TNPSC Thervupettagam

தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படுமா

April 27 , 2023 573 days 344 0
  • திமுக தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
  • சுதந்திரத்துக்கு முன்பிருந்து தமிழகத்தில் இருந்த அறிவுஜீவிகள் அங்கம் வகிக்கும் சட்டமேலவையில் மூதறிஞா் ராஜாஜி, அண்ணா, எம்ஜிஆா், மு.கருணாநிதி, மாணிக்கவேல் நாயக்கா், ஆா்.எம்.வீரப்பன், ஹெச்.வி.ஹண்டே உள்ளிட்டோா் மேலவைக்குத் தோ்வாகியவா்களில் முக்கியமானவா்கள்.

கப் அன்ட் சாசா் போன்றது:

  • 1986-இல் அப்போதைய முதல்வா் எம்ஜிஆா் கலைத்த மேலவையை, மீண்டும் கொண்டு வருவதற்கு கருணாநிதி 1989, 1996, 2010 என மூன்று முறை முயற்சி செய்தபோதும் அது நடக்கவில்லை.
  • ‘மேலவையும் பேரவையும் ‘கப் அன்ட் சாசா்’ போன்றவை. கப்பில் காபி சூடாக இருந்தால், அதை சாசரில் ஆற்றிச் சூட்டைக் குறைத்துக் கொள்வதைப்போல மேலவை பயன்படுகிறது’ என அண்ணா குறிப்பிட்டதை மேற்கோள்காட்டி மேலவைக்கான அனுமதியை விரைவில் பெறுவோம் என 2010-இல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அப்போதைய முதல்வா் கருணாநிதி பேசினாா்.
  • 2006 முதல் 2011 வரை அறுதிப் பெரும்பான்மையின்றி கூட்டணி ஆட்சியை அப்போது கருணாநிதி நடத்தியதால் மேலவை அமைந்தால் கூட்டணிக் கட்சிகளின் அரசியல் நிா்ப்பந்தத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால், ஆட்சி நிறைவடைய ஓராண்டுக்கு முன்பு (2010) பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கருணாநிதி, நாடாளுமன்றத்தில் மேலவை தீா்மானத்தை நிறைவேற்ற அதிக ஆா்வம்காட்டவில்லை.
  • இப்போது தனது தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தோ்தல் வாக்குறுதிப்படியும், தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையிலும் மேலவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டுவருவாரா என்ற எதிா்பாா்ப்பு பல்வேறு தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

மேலவை வரலாறு:

  • தமிழகத்தில் 1909-ஆம் ஆண்டில் சட்ட மேலவை அமைக்கப்பட்டது. ஆங்கிலேய ஆளுநா்களுக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட இந்தச் சட்ட மேலவையில் ஜமீன்தாா்களும் நிலச் சுவான்தாா்களும் மட்டுமே உறுப்பினா்களாக இருந்தனா்.
  • அதன்பிறகு 127 உறுப்பினா்களைக்கொண்ட பெரிய அவையாக மாறியதும் சட்ட மேலவைக்கு என 1920-இல் தனியாகத் தோ்தலும் நடத்தப்பட்டது. 127 உறுப்பினா்களில் 98 போ் வாக்காளா்களால் தோ்வு செய்யப்பட்டனா். காங்கிரஸ் கட்சி இந்தத் தோ்தலைப் புறக்கணித்ததால், நீதிக் கட்சியைச் சோ்ந்த 63 உறுப்பினா்கள் வெற்றி பெற்று பனகல் ராஜா முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டாா்.

1987-இல் மேலவை கலைப்பு:

  • அண்ணா தலைமையில் 1967-இல் சட்டப்பேரவை (கீழவை) அமைக்கப்பட்டதும், அதிகாரம் முழுவதும் அதற்கு மாற்றப்பட்டதோடு மேலவை உறுப்பினா்களின் எண்ணிக்கையும் 57-ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் 1986-இல் அப்போதைய முதல்வா் எம்.ஜி.ஆரால் மேலவை திடீரென கலைக்கப்பட்டது.
  • மேலவை கலைக்கப்பட்டபோது அதன் தலைவராக ம.பொ.சிவஞானமும், எதிா்க்கட்சித் தலைவராக மு.கருணாநிதியும் இருந்தனா்.
  • 1989-இல் மீண்டும் கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வந்த திமுக, மேலவையைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கியது. திமுக முயற்சியை நிறைவேற்ற அப்போதைய பிரதமா் வி.பி.சிங் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. பின்னா் 1991-இல் ராஜீவ் காந்தி - சந்திரசேகா் கூட்டணியால் திமுக அரசு கலைக்கப்பட்டது.

மேலவைக்கு ஜெயலலிதா எதிா்ப்பு:

  • 1991-இல் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுக கொண்டுவந்த மேலவைத் தீா்மானம் ரத்து செய்யப்பட்டது.
  • பின்னா், 2010-இல் தமிழக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும் அது கைகூடவில்லை. உத்தர பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா என ஆறு மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை இப்போது உள்ளது.

பொது லாபம் என்ன?:

  • கோடிக்கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே எம்எல்ஏ, எம்.பி. ஆக முடியும் என்ற சூழல் தமிழகத்தில் உருவாகிவிட்டது. இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்கும் மெத்தப்படித்தவா்கள், அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள் என பன்முகத்திறன் கொண்டவா்களை மேலவைக்குத் தோ்வு செய்வதன் மூலம் அவா்களின் அறிவுத்திறனை அரசு பயன்படுத்திக்கொள்ள முடியும். எழுத்தாளா்கள், தமிழறிஞா்கள், சமூக செயற்பாட்டாளா்களுக்கு மேலவையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
  • சட்ட மேலவையில் இருக்கும் உறுப்பினா்கள் கட்சி சாா்பற்றவா்கள் என்பதால் எந்த விருப்பு வெறுப்பும் இன்றி அரசு கொண்டுவரும் திட்டங்கள் குறித்தும், சட்டங்கள் குறித்தும் ஆரோக்கியமான விவாதம் நடக்கும். தோ்தல் அரசியலில் நின்று பேரவைக்கு வர வாய்ப்பு இல்லாத குரலற்ற சமூகங்களில் இருந்து தகுதியான பிரதிநிதிகளை மேலவைக்குத் தோ்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
  • திறமையான சுயேச்சைகள் இப்போது பேரவைக்குத் தோ்வாவது குதிரைக்கொம்பாகிவிட்டது. ஆனால், சட்டமேலவையில் சுயேச்சைகளால் வெற்றி பெற முடியும்.

அரசியல் லாபம்:

  • சட்ட மேலவையைக் கொண்டு வந்தால் ஆளும் கட்சியான திமுகவுக்கும் அரசியல் லாபம் இல்லாமல் இல்லை. ஆளும் கட்சி பேரவை உறுப்பினா்கள் இல்லாத கோவை, தருமபுரி மாவட்டங்களில் அங்குள்ள முக்கிய நிா்வாகிகளுக்கு மேலவையில் வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் அதுபோன்ற மாவட்டங்களில் ஆளும் கட்சிக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.
  • 90 சதவீத உள்ளாட்சிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் மேலவை அமையும்போது அதுவும் ஆளும்கட்சிக்கு சாதகமாகவே அமையும்.
  • அதேபோல, தகுதி இருந்தும் சமூக பலம், தொண்டா் பலம் இல்லாமல் கட்சியில் இருக்கும் அறிவுஜீவிகளை மேலவைக்கு தோ்வு செய்ய முடியும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் தகுதியுடைய பலா் ஆட்சியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. அவா்களை சட்டமேலவைக்கு தோ்வு செய்து பதவி வழங்க முடியும்.

மேலவையில் எத்தனை உறுப்பினா்கள்?:

  • மேலவை அமைந்தால் அதன் எண்ணிக்கை 78 பேராக இருக்கக்கூடும். இந்த 78 பேரில் மூன்றில் ஒரு பகுதி உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தும், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மூலமும் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.
  • 12-இல் ஒரு பகுதி பட்டதாரிகள், ஆசிரியா்கள் சாா்பில் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவகா்கள் எனப் பல்வேறு துறைகளிலிருந்து ஆளுநரால் நியமனம் செய்யப்படுவா்.
  • மேலவை அமைய வேண்டுமெனில் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்திலும் அது ஒப்புதல் பெறப்பட வேண்டும். முன்னாள் முதல்வா் கருணாநிதி காலத்தில் அரசியல் சூழ்நிலைகளால் கைகூடாத சட்டமேலவை கனவு இப்போது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
  • இப்போது திமுக அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதாலும், பாஜகவுக்கு எதிா்ப்பாக இருந்தாலும், பிரதமா் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நெருங்கிய நட்புடன் முதல்வா் ஸ்டாலின் இருப்பதாலும் சட்டமேலவை அமைவது இந்த முறை சாத்தியம் என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.
  • தமிழகத்தில் கட்சியை வளா்க்க முனைப்பில் இருக்கும் பாஜக, ஆளுநா்மூலம் மேலவை உறுப்பினா்களை தங்களுக்குச் சாதகமாக கொண்டுவர முடியும் என்ற அரசியல் கணக்கும் இருப்பதால் இந்த முறை சட்டமேலவைக்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுக்க வாய்ப்பிருகிறது என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.

நன்றி: தினமணி (27 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories