- சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. நேற்று (வியாழக் கிழமை) தொடங்கிய 7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை அளித்த சட்டப் பிரிவு 370 கடந்த 2019 ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா, பாகிஸ்தானில் பரஸ்பரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், உலகத் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, கொரியா (9), மலேசியா (10), பாகிஸ்தான் (16), ஜப்பான் (19), சீனா (25) ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
- ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8-ஆம் தேதி வரை சீனாவில் ஹாங்ஸெள நகரில் நடைபெற உள்ளன. இதில் ஹாக்கி போட்டியில் வெற்றி பெறும் அணி 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும். சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு சுமார் 5 வாரங்களே உள்ளதால், சென்னை போட்டியில் விளையாடுபவர்கள் தயாராவதற்கு குறைந்த கால அவகாசமே உள்ளது என்று குற்றஞ் சாட்டுகிறார் மலேசிய பயிற்சியாளர் அருள் செல்வராஜ்.
- கொரியாவுக்கான 5 ஆட்டங்களில் 3 ஆட்டங்கள் மாலை 4 மணிக்கு கடும் வெயிலில் விளையாடுமாறு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஷின் சியோக் - கியோ அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கும் இதே போன்ற பிரச்னை உள்ளது. ஸ்பெயின் ஹாக்கி கூட்டமைப்பின் நூற்றாண்டையொட்டி, அந்நாட்டின் டெரசா நகரில் கடந்த ஜூலை 25 முதல் 30 வரை நடைபெற்ற போட்டியில் பங்கேற்று விட்டு வெறும் 3 நாள்கள் இடைவெளியில் இந்தப் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிக் களமாக இந்தப் போட்டியை ஆறு நாடுகளுமே கருதுகின்றன.
- இதற்கு முன்னர் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் 3 முறை சாம்பியன் ஆகியுள்ள பாகிஸ்தான் அணியில் இப்போது இடம்பெற்றுள்ள வீரர்கள் பெரும்பாலும் அதிக அனுபவம் இல்லாதவர்கள். அந்த அணியில் இடம்பெற்றுள்ள 18 பேரும் சேர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளில் 224 ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளனர். ஆனாலும், இந்த இளம் வீரர்கள் சாதனை படைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அணியின் உதவி பயிற்சியாளர் ரெஹான் பட்.
- இழந்த பெருமையை மீட்கும் முயற்சியில் இந்திய அணி களம் காண்கிறது. கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் வரை ஹாக்கியே இந்தியாவின் பிரதான விளையாட்டாகக் கோலோச்சியது. ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கமும் (1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980) ஒருமுறை வெள்ளியும் (1960), 3 முறை வெண்கலமும் (1968, 1972, 2020) வென்றுள்ளது.
- பல முக்கிய அணிகள் பங்கேற்காத மாஸ்கோ ஒலிம்பிக் (1980) போட்டியில் தங்கம் வென்றாலும், 1964-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய ஹாக்கி அணியின் வீழ்ச்சி தொடங்கியது. இந்திய அணி தேய்ந்து கொண்டிருக்க, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஆர்ஜென்டீனா போன்ற அணிகள் அசுர வளர்ச்சியைக் கண்டன. 1964-க்குப் பிறகு ஏற்ற இறக்கங்களைக் கண்ட இந்திய ஹாக்கி அணி 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றபோது புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது.
- ஒருகாலத்தில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் கோலோச்சினார். ஹாக்கி அணியில் பல தமிழக வீரர்கள் இடம் பெற்று வந்தனர். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர் கார்த்தி இடம்பெற்றுள்ளார். அரியலூரைச் சேர்ந்த 21 வயதாகும் இளம் வீரர் கார்த்தி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுக வீரராக களம் இறங்கியவர்.
- இப்போதைய போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செயற்கை இழை ஆடுகளம் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே முதல்முறையாக 80 சதவீதம் கரும்புச் சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆடுகளம்.
- அண்மைக்காலமாக, தமிழகம் விளையாட்டுப் போட்டிகளின் மையமாக மாறிவருகிறது. குறுகிய கால அவகாசத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்டில் சென்னை, மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன் பின்னர், அதிகம் பேருக்கு விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்தும் விதமாக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பொதுப் பிரிவு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் பல கட்டங்களாக அண்மையில் நடத்தப்பட்டன. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சுமார் ரூ.25 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நடைபெறுவது, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும். பங்கேற்கும் அணிகள் அனைத்துமே கடும் சவால் அளிக்கக்கூடியவை. இந்தப் போட்டியின் மூலம் தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் ஹாக்கி விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.
நன்றி: தினமணி (04 – 08 – 2023)