TNPSC Thervupettagam

தமிழக மாவட்டங்கள் பிரிந்த வரலாறு!

July 31 , 2019 1945 days 3752 0
  • தமிழகத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1960-இல் சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம், தென்னார்க்காடு மாவட்டம், சேலம் மாவட்டம், கோவை மாவட்டம், நீலகிரி மாவட்டம், திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், மதுரை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் என 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அதன்பின், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் தனியாகப் பிரிந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் புதுக்கோட்டை, ஈரோடு என பிரிந்தது. இதுதான், தமிழகத்தின் மாவட்டங்கள் பிரிந்த காலகட்டம்.
    தமிழகத்தில் என்றில்லை. இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்படுவதும், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டும் புதிய மாவட்டங்கள் உருவாவதும் புதிதொன்றுமல்ல. தமிழகத்திலும் மாவட்டங்கள் தொடர்ந்து பிரிக்கப்பட்டு, சிறிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. இவை நிர்வாக வசதிக்காக மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன என்பதை மறுக்க இயலாது.
    எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்தான் மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டது. முதன் முதலாக ஈரோடு மாவட்டத்துக்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்.ஜி.ஆர். நெல்லை மாவட்டத்தைப் பிரித்து, தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது நெல்லை மாவட்டத்துக்கு, கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் சூட்டினார்.
    நெல்லை மீது பற்றுகொண்ட அந்த ஊர் மக்கள், நெல்லை என்ற பெயரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து,“நெல்லை கட்டபொம்மன் மாவட்டம்”என்று அழைக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
    அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்துக்கு காமராஜர் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்.ஜி.ஆர். சிவகங்கை மாவட்டத்தை பசும்பொன் தேவன் திருமகனார் மாவட்டம் என்று அறிவித்தார்.

அண்ணா மாவட்டம்

  • திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியது விவாதப் பொருளானது. அண்ணா பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்துக்குத்தான் அண்ணா பெயர் சூட்ட வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை வைத்தார். பின்னர் 1989-இல் கருணாநிதி முதல்வரானதும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று இருந்ததை நீக்கினார். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செங்கை அண்ணா மாவட்டம் என்று அண்ணாவின் பெயரைச் சூட்டினார்.
  • மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு நாகை காயிதே மில்லத் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது. பின் சம்புவரையர் பெயரில் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இப்படி பல தலைவர்களின் பெயர்களில் தமிழக மாவட்டங்கள் இருந்தன.
  • 1996 காலகட்டத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரங்களால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி அனைத்துத் தலைவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன.
    தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி, தென்காசி மாவட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி , செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், வாசுதேவநல்லூர், சிவகிரி , ஆலங்குளம் ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய புதிய மாவட்டமாக உருவாகியுள்ளது. மேற்காணும் தாலுகாக்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள்.
  • 1966-ஆம் ஆண்டு முதல்...
    • 1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம்;
    • 1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம்;
    • 1979:கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம்;
    • 1985: மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள்;
    • 1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம்;
    • 1989:வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்;
    • 1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்;
    • 1993: தென்னார்க்காடு மாவட்டத்தைப் பிரித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்;
    • 1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள்;
    • 1996:மதுரை மாவட்டத்தைப் பிரித்து தேனி மாவட்டம்;
    • 1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து நாமக்கல் மாவட்டம்;
    • 1997: செங்கல்பட்டு மாவட்டத்தைப் பிரித்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்;
    • 2004: தருமபுரி மாவட்டத்தைப் பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம்;
    • 2007:பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து அரியலூர் மாவட்டம்;
    • 2009: கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம்;
    • 2019:விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டமும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1960, 1970-களில்

  • என்னதான் இருந்தாலும் 1960, 1970-களில் இருந்த திருநெல்வேலி மாவட்டம், தெற்கு சீமை என்ற புவியியல் கம்பீரத்தை இழந்ததை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் (விருதுபட்டி), சாத்தூர், ராஜபாளையம் ஆகிய வட்டாரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. எத்தனை மாவட்டங்களாகப் பிரிந்தாலும் திருநெல்வேலியின் தனித்துவம் மட்டும் நிலைத்து நிற்கும்.
    திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என திருஞானசம்பந்தரும், தண் பொருநைப் புனல்நாடு எனச் சேக்கிழாரும்,
    பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி என்று கம்பரும் பாடிய வரிகள் இந்த மாவட்டப் பிரிவுகளால் பொய்த்துப் போகுமா என்ன?
    நாட்டின் விடுதலைக்குப் பின் செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவு தலைமை இடமாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை செயல்பட்டது.
  • 1967-ஆம் ஆண்டு அண்ணா முதலமைச்சர் ஆனதும், சைதாப்பேட்டையில் இருந்த இந்த தலைமை இடத்தை காஞ்சிபுரத்துக்கு மாற்றினார். நிர்வாகத்துக்கு காஞ்சிபுரமும், வழக்கு மன்றத்துக்கு செங்கல்பட்டு என்றும் முடிவெடுக்கப்பட்டது.
    கடந்த 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை இருந்தது.

தற்பொழுது

  • தற்போது உதயமாகவுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம், பல்லாவரம், தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும் கூடுவாஞ்சேரி, பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், திருநீர்மலை, மேடவாக்கம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளும் சேர்க்கப்படுகின்றன.
  • குன்றத்தூர் பேரூராட்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் சேர்க்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. புதிய மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் இடம்பெறுகின்றன. ஊராட்சி ஒன்றியங்களில் காட்டாங்கொளத்தூர், புனித தோமையர்மலை, திருப்போரூர், திருக்கழுகுன்றம், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகியவை இடம் பெறுகின்றன.
  • அன்று 13 மாவட்டங்களாக இருந்து, இன்றைக்கு 35 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல வட்டாரங்களில் இருந்து தங்களுக்கு தனி மாவட்டம் வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி மட்டும்தான் இதுவரை பிரிக்கப்படாத மாவட்டங்களாகும்.
  • நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் தனி மாவட்டமாக வேண்டுமென்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முசிறி தனி மாவட்டமாக வேண்டுமென்றும், வேலூரிலிருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டுமென்றும், சேலம் மாவட்டத்திலிருந்து மேச்சேரி தனி மாவட்டமாக வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
  • மாவட்டங்கள் பிரிப்பு என்பது விரைவான நிர்வாக பலாபலன்கள் பெறுவதற்கும், திட்டங்களுடைய பயன்கள் உடனே மக்களைச் சென்றடைவதற்கும் பயன்பட வேண்டும்.
    இன்று மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, எல்லாப் பகுதிகளுக்கும் விரைந்து செல்வதற்கு சாலை, வாகன வசதிகள் இருந்தும்கூட மக்கள் நலப் பணிகளை நேரடியாக கண்காணிக்கச் செல்வதில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முனைவதில்லை. ஏதாவது திட்டம் சரியில்லை என்றால் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெளிவாகவும், அழுத்தமாகவும் அன்றைய முதல்வர்களிடமே சொல்லக்கூடிய துணிவு மாவட்ட ஆட்சித் தலைவரிகளிடம் இருந்தது.
  • சிறிய மாவட்டங்கள் அமைவதைப் போலவே, அரசியல் தலையீடு இல்லாத, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நிர்வாகமும் அமைந்துவிட்டால், வளர்ச்சியை அதிவிரைவாக உறுதிப்படுத்த முடியும்.

நன்றி: தினமணி(31-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories