TNPSC Thervupettagam

தமிழக ஒலிம்பிக் முகங்கள்

July 12 , 2024 182 days 270 0
  • உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்க உள்ளன. பெருமைமிகுந்த இந்தப் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பலரும் தகுதி பெற்றிருக்கிறார்கள்.

சரத் கமல்:

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வதன் மூலம் ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் முதல் தமிழக வீரர் என்கிற பெருமையை, சரத் கமல் பெற உள்ளார். 41 வயதான அவர், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலேயே பங்கேற்றவர்.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் ஒற்றையர், கலப்பு, ஆடவர் அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கமும், 2023 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் வென்று அசத்தியிருக்கிறார். இவருடைய சாதனை பக்கங்களில் ஒலிம்பிக் பதக்கம் மட்டும் இன்னும் வந்துசேரவில்லை. டேபிள் டென்னிஸில் தேர்ந்த அனுபவம் உள்ள சரத் கமல், இந்த முறை அதைச் சாதித்துக்காட்டுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இளவேனில் வாலறிவன்:

  • கடலூரைப் பூர்விகமாகக் கொண்ட 24 வயதான இளவேனில் வாலறிவன், 2018இல் சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று, மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். 2019இல்ரியோடி ஜெனிரோவில் முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே இளவேனில் தங்கம் வென்றது பேசப்பட்டது.
  • கடந்த 6 ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை, ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப், ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப், ஜூனியர் உலகக் கோப்பை எனச் சர்வதேசத் தொடர்களில் 11 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என வாங்கிக் குவித்திருக்கிறார். இந்த முறை அவருடைய வெற்றிப் பட்டியலில் ஒலிம்பிக் பதக்கமும் சேர வேண்டும்.

பிரவீன் சித்திரவேல்:

  • ஒலிம்பிக்கில் தடகளம் மும்முறை தாண்டுதல் பிரிவுக்குத் தஞ்சாவூரைச் சேர்ந்த 23 வயதான பிரவீன் சித்திரவேல் முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ளார். தரவரிசைப் பட்டியலில் உலகளவில் 23வது இடம் பெற்றதன் மூலம் பாரிஸ் செல்ல பிரவீனுக்கு வாய்ப்புக் கிடைத்தது.
  • 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், 2023 ஆசிய உள்ளரங்கவிளையாட்டுப் போட்டியில் வெள்ளி எனக் கவனிக்க வைத்துள்ளார். கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற ‘ப்ரூபா டி கான்ஃப்ரான்டேசியன் தடகள மீட்’டில் 17.37 மீ.தூரம் கடந்து சாதனை படைத்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள ஒரு வீரர்.

பிரித்விராஜ் தொண்டைமான்:

  • ஷாட்கன் எனப்படும் பறந்து செல்லும் தட்டுகளைக் குறிபார்த்துச் சுடும் போட்டிக்குத் தமிழ்நாட்டிலிருந்து பிரித்விராஜ் தொண்டைமான் தேர்வாகியுள்ளார். இவர் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஷாட்கன் டிராப் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர்.
  • 2023இல் தோஹாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். ஷாட்கன் உலகக் கோப்பைத் தொடரில் ஆடவர் டிராப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஷாட்கன் பிரிவுக்குத் தலைமையேற்றுள்ள பிரித்விராஜ், பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

சந்தோஷ் குமார் தமிழரசன்:

  • 2023 உலகத் தடகள சாம்பியன் ஷிப்பில் 400 மீ.தடை தாண்டும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 26 வயதான சந்தோஷ் குமார் தமிழரசன் இலக்கை 50.46 விநாடிகளில் கடந்து ஏழாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் கவனம் பெற்றார். 2023 ஆசியத் தடகள சாம்பியன்ஷிப்பில் 400 மீ.தடை தாண்டும் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.
  • இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர் என்கிற பெருமையைப் பெற்றார். 2023இல் சந்தோஷ் ஏற்பத்திய தாக்கத்தால் ஒலிம்பிக்கில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெஸ்வின் ஆல்ட்ரின்:

  • நீளம் தாண்டு தலில் தேசிய சாதனையாளரான தூத்துக் குடியைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின், தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றுள்ளார். 23 வயதான அவர், தேசிய அளவில் 8.42 மீ. வரை தாண்டி சாதித்திருக்கிறார். 2023இல் உலகத் தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஆல்ட்ரின், 12ஆவது இடத்தையே பிடித்தார். என்றாலும் அவருடைய விடாமுயற்சியும் பயிற்சியும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.

ராஜேஷ் ரமேஷ்:

  • திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராகப் பணியாற்றிக் கொண்டே தடகளத்தில் தடம் பதித்தவர் ராஜேஷ் ரமேஷ். 25 வயதான இவர், தடகளத்தில் உள்ளூர், தேசியம், சர்வதேசம் எனப் பதக்கங்களைக் குவித்தவர். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4000 மீ.தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அணியில் இடம்பிடித்தவர். அந்த வெற்றி அவருக்கும் அணிக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பைப்பெற்று தந்தது.

வித்யா ராம்ராஜ்:

  • தடகளத்தில் 25 வயதான கோவையைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ்,2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீ. தடை தாண்டும்ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன் தகுதிச் சுற்றுப் போட்டியில், 55:42 விநாடிகளில் பந்தைய தூரத்தைக் கடந்து, பி.டி. உஷாவின் 38 ஆண்டு கால தேசிய சாதனையைச் சமன் செய்தவர்.
  • அதுமட்டுமல்ல, 400 மீ. தொடர் ஓட்டத்தில், பெண்கள், கலப்புப் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களைத் தட்டிச் சென்ற அணிகளில் இடம்பிடித்திருந்தார். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் 400 மீ. தொடர் ஓட்டப் பிரிவில் பங்கேற்கிறார்.

சுபா வெங்கடேசன்:

  • திருச்சியைச் சேர்ந்த 24 வயதான தடகள வீராங்கனை சுபா வெங்கடேசனுக்கு இது இரண்டாவது ஒலிம்பிக் தொடர். டோக்கியோவில் தகுதிச்சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியில் சுபா இடம்பிடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்றிருக்கும் இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் 4000 மீ. தொடர் ஓட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

விஷ்ணு சரவணன்:

  • டோக்கியோ ஒலிம்பிக்கைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஷ்ணு சரவணன் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்கஉள்ளார். பாய்மரப் படகு விளையாட்டுப் பிரிவில் (ஐசிஎல்ஏ 7), உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கிறார் விஷ்ணு. பாய்மரப் படகுப் போட்டியை, “தண்ணீரில் விளையாடும் செஸ் போட்டி” என வர்ணிக்கும் அவர், பாரிஸ் கடற்கரையில் போட்டியை எதிர்கொள்வது சவாலானது எனத் தெரிவித்துள்ளார்.

நேத்ரா குமணன்:

  • விஷ்ணுவைப் போலவே டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு பாரிஸ் ஒலிம்பிக்கிலும்நேத்ரா தகுதி பெற் றுள்ளார். 2020இல் பாய்மரஉலகக் கோப்பைப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற சிறப்பைப் பெற்றவர்.
  • சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன், தொடர்ச்சியாக ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டிக்குத் தகுதிப்பெற்ற முதல் இந்திய வீராங்கனையாகவும் சாதித்திருக்கிறார். தற்போது பிரான்சின் கடற்கரை நகரமான மார்சேல்ஸ் நகரில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர், இம்முறை நிச்சயமாக அடுத்த கட்டத்தை எட்டலாம்.

என். ஸ்ரீராம் பாலாஜி:

  • டென்னிஸ் விளை யாட்டில் சீனியரான ரோஹன் போபண்ணா, உலக இரட்டையர் தரவரிசையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இதனால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்ச்சி பெற்ற அவர், தன்னுடன் இணைந்து விளையாடும் சக வீரரை அவரே தேர்வு செய்யலாம்.
  • அதன்படி இரட்டையர் தரவரிசையில் 64ஆவது இடத்தில் இருக்கும் கோவையைச் சேர்ந்த ராம் பாலாஜியை, போபன்னா தேர்வு செய்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜியை அவர் தேர்வு செய்திருப்பதால், இந்த இணையின் மீது எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories