- தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசமைப்பு அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு, பால்புதுமையர் சமூகத்தினரை மட்டுமல்லாமல், பிறரைப் போல் அவர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கருதுவோருக்கும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
- ‘நவ்தேஜ் சிங் ஜோஹர் மற்றும் பிறர் எதிர் இந்திய ஒன்றியம்’ வழக்கில் தன்பாலின உறவு குற்றமல்ல என்று 2018இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி, தன்பாலின ஈர்ப்பு இணையர்கள், திருநர்கள், பால்புதுமைச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 20 மனுக்களின் மீதான உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வின் விசாரணை, கடந்த ஏப்ரலில் தொடங்கியது.
- முன்னதாக, தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்றும், இது தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது; நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்றும் மத்திய அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
- இப்போது தீர்ப்பு வழங்கியுள்ள ஐந்து நீதிபதிகளும், திருமணம் செய்துகொள்வது இந்தியாவில் அடிப்படை உரிமை அல்ல என்று கூறியுள்ளனர். திருமணச் சட்டங்களைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கே உரிமை உள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் மதம், சாதி, சடங்குகள் கடந்த திருமணங்களைப் பதிவுசெய்வதற்கான சிறப்புத் திருமணங்கள் சட்டம் 1954ஐ, தன்பாலின இணையர்களின் திருமணத்தையும் உள்ளடக்குவதாகத் திருத்தி அமைப்பதற்கான கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். ஏற்கெனவே உள்ள சட்டங்களின்படி, திருநர்களுக்கு தங்கள் எதிர்பாலின இணையரைத் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது என்பதை ஐந்து நீதிபதிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
- தன்பாலின இணையர்களுக்குக் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமையை வழங்குவது, திருமணத்தின் வழியாகக் கிடைக்கும் பிற பயன்களை அவர்களுக்கு அளிப்பது ஆகியவற்றுக்கு ஆதரவான தீர்ப்பை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் இருவரும் அளித்துள்ளனர். ஆனால், பிற மூன்று நீதிபதிகளும் இந்த உரிமைகளுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளதால் 3-2 என்னும் பெரும்பான்மைக் கணக்கில் தன்பாலின இணையர்களுக்கு அந்த உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.
- தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு என்னென்ன உரிமைகளை வழங்கலாம் என்பது குறித்து நாடாளுமன்றம் சார்பில் குழு அமைக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படும் என்கிற மத்திய அரசின் வாக்குறுதியை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று தற்போதைய அரசு தெளிவாகக் கூறிவிட்ட நிலையில், நீதிமன்றம் இந்த விவகாரத்தை அரசின் முடிவுக்கே விட்டிருப்பதன் மூலம், தமது உரிமைகளுக்கான போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகப் பால்புதுமையர்களும், செயல்பாட்டாளர்களும் கருதுவதைப் புறக்கணித்துவிட முடியாது.
- அதே நேரம், தன்பாலின ஈர்ப்பு என்பதும் இயற்கையானதுதான்; தன்பாலின இணையர்கள் மீது எந்த வகையிலும் பாகுபாடு காண்பிக்கப்படக் கூடாது என்று ஐந்து நீதிபதிகளும் உறுதிப்படுத்தியிருப்பது ஆறுதலுக்குரியது.
- தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான உரிமைகள் குறித்துப் பரிசீலிப்பதற்காக மத்திய அரசு அமைக்கவிருக்கும் குழுவுக்கு நீதிபதிகளின் இந்தக் கருத்துகள் வழிகாட்டும் விளக்காக அமைய வேண்டும். தன்பாலின ஈர்ப்பு இயற்கையானது என்னும் விழிப்புணர்வு, சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். தாமும் பிறரைப் போல் சமமாக நடத்தப்படுகிறோம் என்னும் நம்பிக்கையைத் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அளிப்பது அரசு, சமூகம் இருவரின் கடமை!
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 10 – 2023)