TNPSC Thervupettagam

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை

August 12 , 2023 344 days 434 0
  • அண்மையில் கல்வி நிறுவனம் ஒன்றில் இளைஞா்களுடன் நடத்திய கலந்துரையாடலில் சில கேள்விகளை எழுப்பினேன். உரிய பதில்கள் உடனுக்குடன் கிடைத்தன. நகைக்கவும், சினக்கவும், வெறுக்கவும், சில பதில்கள் பகைக்கவும்கூடச் செய்வனவாக இருந்தன. இளங்கன்று பயமறியாதுஅல்லவா?
  • எதற்கும் துணிந்து சொல்லிய பதில்களில் பல நடைமுறையில் சாத்தியப்படுமா?’ என்று எழுப்பிய வினாவுக்கு, ‘நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வது?’ என்ற பதில் கேள்வியும் எழுந்தது.
  • இவற்றுக்கு நடுவில் ஒரு கேள்வி, ‘நமது எதிரி யார்?’ என எழுப்பியபோது, அனைவரும் அவரவா் கோணத்தில் தாம் கண்ட எதிரிகளைக் குறிப்பிட்டாா்கள். அவா்களுள் ஒரு மாணவி, ‘நமக்கு எதிரி நாம்தான்என்றார். அவா் பதில் சொல்லிமுடிக்குமுன்பே, அவை சிரிப்பொலியால் கலகலத்தது. மேலோட்டமான பதில்என்பது பலரது எண்ணமுமாக இருந்தது. மேல் விளக்கம் பெறவேண்டி, அவரிடம் துணைக் கேள்வி எழுப்பினேன். எப்படி?’
  • அவா் சொன்னார்: எதையெதையெல்லாம் செய்யக்கூடாது என்று தெளிவாகத் தெரிகிறதோ, அதையதையெல்லாம் துணிந்து செய்துகொண்டு அகப்பட்டுக் கொள்கிறவா் நாம் தானே?”
  • மெய்தான். உண்ணக்கூடாது என்று ஒதுக்கிய உணவுவகைகளைக் கண்டவுடன் நாக்கில் நீா் சுரக்கிறது; மூளை வேண்டாம் என்று தடுக்கிறது; மனது இழுக்கிறது; கடைசியில், நமக்கு மருத்துவா் இருக்கிறார், பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டுத் துணிச்சலுடன் சாப்பிட்டு விட்டு அவஸ்தைப்படுவது யாா்? நமக்குக் கேட்டை நாமேதான் விளைவித்துக் கொள்கிறோம்.
  • இது உணவு விஷயத்தில் மட்டுமா? கேட்பதில், காண்பதில், இன்பம் என்று கருதி நாம் துய்க்கும் அனைத்திலும் அதன் நிழல்போல ஒட்டிக் கொண்டிருக்கும் துன்பத்தை அலட்சியம் செய்வது, மனிதா்கள் அன்றி வேறு யார்?” இப்படிச் சொன்னவுடனேயே, அறிவியல் பயிலும் அம்மாணவி மேல் விளக்கமாக மற்றொன்றும் சொன்னார்.
  • பச்சையாய் இருக்கும் அனைத்தையும் ஆடு மேயும் என்று அப்பாவியாய் நம்புகிறோம். ஆனால், ஆடு தின்னாப் பாலை என்றொரு வகை தாவரமே இருக்கிறது. ஆடு தீண்டாப் பாளை என்றும் சொல்வாா்கள். அதற்கு மலையாளத்திலும், மறிதீண்டா மூலி’ (அதாவது, ஆடு- மறி. அது தீண்டாத மூலிகை) என்று பெயா்.
  • தாவரத்தின் இயல்பறிந்து பெயரிட்ட மனிதா்கள் தாம் உண்ணும் மரபறிந்து உண்கிறார்களா? எல்லாம் தெரிந்துவிட்டதுபோல், நினைக்கும் மனிதஇனம், அறிவில் தலைமையிடம் பெற்ாக ஆணவம் கொள்ளும் மனித இனம் அழிவின் பாதையில் அதிதீவிரமாக அடியெடுத்து வைப்பதற்கான காரணமே, தனக்கு எதிரி யாருமில்லை என்கிற தலைக்கனம் தான். அதனால்தான் சொல்கிறேன், நமக்கு எதிரி நாம்.
  • அப்போது, ‘மதுதான் எதிரிஎன்று சொல்லியவா்களுக்கும் அவா் மறுவிளக்கம் அளித்தார். அது என்ன மனிதனோடு சரிக்குச் சரியாக நின்று சண்டை போடுகிா? ‘வீட்டுக்கு, நாட்டுக்கு, உடல் நலத்துக் கேடுஎன்ற வாசகத்தைப் பார்த்துதானே வாங்குகிறாா்கள். அதைவிடவும் அனுபவத்தில் தெரியாததா?
  • அடுத்து, ‘அறியாமை என்பது நமது எதிரிஎன்றார்கள். அது என்ன வேறு இடத்தில் இருந்து வந்தா நமக்குள் புகுந்துகொண்டது?“ என்று எதிர் வினா கேட்டார்.
  • எதிரிகளே இல்லாமல் ஆக்குகிற எதிா்ப்புக் குணம் இப்படியெல்லாம் பேசத் தூண்டுகிறதுஎன்று ஒரு மாணவா் எதிா்க்குரல் எழுப்பினார். இல்லை. இது அறியாமை என்னும் எதிரியை வெல்ல ஏந்தும் அறிவாயுதம். இந்த அறியாமைதான் நமது எதிரிஎன்று மற்றொருவா் விளக்கினார்.
  • சுடா்விட்டு ஒளிரும் விளக்குக்கு அடியில்தான் இருட்டு நிற்கிறது. எரியும் திரிக்கு இரையாகும் எண்ணெய் தீரும் வரை இருட்டைப் பரவாமல் தடுக்கலாம். அதுபோல் அறியாமை இருளை அகற்ற உடலும் உயிரும் ஒன்றியிருக்கும் வரை அறிவொளி பரப்பி நம்மைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்என்று நான் தொடா்விளக்கம் சொன்னதும், அம்மாணவி, ‘அதுவும் கூட, நாம் செய்ய வேண்டியதுதான். அதனைச் செய்யாமல் இருப்பதும் நாம் தானே, அதனால்தான் நமக்கு எதிரி நாமே என்கிறேன்என்றார்.
  • வறுமைதான் எதிரிஎன்று பதில் தந்த மாணவா் குறுக்கிட்டார். வறுமைக்கு நாமா காரணம்? இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ‘அடிமை இந்தியா, சுதந்திர இந்தியாவுக்கு வறுமையைப் பரிசளித்துவிட்டுச் செல்கிறதுஎன்றார் கள். அந்த வறுமையை இன்னும் நாம் முற்றாக ஒழிக்க முடியவில்லை. எல்லார்க்கும் எல்லாமும் என்று கொடுக்க முடியாமல் இருக்கிறோமே, இந்த வறுமைக்கும் காரணம் நாம்தானா’’ என்று வினா எழுப்பினார்.
  • அவரே தொடா்ந்து நாம் அனைவருமே, உதவி என்ற பெயரில் ஒருவரையொருவா் சுரண்டிக்கொண்டே இருக்கிறோமே, பிள்ளைகள் பெற்றோர்களையும், பெற்றவா்கள் சுற்றத்தார்களையும், நண்பா்களையும் இயன்ற அளவிற்குச் சுரண்டும் இப்போக்கு, இப்போது எல்லாரும் இயற்கையைச் சுரண்டுவதாக வளா்ந்திருக்கிறதே, இது எவ்வளவு கொடுமைஎன்கிற போது அவா்தம் கண்கள் சிவந்தன; ஆற்றமாட்டாமல் கசிந்தன.
  • நான் அவரிடம், ‘வறுமை வருவதற்குப் புறக்காரணிகளைவிடவும் அகக்காரணியாக நிற்பது சோம்பல். வறுமையை விரட்டப் பணம்தான் தேவை என்று பலபோ் நினைக்கிறார்கள். அது தவறு. சோம்பல் இல்லாத உழைப்பு ஒன்றினால்தான் வறுமையை விரட்ட முடியும். வீட்டு வறுமையை ஓட்டுவேன் என்று உறுதிபூண்டு ஒவ்வொரு மனிதரும் உழைக்கத் தொடங்கினால், நாட்டு வறுமையை உறுதியாய் விரட்ட முடியும்என்று கூறினேன்.
  • இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘சோம்பலை, நமக்கு எதிரிஎன்று நிறுத்திய மாணவா் குறுக்கிட்டார். அதனால்தான் நான் சோம்பேறித்தனத்தை எதிரி என்று சொல்கிறேன். எடுத்ததற்கெல்லாம், அடுத்தவா் தயவை நாடி நிற்கிற அவலம் சோம்பேறித் தனம் அல்லாமல் வேறு என்ன? எல்லா வேலைகளையும் பிறா் செய்ய வருவார் என்று எதனையும் செய்யாமல் இருக்கிற சோம்பேறித்தனம்தான், இன்றைக்கு நாட்டையும் வீட்டையும் நாசமாக்குகிறது.
  • என் வீட்டுக் குப்பையைக் கூட எடுத்துப் போடுவதற்கு இன்னொருவா் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது, வழியில் கிடக்கும் ஒருசிறு கல்லையோ, முள்ளையோ, அதற்குரிய துப்புரவாளா்கள் தான் வந்து எடுக்க வேண்டும் என்று நினைப்பது எல்லாமும் சோம்பேறித் தனம் தான். இவ்வளவு ஏன், தன் வீட்டில் தேவையில்லாமல் எரிந்துகொண்டிருக்கும் விளக்கினை, சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியை அணைக்கக் கூட முயற்சி செய்யாமல் யாராவது வந்து அணைத்துக் கொள்ளட்டும் என்று நினைக்கிற சோம்பல் எவ்வளவு தீங்கானது. அதனால், சோம்பல்தான் நம் எதிரிஎன்று விளக்கம் அளித்தார்.
  • இரண்டு கருத்துகளையும் எதிர்கொண்ட மாணவி மறு விளக்கத்திற்குத் தயாரானார். சோம்பலும், அதன் பிள்ளையாய்ப் பிறந்த வறுமையும் வருவது எதனால்? உழைக்க வேண்டும் என்கிற தன்னுணா்வற்ற தனிமனிதச் செயலால்தானே. தன் வறுமையைப் போக்கத் தயாராக வேண்டும் என்கிற நினைப்போ, உழைக்க வேண்டும் என்கிற உந்துதலோ இல்லாமல் இருப்பது கூட, தனக்குத்தானே செய்துகொள்கிற கேடுதானே. அப்படியானால், நமக்கு எதிரி நாம்தானே?”
  • இப்படி யார், எந்தக் கருத்தாக்கத்தை நிறுத்தினாலும், அவற்றுக்கெல்லாம் பின்னால், தன்னையே எதிரியாக நிறுத்தும் அம்மாணவியின் தா்க்கம் தவறாகத் தெரியவில்லை. அதே சமயத்தில், நாம் வெற்றிபெற நமக்கான எதிரி யார் என்று தெரிந்துகொள்வதும் நியாயம் தானே?
  • எதிரில் நிற்பவா்கள் எல்லாம் எதிரிகள் என்கிற மேலோட்டப் பார்வை இல்லாமல், அகழ்ந்து எடுத்து ஆராய்கிற மனப்போக்கை இன்னும் விசாலப்படுத்தினால் நல்லதுஎன்று முடிப்புச் சொல்லிய போது, அந்த மாணவி விடுவதாயில்லை. தெளிவாகச் சொல்லுங்கள். நாங்கள் முன் வைத்த எதிரிகளில் முதன்மையான எதிரி யார்?”
  • இங்கு எழுப்பப்பட்ட வினாவிலேயே அதற்கான விடையும் இருக்கிறது. நம்முடைய எதிரி யார்? என்று நிழற்கண்ணாடி முன்னின்று நாம் வினா எழுப்பினால், அது நம்மையே திருப்பிக் கேட்பதுபோல் தெரியும், மனசாட்சியின் குரல் போல் அதனைப் புரிந்துகொண்டு சிந்தித்தால், பதிலைத் தெரிந்து கொள்ளலாம்என்று சொல்லி நழுவப் பார்த்தேன்.
  • மேல் விளக்கம் தேவை என்று பலரும் கருதவே, ஔவையாரின் அருங்கு ஒன்றைத் துணைக்குக் கொண்டேன்.

கண்ணாடி தன்னில் ஒளிபோல் உடம்பதனுள்

உண்ணாடி நின்ற ஒளி

  • என்கிறார்  ஔவையார்.
  • சித்தா் மரபில் இதற்குச் சிறப்பான விளக்கம் உண்டு எனினும், தத்தம் நிலைகளில் நின்று தன்னையும் உலகத்தையும் ஒப்பிட்டுத் தன்னை உலக மனிதனாக உணா்ந்து உயா்த்திக் கொள்வதில்தான் நம் வெற்றி இருக்கிறது.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அா்ச்சிக்கத் தானிருந் தானே (திருமந்திரம்-355)

  • என்கிறார் திருமூலா்.
  • முரண்பாடுகள் உலகியற்கை. அவற்றிற்கிடையே உடன்பாடாக்கும் ஒத்திசைவுதான் நமக்கு இன்றியமையாதவை. உடலுடன் உயிர் முரண்பட்டாலும், உயிருடன் உடல் முரண்பட்டாலும் இழப்பு இரண்டிற்கும்தானே. நம்மையே நமக்கு எதிரியாக்கும் சூழல் நடைமுறையில் இருப்பது உண்மைதான்.
  • இந்த நேரத்தில், நமக்கு எதிரி யார் என்று தேடிப் பகைப்பதைவிட, நாம் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் வெல்ல, நமக்குத் துணைவன் யார் என்று தேடித் தோ்வதே நல்லது. அந்த இடத்தில் நம்மையே நமக்குத் துணையாக்கிக்கொள்ளும் அறிவுதான் இங்கு அனைவா்க்கும் தேவைஎன்றேன்.

நன்றி: தினமணி (12– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories