தமிழகத்தில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக ‘தொடர் கண்காணிப்பு’ ஏன் அவசியம்?
- பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இன்னொருபுறம் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து காவல் துறை மற்றும் இதர துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
- பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் தைரியத்துடன் முன்வந்து 14417 என்ற உதவி மையத்தின் தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் அதுசார்ந்த ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
- ஆக, பெண்கள் பாதுகாப்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை உணர்ந்தியிருப்பதாகவே அரசின் ஆலோசனையும், எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட அறிவிப்பும் இருக்கிறது. ஆனால், ஆலோசனைகளும், ஆர்ப்பாட்டங்களும், பெண்கள் பாதுகாப்புகாக சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதும் மட்டுமே பெண்களின், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட போதுமானதா என்றால் ஆணித்தரமாக இல்லை எனலாம்.
- ஏனெனில் இதில் பொறுப்பாளர்களின் ‘ஸ்டேக் ஹோல்டர்ஸின்’ வட்டம் மிகப் பெரியது. மேலும் பெண்கள், பெண் பிள்ளைகள் பாதுகாப்பு என்பதை ஒரு மாநிலத்தோடு சுருக்காமல் தேசிய அளவில் அணுக வேண்டியதும் அவசியமும் இருக்கிறது. ஒரு நிர்பயாவுக்கு நேர்ந்த அவலம்தான் மிக மோசமான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யும் சட்டம் உருவாகக் காரணமாக இருந்தது. பெண்களைப் பின் தொடர்தல், அமிலத் தாக்குதல் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சார்ந்த சட்டங்கள் உருவாகச் செய்தது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்பயா நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.
- அதே வேளையில் ‘நிர்பயா நிதி’ பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை வேலூர் ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம் உணர்த்தியுள்ளது. இத்தகைய புள்ளிகளை முன்வைத்து தமிழகத்தில் பெண்களின், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு பிரச்சினையை அலசுவோம்.
- ஏற்கெனவே சொன்னது போல் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு அரசு சார்ந்தது அல்லது குடும்பம் சார்ந்தது என்று குறுக்கிவிட முடியாது. அதேபோல், தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்று சிலர் வாதங்களை முன்வைத்தாலும் கூட அதனை நிரூபிக்க போதிய தரவுகள் நம்மிடம் இல்லை. அந்தத் தரவுகளை சேமித்து அதன் மீது வழிவகைகளைக் கட்டமைப்பதைவிட ஒட்டுமொத்த சமூகமாக பொறுப்பை ஏற்பதுவே சிறந்த அணுகுமுறையாக இருக்க முடியும்.
வீட்டிலிருந்து...
- ஒரு ஆண் தன்னை அதிகாரம் மிக்கவனாக நினைக்கும்போதே அவனால் அத்துமீற முடிகிறது. அது பதின்ம வயதினனாகவோ, குடும்பத்துக்குள்ளேயே இருப்பனாகவோ, ஆசிரியராகவோ அல்லது கூட வேலை பார்ப்பவனாகவோ, உயர் அதிகாரியாகவோ இல்லை இன்னும் வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
- நான் ‘அதிகாரம் மிக்கவன்’ என்ற எண்ணம் நம் இந்திய சமூகத்தில் குடும்பத்தில் இருந்துதான் விதைக்கப்படுகிறது. உணவில் முன்னுரிமை தொடங்கி, வீட்டு வேலைகளில் இருந்து விலக்கு வரை எல்லாவற்றிலும் அவனுக்கு இயல்பாகவே, ஏன் கேட்காமலேயே வந்து சேரும் முக்கியத்துவம் அவனுக்குள் அதிகாரத்தை வளர்த்தெடுக்கிறது.
- மேலும் ‘ஆண் தானே’ என்று அவனுடைய கோபங்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் அவனுடைய வக்கிரங்களுக்கும் சேர்த்தே வழங்கப்படும் அங்கீகாரம் என்று ஆழ்மனதில் பதிந்து கொள்கிறது. அதன் நீட்சியாகவே அவனுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த அதிகாரங்களை பயன்படுத்திப் பார்க்கும் எண்ணம் வருகிறது. செயல்வடிவமும் பெறுகிறது.
- பலமுறை சொல்லி சலித்துபோன விஷயம்தான் என்றாலும் கூட பாலின சமத்துவத்தை வீட்டிலிருந்து வளர்த்தெடுக்க வேண்டும். அதனை ஜென்Z பெற்றோர்கள் கொஞ்சம் வீரியத்துடன் செயல்படுத்த முயற்சிக்கலாம். இதனால் உடனடி பலனாக இல்லாவிட்டாலும் கூட இனிமேல் ஓர் ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க உதவும். சமூகத்துக்கு சவாலாக இருக்கும் இதுபோன்ற நடத்தை கோளாறுகளுக்கு (Behavioral issues) குடும்பத்தில்தான் முதல் கடிவாளம் கட்டப்பட வேண்டும்.
ஆசிரியச் சமூகத்துக்கும் இருக்கிறது பொறுப்பு!
- ‘வேலியே பயிரை மேய்ந்த கதை’ என்பதுபோல் பள்ளிகளில் நடந்த சமீபகால சம்பவங்கள் ஆசிரியர் சமூகத்தை விமர்சனங்களுக்கு உள்ளாக்கினாலும் கூட அத்தகைய புல்லுருவிகள் குறைவுதான் என்பதால் பாலியல் குற்றங்களைத் தடுப்பதில் ஆசிரியச் சமூகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.
- உடல் அறிவியலை, உடலில் ஏற்படும் மாற்றங்களை அதன் நிமித்தமான உந்துதல்களைப் பற்றி மாணவர்களுக்கு நாகரிகமாக கற்பிப்பதும், பிராயத்தில் ஏற்படும் உணர்ச்சிகளைக் கடந்து கவனத்தை கல்வி, விளையாட்டு, வாசிப்பு என செலுத்துவதே ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று கற்றுக் கொடுப்பதும் ஆசிரியர்களின் பொறுப்பே.
- ஆனால் கள நிலவரத்தைப் பார்க்கும் போது ஆசிரியர்கள் பலரும் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கு இருக்கும் தயக்கமே அதற்குக் காரணம். நான் இதை கற்பிக்க வரவில்லை. இது மாணவர்களுக்கு அவசியமில்லை என்ற எண்ணங்கள் ஆசிரியர்களுக்குப் பெரிய தடையாக இருக்கிறது.
- அதேபோல், எங்கள் பிள்ளைகளுக்கு பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுங்கள் போதும் என்று போர்க்கொடி தூக்கும் பெற்றோர்களும் இருக்கின்றனர். இதனை கல்வித் துறை கவனித்து ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும். தயக்கமின்றி உடைத்துப் பேசும் போது உடல் மீதான சந்தேகங்கள் நீங்கும், உடல் சார்ந்து கட்டமைக்கப்பட்ட புனித பிம்பங்கள் உடையும்.
- குடும்பம், பெற்றோருக்கான பொறுப்பு இத்தகையது என்றால் அரசாங்கத்துக்கான, அரசியல் கட்சிகளுக்கான பொறுப்பு இன்னும் இன்னும் அதிகமானது.
- சட்டங்களை இயற்றும், அமல்படுத்தும், குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரத்தில் இருக்கும் அரசு குற்றம் சார்ந்த புள்ளிவிவரங்களை ஆராய்வதோடு, தேவைப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைப்பது, இரவு நேர ரோந்துப் பணிகளை அதிகரிப்பது, ரயில்களில் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற பணிகளை திறம்படச் செய்ய வேண்டும்.
- அரசியல் கட்சிகளும் பாலியல் குற்றச் சம்பவங்களின் ஆளுங்கட்சியின் நிர்வாகக் குறைபாடாக மட்டுமே அணுகாமல் சமூக சீர்கேடாக அணுக வேண்டும். பாலியல் குற்றங்களைத் தடுக்க ஆரோக்கியமான யோசனைகளை வழங்குவது, தத்தம் கட்சி மூலமாகவே பாலின சமத்துவ விழிப்புணர்வு மேற்கொள்ளுதல் போன்றவற்றை செய்யலாம்.
அடையாளச் சர்ச்சை தொடங்கி விக்டிம் ஷேமிங் வரை:
- பாலியல் குற்றங்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகள், பெண்களின் பெயர், அடையாளங்களை வெளியிடக் கூடாது என்ற நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் இவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. இன்றளவும் கூட பாதிக்கப்பட்ட நபரின் ஊர், குடும்பம் என மொத்த விவரத்தையும் போட்டுவிட்டு பெண்ணின் பெயரை மட்டும் வேறு போட்டு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று எழுதும் போக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
- பெயர், அடையாளத்தை வெளிப்படுத்துவது, பாதிக்கப்பட்ட பெண்ணை ஏன் அந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டும், ஏன் அப்படி உடை அணிய வேண்டும் என்றெல்லாம் அவதூறு பேசுவதை ஏன் தவிர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- பாலியல் குற்றங்களை வெளியே சொல்ல பாதிக்கப்பட்டவர்கள் தயங்கும் வரை அதை செய்பவர்களுக்கு ஒருவித துணிச்சல் இருந்து கொண்டே இருக்கும். சிறு வயதில் இருந்தே அத்துமீறுபவர்களை அம்பலப்படுத்துங்கள் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தால் அவர்களே எதிர்ப்பார்கள், இல்லை சம்பவத்தை வெளியில் போட்டு உடைப்பார்கள். இதனால் கணிசமாக இத்தகையைக் குற்றங்களைத் தடுக்க முடியும்.
- குடும்பம், பள்ளி, கல்லூரிகள், பணியிடங்கள், பயண வாகனங்கள் என எல்லா இடங்களிலும் பெண்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் போது அச்ச உணர்வு ஏற்படும். அசிங்கப்படுவோம் என்ற அச்சமும், தண்டனைக்குள்ளாவோம் என்ற பயமும் இத்தகைய குற்றங்களைத் தடுக்கும். அதனால் அடையாளங்களை வெளியிடுவதையும், பாதிக்கப்பட்டவரை கேவலப்படுத்துவதையும் நிறுத்திக் கொள்வது சமூக பொறுப்பின் இன்னொரு அம்சம்.
- அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமை செய்திகளை சுட்டிக்காட்டி தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாகிறதா என்ற கேள்வியை எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான பத்மாவிடம் முன்வைத்தபோது, அவர் பாலியல் குற்றங்களைத் தடுக்கத் தேவை சமூக கூட்டுப் பொறுப்பு மட்டுமே என்று ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
- “இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் பாலியல் வக்கிரங்கள் பாலியல் குற்றங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. இதன் மீதான கண்காணிப்பும், கட்டுப்பாடும் தேவை. குடும்பத்துடன் அனைவரும் காணும் ஒரு திரைப்படத்தில் கூட அத்தனை பாலியல் வக்கிரங்கள் நிறைந்த பாடல்களும், நடன அசைவுகளும், காட்சிகளும் மிகச் சாதாரணமாக காட்டப்படுகின்றன. பாலின பேதம் நியாயமாக்கப்படுகின்றன. விரல் நுணியில் எல்லா பாலியல் வக்கிரங்களும் 10 வயது குழந்தைக்குக் கூட பார்க்கக் கிடைக்கிறது.
- சுற்றியும் அத்தனை வக்கிரங்கள் நிறைந்து கிடக்க, பதின்ம வயதில் இயல்பாகவே ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கூடவே சேர்ந்து கொள்ள நீ எல்லாவற்றையும் தாண்டி ’நல்லவனாக’ / ‘நல்லவளாக’ இருக்க வேண்டும் என்று கட்டளைகளை இடுவது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்?!
- குழந்தை வளர்ப்பு என்பது இப்போதைய காலகட்டத்தில் மிகப் பெரிய சவால். அதனை மிகவும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும். கட்டளைகள் வேலைக்கு உதவாது. கண்டிப்புகள் அன்பினால் ஆனதாக இருக்க வேண்டும். தோழமையோடு குழந்தைகளின் உணர்வுகளை அணுகும்போது அவர்கள் சமவயதினருக்குள் ஏற்படும் அழுத்தங்களை கையாளக் கற்றுக் கொள்வார்கள்.
- பொதுவாக, பெற்றோர்கள் பிள்ளைகள் நன்றாக படித்து, மதிப்பெண் பெற்று, வேலையில் அமர்ந்து, கைநிறைய சம்பாதித்து என்று வெற்றிக்கான வரையறைகளை வகுத்து வைத்துள்ளனர். அதுமட்டுமே போதும் என நினைக்கின்றனர். ஆனால் அதுவல்ல தனிமனித ஒழுக்க விழுமியங்கள்.
- நான் ஒழுக்கம் எனக் கூறுவது மதம், கலாச்சாரம் சார்ந்தது அல்ல. ‘நான் கண்ணியமானவன்’, ‘நான் எதிர்பாலினத்தவருக்கும் பாதுகாப்பானவன்’, ‘சமூக பொறுப்புள்ளவன்’ என்ற எண்ணம் தனிநபருக்கு வர வேண்டும். இத்தகைய மாற்றம் பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க பெரும் பங்கு வகிக்கும். இது குடும்பங்களில் இருந்து தொடங்கி, பள்ளிகளில் இன்னும் விரிவாக கற்பிக்கப்பட வேண்டும்.
- அரசாங்கம் பிரச்சினைகள் அதிகமாகும்போது மட்டும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு பின்னர் அதனை கிடப்பில் போட்டுவிடக் கூடாது. அரசாங்கம் வகுத்துக் கொடுக்கும் பள்ளி, கல்லூரிகளில் நிகழ்த்தக் கூடிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதே வீரியத்தோடு அவர்களுக்குச் சென்று சேர்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
- வெறும் வியூகங்களை வகுத்துக் கொடுத்துவிட்ட அரசு ஒதுங்கி நிற்குமேயானால் சென்று சேர வேண்டிய விழிப்புணர்வுகள் நீர்த்துப்போன வடிவில் தான் சென்று சேரும். எனவே அத்தகைய தொடர் கண்காணிப்பை அரசு சிரத்தையுடன் செய்ய வேண்டும். ஒரு களப் பணியாளராக நான் கண்ட சிக்கல்களின் அடிப்படையில் இதனை நான் வலியுறுத்துகிறேன்.
- பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரே இரவில் நடந்துவிடாது. சமூகப் பொறுப்போடு பலரும் கைகோத்து செயல்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 02 – 2025)