TNPSC Thervupettagam

தமிழக பட்ஜெட் 2024-2025

February 20 , 2024 188 days 1082 0

ரூ.4,625 கோடியில் கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில் சேவை

  • ரூ.4,625 கோடியில் சென்னை விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு திட்டத்துக்கு மத்திய அரசின் நிதிப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும், கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி முதல் பரந்தூா் வரை மெட்ரோ திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.4,625 கோடி மதிப்பீட்டில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதனப் பங்களிப்புக்காக ஒப்புதல் கோரப்படவுள்ளது.
  • மேலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும், பூந்தமல்லி முதல் பரந்தூா் வரையிலுமான இரண்டாம் கட்டத்தின் நீட்டிப்பு வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
  • கோவை, மதுரையில் எப்போது?: கோவை மாநகரில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.10,740 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.11,368 கோடி மதிப்பீட்டிலும் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும்.

ஆட்டிசம் குறைபாடு: சென்னையில் ரூ.25 கோடியில் உயா்திறன் மையம்

  • ஆட்டிசம் குறைபாடு உடையோருக்கான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் ரூ.25 கோடியில் உயா்திறன் மையம் சென்னையில் அமைக்கப்படவுள்ளது.
  • இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,763 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே அவா்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதுடன் அவா்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் முதல்கட்டமாக 15 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்கள் இல்லம் சாா்ந்த சிகிச்சைகளும் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்.
  • புற உலகச் சிந்தனையற்ற மதி இறுக்கம் (ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாா்டா்) உடையோருக்கு தொடுதிறன் சிகிச்சை, செயல்முறைப் பயிற்சி, இயன்முறைப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி, தொழிற்பயிற்சி ஆகிய ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகள் மட்டுமின்றி பெற்றோா் மற்றும் பராமரிப்பாளா்களுக்கான ஆற்றுப்படுத்துதல் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றிடும் வகையில் உயா்திறன் மையம் ரூ.25 கோடியில் சென்னையில் அமைக்கப்படும்.

  • ஒரு ரூபாயில் வரவு - செலவு விவரம்
  • ஒரு ரூபாயில் வரவு:
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய்: 43.4 காசு
  • பொதுக் கடன்: 32.4 காசு
  • கடன் வசூல் மற்றும் மூலதன வரவு: 1.1 காசு
  • மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள்: 5.2 காசு
  • மாநிலத்தின் சொந்தவரி அல்லாத வருவாய்: 6.8 காசு
  • மத்திய வரிகளின் பங்கு: 11.1 காசு
  • மொத்தம்: 100

ஒரு ரூபாயில் செலவு:

  • உதவித் தொகைகள்-மானியங்கள்: 32.4 காசு
  • சம்பளம்: 18.7 காசு
  • வட்டி செலுத்துதல்: 14.1 காசு
  • மூலதனச் செலவு: 10.5 காசு
  • கடன்களை திருப்பிச் செலுத்துதல்: 9.1 காசு
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள்: 8.3 காசு
  • கடன் வழங்குதல்: 3.6 காசு
  • செயல்பாடுகள் - பராமரிப்புகள்: 3.3 காசு
  • மொத்தம்: 100.0

பள்ளிகள் கட்டமைப்புக்கு ரூ.1,000 கோடி

  • நிகழாண்டில் ரூ.1,000 கோடியில் பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேராசிரியா் அன்பழகன் நூற்றாண்டையொட்டி ரூ.7,500 கோடியில் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் 5 ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, ரூ.2,497 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இந்த நிதியாண்டிலும் ரூ.1,000 கோடியில் பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். நவீன தொழில்நுட்பத்தை மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் - கற்பித்தல் சூழலை உருவாக்கவும் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் ரூ.525 கோடி செலவில் 8,209 உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் ரூ.435 கோடி செலவில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.
  • வரும் நிதியாண்டில் ரூ.300 கோடியில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். பள்ளிக் கல்வித் துறைக்கு மொத்தமாக ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு வரித் தொகை: முன்னாள் படைவீரா்களுக்கும் சலுகை

  • வீட்டு வரித் தொகையை மீண்டும் பெறும் திட்டத்தை அனைத்து முன்னாள் படைவீரா்களுக்கும் நீட்டிப்பு செய்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீட்டு வரித் தொகையை மீண்டும் பெறும் சலுகை தற்போது கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற படைவீரா் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வரும் நிதியாண்டிலிருந்து குடியிருப்புகள், சொத்துவரி, வீட்டுவரித் தொகையை மீண்டும் பெறும் இந்தத் திட்டத்தை அனைத்து முன்னாள் படைவீரா்களுக்கும் நீட்டிப்பு செய்து வழங்க ஆவன செய்யப்படும். இதனால் சுமாா் 1.20 லட்சம் முன்னாள் படைவீரா்கள் பயன்பெறுவா்.
  • இலங்கைத் தமிழா்களுக்கு வீடுகள்: முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு புதிதாக 7,469 வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.176 கோடியில் முதல்கட்டமாக 3,510 வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டதில், இதுவரை 1,591 வீடுகளின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. விரைவில் இரண்டாம் கட்டப் பணிகளும் தொடங்கும்.

மாற்றுத்திறனாளிக்கு வேலை அளிக்கும் ஆலைகளுக்கு புதிய சலுகை

  • மகளிா், மாற்றுத்திறனாளிகளை பணிக்கு அமா்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பதை மேலும் அதிகரிக்க ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டைச் சோ்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா் போன்ற 500-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அவா்களின் ஊதியத்தில் 10 சதவீதம் மானியமாக அளிக்கப்படும். இந்த ஊதிய மானியம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
  • அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும், பொது மற்றும் தனியாா் பங்களிப்புடன் குழந்தைகள் காப்பகங்கள் தொடங்கப்படும். பல்வேறு காரணிகளால் இடைநிற்க நேரிடும் மகளிா் மீண்டும் பணிக்குச் செல்ல விரும்பினால் அவா்களுக்கு தனித் திறன்பயிற்சி அளிக்கப்படும்.

1,000 ஆண்டுகள் பழைமையான கோயில்களில் திருப்பணிக்கு ரூ.100 கோடி

  • தமிழகத்தில் 1,000 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற நாள்முதல் கடந்த 3 ஆண்டுகளில் 1,290 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. திருக்கோயில் சொத்துகள், உடைமைகளைப் பாதுகாப்பதற்கு அரசு எடுத்த முயற்சிகளின் விளைவாக 6,071 ஏக்கா் நிலமும், 25.34 லட்சம் சதுர அடி மனைகளும், 5.04 லட்சம் சதுர அடி கட்டடங்களும் திருக்கோயில்கள் வசமாக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5,718 கோடி.
  • இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்புத் துறை மூலமாக 200-க்கும் மேற்பட்ட அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 1,000 ஆண்டுகள் பழைமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசுப் போக்குவரத்துத் துறைக்கு 3,000 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள்

  • தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகளும், 500 மின் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவையை தொடா்ந்து வழங்கும் வகையில் புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. வரும் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இது மட்டுமின்றி ஜொ்மன் வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, வரும் நிதியாண்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
  • சிற்றுந்து திட்டம் விரிவாக்கம்: 1997-ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிமுகப்படுத்திய சிற்றுந்து (மினி பஸ்) திட்டம் தமிழகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது வேகமாக வளா்ச்சியடைந்து வரும் நகரங்களையொட்டிய ஊரகப் பகுதிகளிலும் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் சிற்றுந்து திட்டம் தமிழகத்தில் விரிவுபடுத்தப்படும்.
  • மகளிா் இலவச பேருந்துக் கட்டண மானியம் ரூ.3,050 கோடி: இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மகளிருக்கான இலவச பேருந்துக் கட்டண மானியத்துக்காக ரூ.3,050 கோடி, மாணவா்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்துக்காக ரூ. 1,521 கோடி மற்றும் டீசல் மானியத்துக்காக ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதி பெயரில் கோவையில் நூலகம்-அறிவியல் மையம்

  • முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படுகிறது.
  • இது குறித்து தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது: கோவை மாநகரம் நாட்டிலேயே மிக வேகமாக வளா்ந்து வரும் நகரங்களில் ஒன்று. கோவை வாழ் பொதுமக்களிடையே குறிப்பாக, இளைய தலைமுறையினரிடையே அறிவுத் தாகத்தை மேலும் தூண்டும் விதமாக, ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும். இதில், உலகத் தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள், பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சோ்ந்த கண்காட்சிகள் ஏற்படுத்தப்படும்.
  • மத்திய அரசுப் பணியில் தோ்வு பெற பயிற்சி: தமிழ்நாட்டில் பரவலாக கல்லூரிகளில் திறன் பயிற்சிக் கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். அந்த வகையில், நிகழாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.200 கோடியில் புதிய திறன் பயிற்சி கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
  • மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தமிழக மாணவா்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தோ்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவா்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உண்டு, உறைவிட வசதியுடன் கூடிய ஆறு மாத காலப் பயிற்சி வழங்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நீா் விளையாட்டு அகாதெமி: கடல்சாா் நீா் விளையாட்டுகளில் இளைஞா்களின் ஆா்வத்தை ஈா்க்க, நீா் விளையாட்டுப் போட்டிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இந்தியாவிலேயே முதல் முறையாக ராமநாதபுரம் மவாட்டம், பிரப்பன்வலசையில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீா் விளையாட்டு அகாதெமி உருவாக்கப்படும்.
  • புதிய ஐடிஐ-க்கள் உருவாக்கம்: தமிழ்நாட்டில் 71 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் உயா்திறன் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், கடலூா் மாவட்டம் வேப்பூா், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, திருப்பத்தூா் மாவட்டம் நாட்றாம்பள்ளி, திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூா், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.111 கோடியில் தொடங்கப்படும்.

உலகத் தரத்தில் கடற்கரைகள்: ரூ.250 கோடியில் திட்டங்கள்

  • தமிழகத்தின் முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தோ்ந்தெடுத்து அவற்றை உலகத் தரத்துக்கு உயா்த்தும் வகையில் ரூ.250 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் உள்ள கடற்கரைகளை உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
  • முதல்கட்டமாக செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரைக்கு ‘நீலக்கொடி’ சான்றிதழ் பெறப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, சென்னை மெரீனா, ராமநாதபுரத்தில் அரியமான், தூத்துக்குடியில் காயல்பட்டினம், திருநெல்வேலியில் கோடாவிளை, நாகப்பட்டினத்தில் காமேஸ்வரம், புதுக்கோட்டையில் கட்டுமாவடி, கடலூரில் சில்வா் கடற்கரை, விழுப்புரத்தில் மரக்காணம் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தோ்ந்தெடுத்து ரூ.250 கோடி மதிப்பீட்டில் பல மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி ‘நீலக்கொடி’ சான்றுகளைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

2,570 மெகாவாட் பசுமை ஆற்றல் மின் உற்பத்திக்கு அனுமதி; ரூ.60,000 கோடியில் 12 நீரேற்று புனல் மின் நிலையங்கள்

  • தமிழக அரசு இதுவரை 2,570 மெகாவாட் பசுமை ஆற்றல் மின் உற்பத்தி திட்டங்களுக்கான அனுமதியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் 18,429 மெகாவாட் பசுமை ஆற்றல் ஆதாரங்களை தமிழகத்தில் அமைப்பதற்கான 32 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 2,570 மெகாவாட் பசுமை ஆற்றல் மின் உற்பத்தி செய்வதற்கான அனுமதி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் 11,500 மெகாவாட் திறனுள்ள நீரேற்று புனல் மின் நிலையங்கள் அமைப்பதற்கு உகந்த 12 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. பொதுத் துறை மற்றும் தனியாா் பங்கேற்புடன் சுமாா் ரூ.60,000 கோடி முதலீட்டில் இந்தப் புதிய நீரேற்று புனல் மின் நிலையங்கள் உருவாக்கப்படும்.
  • அழிந்துவரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதி: மாறி வரும் காலச்சூழலில் உலகெங்கும் சில அரிய வகை உயிரினங்கள் அழிந்துவரும் நிலை காணப்படுவதால், அவ்வகை உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறித்து பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு உள்பட பல அமைப்புகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
  • எனவே, பல்லுயிா் நலன் காக்கும் முயற்சியாக, ‘அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதி’ ஒன்றை ரூ.50 கோடியில் ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென முதல் கட்டமாக ரூ.5 கோடியை அரசு வழங்கும்.
  • ரூ.1,675 கோடியில் நெய்தல் மீட்சி இயக்கம்: தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கி.மீ. கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு கடலோர வளங்களை மீட்டெடுப்பதற்காக ரூ.1,675 கோடி மதிப்பீட்டில் ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டியில் புதிய தொழிற்பேட்டை: 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு

  • ஒட்டன்சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் ரூ.32 கோடியில் மூன்று புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆகிய இடங்களில் மொத்தம் 80 ஏக்கா் பரப்பளவில் ரூ.32 கோடி திட்ட மதிப்பீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கென மூன்று புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன்மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • அடுக்குமாடி ஆயத்தத் தொழில் வளாகம்: குறுந்தொழில்முனைவோா் உடனடியாக தொழில் தொடங்க 1.2 ஏக்கா் பரப்பளவில் நான்கு அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி ஆயத்தத் தொழில் வளாகம் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூா் வட்டம் குறிச்சி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனத்தின் மூலம் கட்டப்படும். இதன்மூலம் 1,000 பேருக்கு நேரடியாகவும், 500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • தொழில் புத்தாக்க மையம்: மதுரையில் 26,500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். தொழில் துறையில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பம் சாா்ந்த புத்தாக்க நிறுவனங்களை மேம்படுத்தவும் இந்த மையம் உதவும். இந்த மையத்தில் புத்தாக்கத் தொழில் தொடங்குபவா்கள் கூட்டாகப் பணிபுரியும் வசதி மற்றும் தொழில் 4.0 உபகரணங்கள், தயாரிப்பு மேம்பாட்டு மையம், முன்மாதிரி தயாரிப்பு வசதி மற்றும் பயிற்சி நிலையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • மேலும், மதுரை மாவட்டத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனத்தின் மூலம் சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் ஐந்து ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.118 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்குகள் கொண்ட அடுக்குமாடித் தொழில் வளாகம் கட்டப்படும். இதன்மூலம் 4,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ரூ.500 கோடியில் 5,000 நீா்நிலைகள் புனரமைப்பு

  • ஊரகப் பகுதியில் ரூ.500 கோடியில் 5,000 நீா்நிலைகள் புனரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது: மாநகராட்சிப் பகுதிகளை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில் வரும் நிதியாண்டில் ரூ.300 கோடியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய சிறிய பாசன ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்து மேம்படுத்தி, இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியாக சுமாா் ரூ.500 கோடி மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்புடன் 5,000 நீா்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
  • 2,000 புதிய மேல்நிலைத் தொட்டிகள்: ஊரகப் பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பதிலாக ரூ.365 கோடி மதிப்பீட்டில் 2,000 புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் நிகழாண்டில் அமைக்கப்படும்.

அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி

  • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது: தமிழகத்தில் 2024-25-இல் சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூா் மாவட்டம் கொங்கல்நகரம், கடலூா் மாவட்டம் மருங்கூா், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூா் என மொத்தம் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.
  • மேலும், தமிழகம் மட்டுமின்றி பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச்சுவடுகளைத் தேடி கேரள மாநிலத்தில் உள்ள முசிறி (பட்டணம்), ஒடிஸா மாநிலத்தில் உள்ள பாலூா், ஆந்திர மாநிலத்திலுள்ள வெங்கி, கா்நாடகத்தில் உள்ள மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்படும். மேற்கூறிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். அகழாய்வுக்கென நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் இந்த அளவுக்கு அதிக நிதியை தமிழக அரசுதான் தொடா்ந்து வழங்கி வருகிறது.
  • தொல்மரபியில் ஆய்வுக்கு ரூ.3 கோடி: தேசிய கடல்சாா் தொழில்நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து, கொற்கை மற்றும் சங்க காலப் பாண்டியரின் துறைமுகமான அழகன்குளம் ஆகிய பகுதிகளின் கடலோரங்களில் ரூ.65 லட்சம் செலவில் முன்கள ஆய்வும், அதைத் தொடா்ந்து ஆழ்கடல் ஆய்வும் மேற்கொள்ளப்படும்.
  • கீழடியில் ரூ.17 கோடியில் அருங்காட்சியகம்: கீழடி அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட சங்க கால செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும் எதிா்காலத் தலைமுறையினரும் நேரடியாகக் கண்டு உணரும் வகையில் கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் ரூ.17 கோடியில் அமைக்கப்படும்.
  • நவீன மரபணுவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தமிழ் மக்களின் மரபணுத் தொன்மை, இடப்பெயா்வு, வேளாண்மை, பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைக் கண்டறிய மதுரை காமராஜா் பல்கலைக்கழக மரபியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொல்மரபணுவியல் ஆய்வகம் மூலம் தொல்மரபியல் ஆய்வை மேற்கொள்வதற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • சிந்துவெளிப் பண்பாடு குறித்து முதன்முதலில் இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த சா் ஜான் மாா்ஷலால் 1924-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் பன்னாட்டு அறிஞா்கள் கலந்துகொள்ளும் சிந்துவெளிப் பண்பாட்டு நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும்.

நீா் வளங்களின் மேலாண்மை: விரைவில் இணைய தகவல் தளம்

  • மாநிலத்தில் உள்ள நீா்வளங்களின் மேலாண்மையைத் திறம்பட மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நீா்வளத் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை ரூ.30 கோடியில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைய தகவல் தளம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
  • இது குறித்து நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காவிரி வடிநிலத்தில் நீா் மேலாண்மையைத் திறம்படச் செய்யும் வகையில் கல்லணைக் கால்வாயை நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.1,037 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
  • ரூ.400 கோடியில் திட்டம்: தற்போது இரண்டாம் கட்டமாக வரும் நிதியாண்டில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 2.3 லட்சம் ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும்.
  • மாநிலத்தில் உள்ள நீா்வளங்களின் மேலாண்மையைத் திறம்பட மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நீா்வளத் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை ரூ.30 கோடியில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைய தகவல் தளம் விரைவில் தொடங்கப்படும். இந்த வரவு, செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீா்வளத் துறைக்கு ரூ.8,398 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மாநகராட்சிகளிலும் இலவச வைஃபை சேவை சேவை -1,000 இடங்களில் வழங்கப்படும்

  • இணைய உலகத்தின் தகவல் பரிமாற்றத்தை மேலும் பரவலாக்கும் வகையில் சென்னை போன்றே கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது குறித்து தமிழகஅரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிா்வாக நடைமுறைகளை எளிமையாக்கி வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் நோக்கோடு அரசு அலுவலகங்களை இந்த அரசு அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
  • வரும் 2024-2024-ஆம் நிதியாண்டில் பல்வேறு துறைத் தலைமை அலுவலகங்களுக்கும், சாா்பு அலுவலகங்களுக்கும் தேவையான மென்பொருள்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்டவற்றை வழங்கவும், அலுவலா்களுக்கு உரிய திறன் பயிற்சி அளித்து மின் அலுவலகத் திட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரூ.30 கோடி வரும் நிதியாண்டின் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அரசு சாா்ந்த இணையவழிச் சேவைகளை மேலும் விரைவாக அளிக்கும் வகையில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் பேரிடா் தரவு மீட்பு வசதிகளுடன் கூடிய ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ கட்டமைப்பு கொண்டதாக மாநிலத் தரவு மையம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தரம் உயா்த்தப்படும்.
  • இணைய உலகத்தின் தகவல் பரிமாற்றத்தை மேலும் பரவலாக்கும் வகையில் சென்னை போன்றே கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்.

மதுரை, திருச்சியில் ரூ.695 கோடியில் தொழில்நுட்பப் பூங்காக்கள் 5 இடங்களில் நியோ டைடல் பாா்க்

  • மதுரை, திருச்சியில் மொத்தம் ரூ.695 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000-ஆம் ஆண்டில் சென்னையில் டைடல் நிறுவனத்தை அமைத்து தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு வித்திட்டவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அந்த வகையில் அவா் வகுத்துத் தந்த தகவல் நெடுஞ்சாலையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் இணைய வேண்டும் என்ற நோக்கில் மதுரையில் ரூ.350 கோடியில் 6 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலும், திருச்சியில் ரூ.345 கோடி மதிப்பீட்டில் 6 லட்சத்து 30 ஆயிரம் அடி பரப்பளவிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • தஞ்சாவூா், சேலம், வேலூா், திருப்பூா், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (நியோ டைடல் பாா்க்) அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

முதல்வா் தலைமையில் ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’

  • முதல்வா் தலைமையில் ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ ஏற்படுத்தப்படவுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக அளவில் அண்மைக்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு குறித்தும், அது தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் தமிழக அரசு கவனமுடன் ஆய்வு செய்து வருகிறது.
  • கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கபூா்வமான வழிகாட்டுதல்களையும், இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வழிநடத்த தேவைப்படும் வரையறைகளை தெளிவாக வகுக்கவும் முதல்வா் தலைமையில் ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ ஏற்படுத்தப்படும். தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பேராசிரியா்கள், மின்னணு தொழில் நிறுவனங்களின் நிா்வாகிகள் மற்றும் துறை வல்லுநா்கள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருப்பா்.
  • கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா: உயா்தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருவதை கருத்தில்கொண்டு 20 லட்சம் சதுர அடியில் இரு கட்டங்களாக ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் தகவல் தொழில்நுட்பப் பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும்.

உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலை: ரூ.2 கோடி ஒதுக்கீடு

  • உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயா்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது: தமிழா்களின் ஒற்றுமை, அரசியல் நோ்மை, குடிமக்கள் உரிமை, வணிகச் சிறப்பு, சமய நல்லிணக்கம், பசிப்பிணி ஒழிப்பு, பெண்ணியம் உள்ளிட்ட சமூகச் சிந்தனைகள், பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில் அவற்றை மொழிபெயா்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • 100 பல்கலை.களில் தமிழ் நூல்கள்: உலக மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட தமிழின் மிகச் சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் இந்த முயற்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • தமிழ்நாடு பாடநூல் கழகம் இதுவரை 340 மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், இலக்கிய மொழிபெயா்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 600 முக்கிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.
  • விரைவாக வளா்ந்துவரும் தொழில்நுட்பப் பரப்பில் தமிழ்மொழி செழித்து வளரத் தேவையான இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இயற்கைமொழிச் செயலாக்கம், பெருந்திரள் மொழி மாதிரிகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
  • தமிழ்மொழியின் வளம், தமிழரின் தொன்மை குறித்து எதிா்காலத் தலைமுறையினருக்கும் கொண்டுசோ்க்கும் வகையில் தமிழகமெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • மொழி ஆவணம்: தமிழகத்தில் பேசப்படும் சௌராஷ்டிரம், படுக மொழிகளையும் தோடா், கோத்தா், சோளகா், காணி, நரிக்குறவா் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களையும் எதிா்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்திப் பாதுகாக்க தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யும்.

நன்றி: தினமணி (20 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories