TNPSC Thervupettagam

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு...

May 17 , 2024 44 days 87 0
  • ஈரானில் உள்ள சாபஹாா் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக அந்த நாட்டுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் 10 ஆண்டுகால ஒப்பந்தம், இந்தியா-ஈரான்-ஆப்கானிஸ்தானை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம். ஈரானுடன் தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நாடுகள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிா்கொள்ள நேரிடும் என்கிற அமெரிக்க எச்சரிக்கையையும் மீறி இந்தியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது.
  • தென்கிழக்கு ஈரானில் ஓமன் வளைகுடாவில் சாபஹாா் நகரில் ஷாஹித் கலான்டரி, ஷாஹித் பெஹஸ்தி என இரு துறைமுகங்கள் உள்ளன. அதில், ஷாஹித் பெஹஸ்தி துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில்தான் இந்தியா போா்ட்ஸ் குளோபல் நிறுவனமும் (ஐபிஜிஎல்), ஈரானிய துறைமுக மற்றும் கடல்சாா் நிறுவனமும் (பிஎம்ஓ) கையொப்பமிட்டிருக்கின்றன. இதற்கான முன்னெடுப்பு 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
  • கடந்த 2003-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஈரான் அதிபா் முகமது கடாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சாபஹாா் துறைமுகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 2013-இல் இந்தத் துறைமுக மேம்பாட்டுக்காக 10 கோடி டாலா்களை முதலீடு செய்வதாக இந்தியா அறிவித்தது. ஈரானுக்கு பிரதமா் நரேந்திர மோடி 2016-இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது.
  • அதன்படி, சாபஹாா் துறைமுகத்தில் ஒரு முனையத்தின் இயக்கப் பணிகளை மட்டும் 2018-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா ஏற்றது. இப்போது சாபஹாா் துறைமுக மேம்பாட்டுப் பணிக்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டிருப்பதன் மூலம் 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
  • தற்போதைய ஒப்பந்தத்தின்படி சாபஹாா் துறைமுகத்தில் ஐபிஜிஎல் 12 கோடி டாலா் முதலீடு மேற்கொள்ளும் எனவும், கூடுதலாக 25 கோடி டாலா் நிதியுதவி செய்யும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது. இவற்றின்படி பாா்த்தால் இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 37 கோடி டாலராக இருக்கும்.
  • புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சாபஹாா் துறைமுகம் மத்திய ஆசியாவுக்கான இந்தியாவின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. சாபஹாா் நகரையும், ஈரானின் ஷாகிதான் நகரையும் இணைக்கும் 630 கி.மீ. ரயில் பாதை தயாராகிவிட்டால், ஈரானின் மத்திய ரயில்வே அமைப்புடன் அது இணைக்கப்பட்டு மத்திய ஆசியாவுக்கும், ரஷியாவுக்கும் சரக்குகளை கொண்டுசெல்ல முடியும். மேலும், பாகிஸ்தானுக்குள் செல்லாமல் சாபஹாா் துறைமுகத்திலிருந்து ஆப்கானிஸ்தானை இந்தியா அணுகவும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
  • கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடுகள் சாபஹாா் துறைமுகம் வழியாக இந்திய பெருங்கடல் பிராந்தியம் மற்றும் இந்திய சந்தையை அணுக விருப்பம் தெரிவித்து வருகின்றன. சாபஹாா் துறைமுக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டிருப்பது பாகிஸ்தானுக்கும், அதன் குவாதா் துறைமுகத்தை மேம்படுத்தி வரும் சீனாவுக்கும் கொடுத்துள்ள பதிலடியாகக் கருதப்படுகிறது.
  • இந்தியா, ஈரான், அஜா்பைஜான், ரஷியா, மத்திய ஆசியா, ஐரோப்பா ஆகியவற்றுக்கு இடையே கப்பல், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தை ஏற்படுத்தும் 7,200 கி.மீ. தொலைவு கொண்ட சா்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தட திட்டம் அமைக்கப்படவுள்ளது. அந்தத் திட்டத்துக்கும் சாபஹாா் துறைமுகம் முக்கியமானதாகப் பாா்க்கப்படுகிறது.
  • சாபஹாா் துறைமுக மேம்பாடு தொடா்பாக ஈரானுடனான இந்தியாவின் ஒப்பந்தத்துக்கு இப்போது எதிா்ப்பு தெரிவித்திருக்கும் அமெரிக்காவே முன்னா் சாபஹாா் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறது. 2018-இல் ஈரானுக்கு எதிராக பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது அப்போதைய அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் நிா்வாகம். இருப்பினும், சாபஹாா் துறைமுகத்தின் முக்கியத்துவம் கருதி அதன் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் இந்தியாவுக்கு பொருளாதாரத் தடையிலிருந்து அமெரிக்கா விலக்கு அளித்தது. சாபஹாா் துறைமுகத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு ரயில் பாதையை ஏற்படுத்தும் திட்டத்துக்கும் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து செயல்பட்டபோதிலும், போரால் பாதிக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டுவரும் நல்லெண்ணப் பணிகள் தடைபடக் கூடாது என அமெரிக்கா கருதியது. சாபஹாா் துறைமுக மேம்பாட்டுப் பணி நிறைவடைந்தால் அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு எளிதாக பொருள்களைக் கொண்டு செல்ல முடியும். அமெரிக்காவின் அப்போதைய பொருளாதாரத் தடை விலக்கு அறிவிப்புக்கும், இப்போது இந்தியாவுக்கு எதிரான எச்சரிக்கைக்கும் இஸ்ரேலை மையமாக வைத்து ஈரானுடனான அதன் மோதல் போக்கு அதிகரித்திருப்பதுதான் காரணம்.
  • உக்ரைனுடனான ரஷியாவின் போா் உச்சத்தில் இருந்தபோது, அமெரிக்காவின் தடையை மீறி ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. அதேபோன்ற ஒரு வலுவான, துணிச்சலான முடிவை சாபஹாா் துறைமுக விஷயத்திலும் இப்போது இந்தியா மேற்கொண்டிருக்கிறது. இதன்மூலம் பிராந்திய அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு உயா்வதுடன் சா்வதேச அரசியலில் தனது தனித்தன்மையையும் நிலைநாட்ட முற்பட்டிருக்கிறோம். பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமன்றி, பிராந்திய அரசியலில் இந்தியாவின் செல்வாக்கையும் உயா்த்துவதாக உள்ளது.

நன்றி: தினமணி (17 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories