற்குக் காரணம்.
  • ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உட்கார்ந்து கொண்டே 10 மணி நேரத்துக்கும் மேல் பணிபுரியும் கலாசாரம் பெருகிவிட்டது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவுடன் கைப்பேசி காரணமாக இரவு நீண்ட நேரம் கண் விழிப்பதால் உடல்சோர்வு அதிகமாகிறது. அதனால் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. அதிகரித்துவரும் நகரமயமாதலால் உடற்பயிற்சிக்கான போதிய மைதானங்களும் இருப்பதில்லை.
  • உணவு முறை மாற்றமும் உடல் பருமனுக்கு அதிமுக்கிய காரணமாகும். உடலுக்கு நன்மை அளிக்கும் சிறுதானியங்கள் உள்ளிட்டவற்றை வாங்க அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது. ஆனால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவு வகைகள் தெருவுக்குத் தெரு எளிதாகவும் மலிவு விலையிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் 78 கோடி மக்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருள்களை வாங்கும் வசதியில்லை என்று ஓர் ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
  • உடல் பருமன் என்பது தனிநபருக்கான பிரச்னை மட்டும் அல்ல. நோய்க்கான சிகிச்சை செலவு, உற்பத்தி பாதிப்பால் தேசத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • 2019-ஆம் ஆண்டில் உடல் பருமனை எதிர்கொள்ள இந்தியர்கள் 28.95 பில்லியன் டாலர் செலவழித்தனர். இது 2030-இல் 81.53 பில்லியன் டாலராகவும், 2060-இல் 838.6 பில்லியன் டாலராகவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
  • கடந்த 30 ஆண்டுகளில் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 1990-இல் 5.3 கோடி பேர் இருந்ததுபோய் 2023-இல் 23.6 கோடி பேர் உடல் பருமன் உள்ளவர்களாக இந்தியாவில் இருக்கிறார்கள் என்று லான்செட் மருத்துவ இதழ் தெரிவிக்கிறது. 2050-இல் உலகிலேயே அதிக உடல் பருமன் கொண்டவர்கள் இருக்கும் இரண்டாவது நாடாக இந்தியாவின் நிலை உயரக்கூடும் என்றும் அந்த இதழ் எச்சரிக்கிறது.
  • சுகாதாரத் துறையும் சுகாதார வல்லுநர்களும் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் குறித்து மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வருவதால் உடல் பருமன் ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து பொதுவெளியில் கவனம் பெறாமல் இருக்கிறது. குறிப்பாக, குழந்தைகள் மத்தியில் காணப்படும் உடல் பருமனை பள்ளிகளின் சுகாதார மையங்களில், சமுதாயக் களங்களில் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியமாகிறது.
  • பள்ளிக் கல்வித் திட்டத்தில் விளையாட்டுக்கும் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் இல்லாத நிலை அண்மைக்காலமாக ஏற்பட்டிருப்பது குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம். பள்ளிக்கூட உணவகங்களில் உடல் பருமனை அதிகரிக்கும் துரித உணவுகள் வழங்கப்படுவதும், அவை குழந்தைகள் மத்தியில் ஈர்ப்பு ஏற்படுத்தி விடுவதும் உடல் பருமன் அதிகரிப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம்.
  • உடல் பருமன் பிரச்னையை எதிர்கொள்ள பல்வேறுவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே உடற்பயிற்சி, விளையாட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். உடல் பருமன், நன்மை பயக்கும் - தீங்கிழைக்கும் உணவுப் பொருள்கள் குறித்து பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தீங்கிழைக்கும் உணவு வகைகளுக்கு அதிக வரியும், நன்மை செய்யும் உணவுப் பொருள்களுக்கு குறைவான வரியும் விதிக்கப்பட வேண்டும்.
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக தனிநபர் முனைப்பே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.

நன்றி: தினமணி (10 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories