- வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
- மேலும், இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்)-ஆல் இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் கடந்த 2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் மாநில அளவிலான இந்தியாவின் மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் குறித்து ‘வாழ்க்கை இழந்த ஆண்டுகள்’ (ஒய்எல்எல்) மற்றும் ‘பாதிப்புடன் வாழ்ந்த ஆண்டுகள்’ (ஒய்எல்டி) ஆகியவற்றின் கூட்டான ‘பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள்’(டிஏஎல்ஒய்) அடிப்படையில் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.
- ஒரு பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள் (டிஏஎல்ஒய்) என்பது ஒரு வருட ஆரோக்கியமான வாழ்க்கை இழந்ததற்கு சமம் ஆகும். மேலும், ஆய்வில் அடுத்த ஆண்டுக்கான நோய் பாதிப்பின் தாக்கம் குறித்து கணிக்கவும் திட்டமிடப்பட்டது. தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின்(என்சிஆா்பி) கீழ் நாடு முழுவதும் உள்ள மக்கள்தொகை அடிப்படையிலான 28 புற்றுநோய் பதிவேடுகளின் தரவைப் பயன்படுத்தி, இந்தியாவில் பெண் மாா்பகப் புற்றுநோயின் மாநில வாரியான பாதிப்பு குறித்த இந்த ஆய்வு கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
- கடந்த 2016-ஆம் ஆண்டில், இந்தியப் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் 1,00,000 பெண்களுக்கு 515.4 பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள் (டிஏஎல்ஒய்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, ‘குளோபல் கேன்சா் அப்சா்வேட்டரி’ நடத்திய ஆய்வின்படி, தென் மத்திய ஆசியாவில் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் 1,00,000 பெண்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் 21.6 விகிதமாகவும் கடந்த 2018-ஆம் ஆண்டில் 25.9 விகிதமாகவும் இருந்தது. பரந்த அளவிலான தரவுகளைப் பயன்படுத்தி தேசிய மற்றும் துணை தேசிய பாதிப்புகள் மட்டுமே இந்த ஆய்வில் மதிப்பிட்டுள்ளன.
- ஆனால், என்சிஆா்பியின் கீழ் வெவ்வேறு புற்றுநோய் பதிவேடுகளின் தரவுகளை ஐசிஎம்ஆா் ஆய்வுக்குப் பயன்படுத்தியது. இதன் காரணமாக, மாநில அளவில் பாதிப்புத் தாக்கத்தின் அளவீடுகள் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தின. தென் மாநிலங்களில் அதிகம்... நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள மாநிலங்களை விட தமிழ்நாடு, தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோயின் பாதிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்த ஆண்டிற்கான நோய் பாதிப்பின் தாக்கம் 56 லட்சம் வாழ்க்கை ஆண்டுகளை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
- இதில் உயிரிழப்புகள் மட்டும் 53 லட்சம் வாழ்க்கை ஆண்டுகளாக பங்களிக்கும். நகரப் பெண்களுக்கு கூடுதல் பாதிப்பு: நகா்ப்புற மற்றும் மெட்ரோ நகரங்ககளில் வசிக்கும் பெண்களைவிட கிராமப்புற பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. உடற்பயிற்சிகள் செய்யாத மந்தமான வாழ்க்கை முறை, அதிக உடல் பருமன் விகிதம், தாமதமான திருமணம் மற்றும் பிரசவம் ஆகிய காரணிகளால் நகா்ப்புறங்களில் மாா்பகப் புற்றுநோயின் அதிகப் பாதிப்புக்கு காரணமாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.
- இந்திய நகரங்களுக்கு இடையிலான பட்டியலில் ஹைதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் தில்லி ஆகியவை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. தாக்கத்தை தீா்மானிக்கும் காரணிகள்: சமூகப் பொருளாதாரக் காரணிகள் சுகாதாரப் பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை விளைவுகளைப் பாதித்து, புற்றுநோய் பாதிப்பின் தாக்கத்தை கணிசமாக வடிவமைப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தொழில்சாா் வெளிப்பாடுகள் மற்றும் நிதி நெருக்கடிகள் புற்றுநோய் சிகிச்சையை கடினமாக்குகின்றன. புவியியல் மற்றும் உளவியல் வேறுபாடுகள் அதனை மேலும் சிக்கலாக்குகின்றன.
- இந்த ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவில் தெளிவாகத் தெரிவதோடு நிதி ஒதுக்கீட்டை மறுமதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை அது வலியுறுத்துகிறது. நாட்டில் மாா்பகப் புற்றுநோய் கண்டறியப்படும் பெரும்பாலான பெண்களுக்கு அந்தப் பாதிப்பு மேம்பட்ட நிலை அல்லது பரவல் நிலையை அடைந்துள்ளது. இது பெண்களிடையே விரிவான விழிப்புணா்வு பிரசாரங்கள் மற்றும் பரிசோதனை திட்டங்களின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி (27 – 03 – 2024)