TNPSC Thervupettagam

தன்னம்பிக்கையை வலுப்படுத்தும் ‘சுய கற்றல்’ முறை

October 8 , 2024 99 days 166 0
  • கல்வி என்பது மாணவர்களைச் சிறந்த குடிமக்களாக மாற்றும் முக்கியக் கருவி. அறிவு வளர்ச்சி மட்டுமல்லாமல் மனம் சார்ந்த வளர்ச்சியையும் மையமாகக் கொண்டு சமூகத்தில் ஒத்துழைப்பவர்களாக மாணவர்களை ஆசிரியர்கள் மாற்றுகின்றனர். இதன் மூலம் நல்ல சமுதாயம் உருவாகிறது. மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வது சமூகத்திற்கும் பெரிய பங்களிப்பாக அமையும். ஆனால், பள்ளியில் வளர்க்கப்படும் இந்தத் திறன்கள் மாணவர்களிடம் தொடர்ந்து நிலைத்திருப்பதில்லை.

சுய கற்றலின் தேவை

  • பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளில் பலரும் வீட்டில் படிக்க எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. இதற்கு ‘சுய கற்றல்’ பழக்கத்தை அவர்கள் வளர்த்துகொள்வது ஒரு தீர்வு. எனவே, குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த பெற்றோரின் உதவியோடு ‘குழந்தைகள் சுய கற்றல் மையங்கள்’ திருச்சியின் சில இடங்களில் சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள், பெற்றோரின் உதவியோடு அவர்களது வீட்டிலேயே தனியாகவோ அல்லது குழுவாகவோ படிப்பார்கள்.
  • சுய கற்றல் மூலம் குழந்தைகள் தங்களது கற்றலைத் தாங்களே நிர்வகிக்கும் பழக்கத்தை அடைகிறார்கள். இதனால், பள்ளிக்கு வெளியிலும் விடுமுறை நாள்களிலும் குழந்தைகளால் கல்வியைத் தொடர முடிகிறது. சுய கற்றலின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அது மாணவர்களுக்குத் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் வழிமுறையைக் கற்பிக்கிறது. சிந்தனைத் திறன், பிரச்சினையைத் தீர்க்கும் திறன், தன்னிச்சையான தகவல் தேடும் திறன் போன்றவற்றை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.
  • மனப்பாடம் செய்யும் கற்றலைவிடச் சுய கற்றல் முறையில் மாணவர்கள் படிக்கும்போது தங்களுக்கான வேகத்தில் கற்றுக்கொள்ள முடியும். முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை மீண்டும் படிக்க முடியும். இது தாமதமாகக் கற்றுக்கொள்பவர்களுக்கு அழுத்தமின்றிக் கற்றல் வாய்ப்பையும் விரைவாகக் கற்றுக்கொள்பவருக்குக் கடினமான பாடங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பையும் அளிக்கிறது.

கற்றல் இடைவெளியை நிரப்புதல்

  • கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் உலகளாவிய ஆய்வுகள் காட்டியது போலக் குழந்தைகள் தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்வது அவசியமாகிறது. இதற்கான நீடித்த தீர்வாகச் சுய கற்றல் மையங்கள் பயன்படுகின்றன. கல்வியில் உள்ள இடைவெளியைக் குறைப்பதில் சுய கற்றல் மையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாகக் கிராமப்புற அல்லது பின்தங்கிய பகுதிகளில், பள்ளிகளில் வளங்கள் குறைவாக இருந்தாலும் குழந்தைகள் சுய கற்றல் முறை மூலம் டிஜிட்டல் தளங்கள், கைபேசிச் செயலிகள் அல்லது சுய கற்றல் மையங்கள் மூலமாகத் தரமான கல்வியைப் பெற முடியும்.

குழந்தையின் பார்வையில்...

  • சுய கற்றல் முறையின் வழியே குழந்தைகள் எதைப் படிக்க வேண்டும், எப்போது படிக்க வேண்டும், எந்த வேகத்தில் படிக்க வேண்டும் என்பதைத் தாங்களே சுதந்திரமாக முடிவுசெய்கிறார்கள். இது அவர்களுக்குக் கற்றல்மீது ஈடுபாட்டை அதிகரிக்கிறது. சுய கற்றல் மூலம் குழந்தைகள் பிடித்த பாடங்களில் ஆர்வம் காட்டுவதோடு பாடல், கதை சொல்லுதல் போன்றவற்றிலும் ஓவியம் வரைதல், நடித்துக் காட்டுதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
  • சுயமாகக் கற்றுக்கொள்வதால் குழந்தைகளின் தன்னம்பிக்கை மேம்படுகிறது. தாங்களே சிந்தித்துக் கேள்விகளை உருவாக்கி, பதில்களைக் கண்டுபிடிக்க முடியும் என்பதால் தன்னம்பிக்கையுடன் கற்றலில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகள் கேள்வியைப் படித்துப் புத்தகத்திலிருந்து பதிலை எழுதுவது என்பது ஒரு குறிப்பிட்ட தகவலைத் தேடுவதில் மட்டுமே முடிவடைகிறது. குழந்தைகள் ஒரே இடத்தில் உள்ள பதிலைக் கண்டறிந்து எழுதுகின்றனர். முழுக் கருத்தையும் அடையாமல் ஒரு செயல்பாட்டை மட்டுமே செய்வார்கள்.
  • அதற்குப் பதில் சுய கற்றல் மையத்தில் குழந்தைகள் முழுமையாக ஒரு பாடத்தைப் படித்துக் கேள்விகளை உருவாக்குவது குழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்துகிறது. இது அவர்களுக்கும் புத்தகத்தின் கருத்துகளை நன்கு புரிந்து கொள்வதற்கும் தகவலைத் தொடர்புப்படுத்தவும் கேள்விகளை உருவாக்குவதற்கான ஆழமான புரிதலை அடைவதற்கும் உதவுகிறது. இந்தச் சுய கற்றல் முறை மூலம் படைப்பாற்றல் வளர்கிறது.
  • “நான் கற்றல் சார்ந்த பணிகளைச் சுயமாகக் கற்பேன். எங்கள் தெருவில் வசிக்கும் பிற குழந்தைகளைப் படிக்க வைப்பேன்” என்று சுய கற்றல் மையங்களில் குழந்தைகள் நாள்தோறும் உறுதிமொழி எடுப்பார்கள். இத்தகைய மையங்களை உருவாக்குவதற்கு எவ்விதச் செலவும் கிடையாது. இந்தப் புது முயற்சியால் குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பு நிச்சயமாக வலுப்பெறும், கல்வி கற்றலில் சமத்துவத்தை அடைய முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories