TNPSC Thervupettagam

தமிழகத்தின் கால்பந்து சிவசக்தி

September 8 , 2023 360 days 363 0
  • தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டு என்றாலே நினைவுக்கு வருவது வட சென்னைதான். ஆனால், சாம்சன் குணபாண்டியன், ராமன் விஜயன், போன்ற கால்பந்து பிரபலங்கள், சென்னை மட்டுமல்லாமல் தஞ்சாவூர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்தும் உருவாகியிருக்கிறார்கள்.
  • அந்த வரிசையில், தற்போது இளம் இந்திய கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார், காரைக்குடியைச் சேர்ந்த சிவசக்தி நாராயணன். தற்போது 23 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
  • கேப்டன் சிவசக்தி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர்தான் சிவசக்தியின் பூர்விகம். கிரிக்கெட்டே கதியென்று கிடக்கும் சிறுவர்கள் மத்தியில், சிறுவயது முதலே கால்பந்தின் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இவருடைய ஆசைக்கு வீட்டில் யாரும் தடை போடவில்லை. அம்மா, அப்பா, அண்ணன் எனக் குடும்பமே கால்பந்தைச் சிறப்பாக விளையாடும்படி உற்சாகப்படுத்தியது.
  • அந்த உத்வேகத்தில் பயிற்சி எடுக்கத் தொடங்கி, கால்பந்தை நேசித்து விளையாடி வந்தவர், தற்போது தேசிய அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கிறார். அடுத்த ஆண்டு கத்தாரில் ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்புக்கோப்பைக்கான தொடர் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இந்த மாதம் சீனாவில் நடைபெற உள்ளன. இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியைத்தான் சிவசக்தி வழிநடத்திச் செல்ல உள்ளார்.
  • பள்ளிப் படிப்பின்போது பக்கத்து ஊர்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கால்பந்துத் தொடர்களில் பங்கேற்று விளையாடியிருக்கிறார் சிவசக்தி. கால்பந்தை மட்டுமே முழு நேரமாகச் சுவாசித்து வந்த இவரது திறமையை முதலில் கண்டறிந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ராமன் விஜயன். இதனால் கண்டனூரிலிருந்து சிதம்பரம் சென்று கால்பந்துப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார் சிவசக்தி.
  • ஆரம்ப காலத்திலிருந்தே பந்தை லாகவமாகக் கடத்தி கோல் போஸ்டில் தள்ளும் தாக்குதல் பாணியில் கைதேர்ந்தவரானார். தொடக்கத்திலிருந்தே இதில் கவனம் செலுத்தியதால் கோல் அடிப்பதில் அனைத்து நுணுக்கங்களும் இவருக்கு அத்துப்படி. கிரிக்கெட்டில் ரன்கள் என்றால், கால்பந்தில் கோல்கள்.
  • எப்போதும் அதிரடியாக அதிக ரன்களும், கோல்களும் அடிப்பவர்கள்தான் ரசிகர்களால் கவனிக்கப்படுவார்கள், கொண்டாடப் படுவார்கள். அப்படி கோல் அடிக்கும் ஒரு ‘ஸ்ட்ரைக்க’ராகத் தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் சிவசக்தி.
  • வளர்ந்து வரும் இளம் வீரர்: சிதம்பரத்தில் பயிற்சி எடுத்துவந்த காலத்தில் சிவசக்தியின் தந்தை மரணிக்க, அவரது குடும்பச் சூழல் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதனால், பாதியில் நின்ற அவருடைய பயிற்சி கிட்டத்தட்ட ஒரு வருடம் வரையும் நீண்டது. முறையாகப் பயிற்சி எடுப்பதில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது.
  • என்றாலும் அதிலிருந்து மீண்டுவந்து உள்ளூரிலேயே கால்பந்து பயிற்சியைத் தொடங்கி, மீண்டும் களத்துக்குத் திரும்பினார். இந்த இடைப்பட்ட காலத்திலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டார். இதனால் பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு சென்னை வந்த அவரை, ‘ராமன் விஜயன் கால்பந்து பயிற்சிப் பள்ளி’ அரவணைத்துக் கொண்டது.
  • உள்ளூரில் நடைபெற்ற இளையோர் ஐ-லீக் கால்பந்துத் தொடர்களில் பங்கேற்று கோல்கள் அடித்த சிவசக்தி, கால்பந்து அரங்கிலும் உற்று கவனிக்கப்பட்டார். இதனையடுத்து பெங்களூரு எஃப்.சி. போன்ற ஒரு பெரிய கால்பந்து கிளப்பிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.
  • முதலில் பெங்களூரு எஃப்.சி. அணியின் ‘பி’ அணி, பின்பு ‘ஏ’ அணி எனப் படிப்படியாக முன்னேறி வந்தவர், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் அந்த அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்தார். 2022-23 சீசனில் சிறப்பாக விளையாடிய சிவசக்தி, பெங்களூரு அணிக்காக 11 கோல்கள் அடித்து அந்த அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரரானார். அது மட்டுமல்ல, இந்த சீசனின் ‘வளர்ந்து வரும் இளம் வீரர்’ விருதையும் அவர் தன்வசப்படுத்தினார்.
  • நம்பர் ‘9’ - “கால்பந்து விளையாட்டின் பல சவாலான சூழல்களையும் எளிதில் கடந்து செல்கிறார் சிவசக்தி. சுனில் சேத்ரியைப் போன்ற கோல் அடிக்கும் திறன் அவரிடம் உள்ளது. இன்னும் பல உயரங்களை எட்ட இருக்கும் நம்பிக்கை வீரர் அவர்” எனப் புகழ்கிறார் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் சைமன் கிரேசன். இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரியோ ஒரு படி மேலே போய், சிவசக்தியை ‘சூப்பர் ஸ்டார்’ என வர்ணித்திருக்கிறார். இந்த நம்பிக்கையை இளம் வயதிலேயே எட்டிப்பிடித்திருக்கிறார் சிவசக்தி.
  • கால்பந்து விளையாட்டில் ஸ்டிரைக்கர், சென்டர் ஃபாவார்டு இடங்களில் விளையாடுபவரை ‘நம்பர் 9’ என அழைப்பது வழக்கம். பெங்களூரு எஃப்.சி. அணியின் தவிர்க்க முடியாத ‘நம்பர் 9’ வீரராக உருவாகியிருக்கிறார் சிவசக்தி. விரைவில், இந்திய சீனியர் அணியிலும் இடம்பிடித்து சிவசக்தி தடம் பதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories