TNPSC Thervupettagam

தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்

January 16 , 2024 225 days 250 0
  • இலக்கியம், பண்பாடு, சர்வதேசம், பொறியியல் என்று பல தளங்களிலும் எழுதிவருபவர் எழுத்தாளர் மு.இராமனாதன். கட்டிடம், நகர்ப்புறக் கட்டமைப்பு குறித்து தொடர்ச்சியாக இவர் எழுதும் கட்டுரைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளியாகின்றன. இவர் எழுதிய சமூகம் - அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்புதமிழணங்கு என்ன நிறம்?’ குறிப்பிடத்தக்க நூலாக அமைந்துள்ளது. இதைப்பாரதி புத்தகாலயம்வெளியிட்டுள்ளது. 2024 சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி  வெளியாகி இருக்கும் முக்கியமான நூலாக இது இருக்கிறது. இந்த நூலின் முக்கியத்துவம் கருதி இதில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுரையைஅருஞ்சொல்தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.
  • ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை.
  • பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்றதற்குத் தந்தையார் பெயரையோ கணவர் பெயரையோ எழுதினார்கள். ஆதார் அட்டையைத் தயாரிக்கிற பணி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே கிடைத்தது. ஒருவருக்கு ஒரு பெயர் மட்டும் இருக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். முன்னொட்டாக ஒரு தலைப்பெழுத்தையும் (initial) இணைத்துக் கொண்டார்கள். ஆக, பான் அட்டையில் இரண்டு பெயர்கள்; ஆதார் அட்டையில் ஒற்றைப் பெயர், தலைப்பெழுத்து தனி. தமிழர்களின் இரண்டு அட்டைகளும் ஒட்டாமல் போனது இப்படித்தான். பலர் ஆக்ஞையை நிறைவேற்றப் பல மாதங்கள் இதன் பின்னால் ஓடினார்கள்.

தமிழன் துறந்த சாதிப் பெயர்

  • உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கும், இந்தியாவில் தமிழகம் நீங்கலான பிற மாநிலத்தவர்களுக்கும் அவர்களது பெயர்களில் குறைந்தபட்சம் இரண்டு பகுதிகள் இருக்கும் - முதற்பெயர், குடும்பப் பெயர். இவை தவிர நடுப் பெயர் உள்ளவர்களும் உண்டு. குடும்பப் பெயர் பொதுவாகக் குழுவை அல்லது பரம்பரையைக் குறிக்கும். இந்தியாவில் அது மிகுதியும் தொழிலையோ சாதியையோதான் குறிக்கும். இந்த இடத்தில் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
  • ஆண்டு: 2019, இடம்: மும்பை, பாத்திரங்கள்: நால்வர்- நானும் எனது ஒரு சாலை மாணாக்கர் ஒருவரும் ஆக இரண்டு தமிழர்கள், இரண்டு மராட்டிய நண்பர்கள். பேச்சு, தமிழகமும் மராட்டியமும் இந்தியாவில் பல அலகுகளில் முன்னணியில் நிற்பதைப் பற்றித் திரும்பியது. அப்போது தமிழ் நண்பர் சொன்னார் : ‘தமிழகம், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களைக் காட்டிலும் 90 ஆண்டுகள் முன்னால் நிற்கிறது.’ அது என்ன 90 ஆண்டுக் கணக்கு? நண்பர் 1929இல் நடந்த செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டை முன்னேற்றத்தின் தொடக்கப் புள்ளியாகக் குறிப்பிட்டார். அந்த மாநாட்டில்தான் சாதிப் பெயரைப் பின்னொட்டாக வைத்துக்கொள்வதற்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.
  • .வெ. ராமசாமி நாயக்கராகிய நான் இன்றுமுதல் .வெ. ராமசாமி என்று அழைக்கப்படுவேன்என்று பெரியார் அறிவித்தது அந்த மாநாட்டில்தான். அந்தத் தீர்மானமும் அந்த அறிவிப்பும் அந்த மாநாட்டோடு நின்றுவிடவில்லை. அது தமிழ்ச் சமூகமெங்கும் பரவியது. தமிழர்கள் சாதிப் பெயரைக் களைந்தார்கள். நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன். ‘சாதி, பெயரில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேட்பாளர்கள் சாதி பார்த்துத்தானே நிறுத்தப்படுகிறார்கள்? திருமணங்கள் சாதிக்குள்தானே நடக்கின்றன? நம்மில் பலருக்கும் சாதி உணர்வு இருக்கத்தானே செய்கிறது?’ நண்பரிடம் பதில் இருந்தது.
  • இருக்கலாம். ஆனால் பெயரில் சாதியைத் துறப்பதற்கும் ஒரு மனம் வேண்டுமல்லவா? தமிழர்களிடம் அது இருந்தது. இப்போதும் தமிழகத்தில் பொதுவெளிகளில் சாதியைக் கேட்பதற்கும் சொல்வதற்கும் பலரும் கூச்சப்படவே செய்கிறார்கள்இன்றுகூட இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள பலரால் சாதிப் பெயர்களைச் சுட்டும் குடும்பப் பெயர்களைத் துறப்பதைச் சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாது.’ மராட்டிய நண்பர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

தமிழ்ப் பெயர்களின் தனித்துவம்

  • சாதிப் பெயர்களைக் கைவிட்டதில் மட்டுமல்ல, பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவதிலும் தமிழர்கள் தனித்துவமானவர்கள். குடும்பத்தின் பெரியவர்கள் பெயர்களைப் பிள்ளைகளுக்கு விடும் வழக்கம் நம்மிடமுண்டு. அதிலிருந்துதான் தலைவர்களின் பெயர்களைச் சூட்டும் வழக்கமும் வந்திருக்க வேண்டும். காந்தி, நேரு, போஸ் என்று நம்மவர்கள் சூட்டி மகிழ்ந்த பெயர்கள் அந்தத் தலைவர்களின் குடும்பப் பெயர்கள்.
  • தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். தத்தமது ஆதர்சத் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவார்கள். ஸ்டாலின் பெயரை மகனுக்குச் சூட்டியது கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல, அவரது தலைமுறையைச் சேர்ந்த ராஜாங்கமும் குணசேகரனும் கூடத்தான். சமீபத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் பெயர் ஜெயகாந்தன். பொதிகைத் தொலைக்காட்சிச் செய்திப்பிரிவின் இயக்குநராக இருந்தவர் அண்ணாதுரை. சாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பாரதிதாசன். கல்லல் என்கிற ஊரின் காவல்துறை ஆய்வாளராக இருந்தவர் பெயர் ஜோதிபாசு. தமிழ்ப் பெண்களின் படங்களை அச்சொட்டாக வரைந்த ஓவியர் இளையராஜா. ரியாத்தில் என்னுடன் பணியாற்றிய ஓர் இளம் பொறியாளரின் பெயர் பாரதிராஜா.
  • 2012இல் சத்தீஸ்கார் மாநிலத்தின் ஒரு மாவட்ட ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். அவர் பெயர் அலெக்ஸ் பால் மேனன். செய்தி வெளியானதும் அவர் மலையாளி என்று நினைத்தேன். அவர் தமிழர், பாளையங்கோட்டைக்காரர், வி.கே.கிருஷ்ண மேனன் மீதிருந்த ஈடுபாடு காரணமாக அவரது தந்தை சூட்டிய பெயரது. ஒரு முறை ரயிலில் என்னோடு பயணம் செய்தவரின் பெயர் கேப்டன் நாயர் என்று பட்டியலில் கண்டிருந்தது. வந்தவர் பட்டாளக்காரரல்லர், மலையாளியுமல்லர். திருச்சிக்காரர். அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர், பெயர்க் காரணம் எனக்குப் பிடிபட்டது.
  • இப்படி அபிமானத் தலைவர்களின், மேலதிகாரிகளின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவது ஒரு புறமிருக்க, மறுபுறம் வடமொழிப் பெயர்களின் மீதான மோகத்தையும் இப்போது பார்க்க முடிகிறது. நான் சமீபத்தில் பார்த்த ஒரு விளம்பரம் எடுத்துக்காட்டாக அமையும். அந்த விளம்பரத்திற்கு நன்மரண அறிவிப்பு என்று தலைப்பிடப்பட்டிருந்தது. கனிவு ததும்பும் ஒரு மூதாட்டியின் படமும் இருந்தது. அது நல்ல மரணம்தான். அவருக்கு வயது 102.
  • மூன்று தலைமுறை அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தது. பிள்ளைகளின் பெயர்கள் நாராயணன், சந்திரசேகரன், விசாலாட்சி, பார்வதி என இருந்தது. பேரப் பிள்ளைகளின் பெயர்கள் சதீஷ், சபிதா, சந்தோஷ், பிரவீன், ராகுல் என்று கொஞ்சம்நவீனமாகியிருந்தது. இந்தப் பேரப்பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களோடு ஓர் ஒவ்வாமை இருக்க வேண்டும். அது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டிய பெயர்களில் இருந்து புலனாகியது. மூதாட்டியின் கொள்ளுப் பேரர்களின் பெயர்கள் அனிஷா, பிரமோத், லக்ஷிதா, திரிஷாணா, அனோன்யா, சரித், தனுஷா என்கிற ரீதியில் இருந்தது.

இருபெயரொட்டு இன்னல்கள்

  • குடும்பத்தின் பெரியவர்கள் பெயர், அரசியல் தலைவர்கள் பெயர், அபிமான நட்சத்திரங்கள் பெயர், வடமொழிப் பெயர்- இப்படி விரும்பிய வண்ணம் பெயரிடுவது தமிழர்களுக்குச் சாத்தியமாகிறது. அதற்கு இந்த முதற்பெயர் - குடும்பப் பெயர் கலாச்சாரம் இல்லாததுதான் காரணமாக இருக்க வேண்டும். இப்படி பெயர் சூட்டும் வழக்கத்தை உலகின் பிறபகுதிகளில் காண முடியாது என்றுதான் நினைக்கிறேன்.
  • ஆனால் இப்படி திறந்த மனத்துடன் பெயரிடுவதற்காகவும் சாதிப் பின்னொட்டைக் கைவிட்டதற்காகவும் தமிழர்களுக்கு யாரும் பாராட்டுக் கூட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. மாறாக இன்னல்கள்தாம் வருகின்றன. இந்த முதற்பெயர்- குடும்பப் பெயர் ஆகிய இரு பெயரொட்டுத் தொடர்பான தமிழர்களின் இன்னல்கள் இரண்டு அட்டைகளின் வடிவத்தில் வந்தது. அது அத்தோடு முடிவதில்லை. திரைகடல் தாண்டும் எல்லாத் தமிழர்களும் இந்த இரு பெயரொட்டுப் பிரச்சினையை நேரிட்டிருப்பார்கள். அந்தச் சிக்கல்களுக்குள் போவதற்கு முன்னால் இது தொடர்பான சில சர்வதேச நடைமுறைகளைப் பார்க்கலாம்.

மேலை நாடுகளில் குடும்பப் பெயர்

  • வெளிநாடுகளில் ஒருவருக்குக் குடும்பப் பெயர் தந்தை வழியாகவோ கணவர் வழியாகவோ வரும். ஆகவே, அது ஆண்பால் பெயராகவே இருக்கும். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பின் தாத்தா பிரெடரிக் டிரம்ப், ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர். டிரம்ப் என்பது ஜெர்மனியில் வழங்கும் ஒரு குடும்பப் பெயர். அதிபரின் அப்பா பிரெட் டிரம்ப், அம்மா மேரி ஆன் டிரம்ப், மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப், ‘எங்கள் குடும்பம் எப்படி உலகின் அதிபயங்கர மனிதனை உருவாக்கியது?’ என்கிற நூலின் ஆசிரியர் மேரி டிரம்ப், அதிபரின் அண்ணன் மகள். குடும்பப் பெயருடன் திருவாளர், செல்வி, முனைவர் போன்ற மரியாதை முன்னொட்டுகளைச் சேர்க்க வேண்டும்.
  • முதற்பெயருக்கு மரியாதை விளி தேவையில்லை. நேர்ப்பேச்சுகளில் மின்னஞ்சல்களில் முதற்பெயரையும், சம்பிரதாயமான கூட்டங்களில் அலுவல்ரீதியான கடிதங்களில் குடும்பப் பெயரையும் பயன்படுத்துவார்கள். வயதில் மூத்தவர்களையும்கூட அணுக்கமானவர்களெனில் முதற் பெயரில் விளிக்கலாம். வயதில் குறைந்தவர்களானாலும் குடும்பப் பெயரைப் பயன்படுத்துகிறபோது மரியாதை முன்னொட்டைச் சேர்க்க வேண்டும்.
  • உங்கள் மேலதிகாரியின் பெயர் டோனி பிளச்சர் என்று வைத்துக்கொள்ளலாம். அவரை நீங்கள் டோனி என்று நேர்ப்பேச்சில் விளிக்கலாம். மின்னஞ்சலில் அன்புள்ள டோனி என்று எழுதலாம். அவர் கோபிக்கமாட்டார். ஆனால் சம்பிரதாயமான கடிதங்களில், பொதுக்கூட்டங்களில் மிஸ்டர் பிளச்சர் என்றுதான் அழைக்க வேண்டும்; அந்த இடத்தில் டோனி என்று அழைப்பது தவறு. மிஸ்டர் டோனி என்றழைப்பதும் பிழை.
  • ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் வரும் வீட்டின் சொந்தக்காரர் திருமதி ஹட்சன் வீட்டையும் பராமரிப்பார். எல்லாக் கதைகளிலும் ஷெர்லக் ஹோம்ஸ் அவரைத் திருமதி. ஹட்சன் என்றுதான் அழைப்பார். ஹாரி பாட்டர் தனது நண்பனின் பெற்றோரை திருவாளர் வெஸ்லி, திருமதி. வெஸ்லி என்றுதான் அழைப்பான். (உறவினர் அல்லாதவரை அங்கிள், ஆன்ட்டி என்றழைக்கும் வழமை ஆங்கிலேயரிடத்தில் இல்லை).

சீனர்களின் குடும்பப் பெயர்

  • சீனர்களுக்கும் இப்படியான சம்பிரதாயங்கள் உண்டு. ஆனால் ஐரோப்பியர்களைப் போலச் சீனர்கள் குடும்பப் பெயரைப் பின்னால் எழுதமாட்டார்கள். முன்னால் எழுதுவார்கள். சீன அதிபரின் பெயர் ஷி ஜிங்பிங். இதில் ஷி என்பதுதான் குடும்பப் பெயர். மா சேதுங்-இன் குடும்பப் பெயர் மா. ஹாங்காங் பன்னெடுங்காலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்ததால் அவர்கள் ஓர் ஆங்கிலப் பெயரைக் கூடுதல் முதற்பெயராக வைத்துக்கொண்டார்கள்.
  • ஹாங்காங்கின் ஜனநாயகப் போராட்டங்களின்போது செயலாட்சித் தலைவராக இருந்தவர் கேரி லாம் செங் யூட்-கோர். இதில்லாம்என்பது கணவரின் குடும்பப் பெயர். ‘செங்என்பது தந்தையாரின் குடும்பப் பெயர். பலரும் திருமணமான பின் தந்தையாரின் குடும்பப் பெயரைத் துறந்து கணவரின் குடும்பப் பெயரை வைத்துக்கொள்வார்கள். இவரது குடும்பப் பெயர் இப்போதுலாம்என்றாலும், திருமணத்திற்கு முன்பிருந்தசெங்எனும் பெயரையும் களையாமல் வைத்திருக்கிறார். ‘யூட்-கோர்என்பது சீன முதற்பெயர். அதை உச்சரிப்பதற்கு ஆங்கிலேயர்களுக்குச் சிரமமாக இருக்குமென்பதால், கேரி எனும் கிறிஸ்தவப் பெயரொன்றையும் முதற்பெயராகச் சூடிக்கொண்டிருக்கிறார்.
  • காலனிய ஆட்சியாளர்களின் வசதிக்காகப் பலரும் செய்துகொண்ட ஏற்பாடுதான் இது. (பழனியப்பன் அமெரிக்கா போனதும் பால் ஆவதோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம்). செயலாட்சித் தலைவருக்கு அணுக்கமானவர்கள், அவரைக் கேரி என்றழைப்பார்கள்; மற்றவர்கள் லாம் தாய் என்று அழைப்பார்கள்; திருமதி லாம் என்று பொருள். அவரது கணவரை லாம் சாங் என்று அழைப்பார்கள்; திருவாளர் லாம் என்று பொருள். எல்லாக் குடும்பப் பெயர்களும் மரியாதைப் பின்னொட்டோடுதான் அழைக்கப்பட வேண்டும். ஆண்டாண்டுக் காலமாக இப்படி முதற்பெயர், குடும்பப் பெயர் கலாச்சாரத்தோடு வளர்ந்தவர்களுக்கு நமது ஒற்றைப் பெயர் கலாச்சாரம் புரிபடுவதில்லை.

என் கதை

  • 1995இல் நான் ஹாங்காங்கிற்குப் புலம்பெயர்ந்தபோது எனக்கு இந்தக் கதையொன்றும் தெரியாது. அலுவலகத்தில் என்னைராமாஎன்று அழைத்தார்கள். சீன உச்சரிப்பிற்கு அது இசைவாக இருந்ததே காரணம். வேலையில் சேர்ந்த சில நாட்களில் ஒரு திட்டப்பணி தொடர்பான கூட்டத்திற்குப் போனேன். கட்டிடக் கலைஞர்களும் பொறியாளர்களும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள். ஓர் இளம்பெண் சிரத்தையாகக் குறிப்பெடுத்தார். அடுத்த நாள் அது தொலைநகலில் வரும். பங்கேற்றவர்களின் பெயர்-விவரம், குறிப்பின் முதல் பக்கத்தில் இருக்கும். கூட்டம் முடிந்ததும் அந்தப் பெண் நேராக என்னிடம் வந்தார். ‘உங்கள் முதற்பெயர் ராமா, குடும்பப் பெயர் நாதன், அப்படித்தானே?’ என்று கேட்டார்.
  • என் மீதமுள்ள வாழ்நாளின் மிக முக்கியமான கேள்வியை எதிர்கொள்வதை நான் அறிந்திருக்கவில்லை. தவறான பதிலைச் சொன்னேன், ‘இல்லை, என் பெயர் ராமநாதன்; ஒரே சொல், சேர்த்துத்தான் எழுத வேண்டும்’. அவர் அடுத்தபடியாக, ‘அப்படியானால் உங்கள் பெயரின் முன்னால் வருகிற எம் என்பது என்ன?’ என்று கேட்டார். ‘அது தலைப்பெழுத்துஎன்றேன். தொடர்ந்து, ‘அப்படியானால் அதுதான் உங்கள் குடும்பப்பெயராக இருக்க வேண்டும்என்றார். ‘இல்லை, அது என் தகப்பனார் பெயரின் முதலெழுத்துஎன்றேன். ‘அப்படியானால், ராமநாதன் என்பதுதான் உங்கள் குடும்பப் பெயராக இருக்க வேண்டும்என்றார். ‘இல்லை, அது என்னுடைய பெயர்என்றேன். அம்மணி அத்துடன் கேள்விகளை நிறுத்திக்கொண்டார். ஆனால் இதே கேள்விகளை 25 ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் எதிர்கொண்டுவருகிறேன்.
  • கடவுச்சீட்டு வாங்கப்போனால் முதற்பெயரும் கடைசிப் பெயரும் கேட்பார்கள். கடவுச்சீட்டு அலுவலர்களும் முகவர்களும் தமிழர்களிடம் தகப்பனார் பெயரைக் குடும்பப் பெயர் என்று எழுதச் சொல்வார்கள். எனக்கும் அப்படியே சொன்னார்கள். ஆனால், அதில் ஒரு சிக்கல் வந்தது. என் தகப்பனார் பெயர் எனது குடும்பப் பெயராகிவிடும். என்னுடைய பெயர் என் மனைவி மக்களின் குடும்பப் பெயராகிவிடும்.
  • அதாவது, ஒரே குடும்பத்தில் இரண்டு குடும்பப் பெயர்கள் வரும். ‘இது எப்படி சாத்தியம்?’ என்று ஹாங்காங்கில் பலரும் என்னிடம் கேட்டார்கள். அதற்காக நான் ஒரு யுக்தி செய்தேன். என் தகப்பனார் பெயரை எனது முதற்பெயராகவும், எனது பெயரைக் குடும்பப் பெயராகவும் மாற்றிக்கொண்டேன். இப்போது மொத்தக் குடும்பத்திற்கும் ஒரே குடும்பப்பெயர் கிடைத்தது. ஆனால், இதைவிட எளிய வழிகள் இருந்தன என்பது எனக்கு அப்போது தெரியவில்லை.

பெயரைக் கூறு போடலாம்

  • .முத்துலிங்கத்தின்முழு விலக்குஎன்கிற கதையை அப்போது நான் படித்திருக்கவில்லை. நாயகன் கணேசானந்தன் ஆப்பிரிக்காவுக்குப் போவான். போகிற இடமெல்லாம் குடும்பப் பெயர், நடுப்பெயர், முதற்பெயர் என்று கேட்பார்கள். ‘தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்என்று இவன் விஸ்தாரமாக எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் சுருண்ட தலைமுடியை பிய்த்துக் கொண்டு நிற்பார்கள். கடைசியில் ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடிப்பான். ‘கணே சா நந்தன்என்று தன் பெயரை மூன்றாகப் பிரித்துவிடுவான்.
  • முத்துலிங்கம் இந்தக் கதையை 1995இலேயே எழுதிவிட்டார். நான் பல ஆண்டுகள் கழித்துத்தான் படித்தேன். அதற்குள் காலம் கடந்துவிட்டது. கடவுச் சீட்டு, ஹாங்காங் அடையாள அட்டை, தொழிற் பட்டயங்கள், வங்கிக் கணக்குகள் எல்லாவற்றிலும் என் பெயருடன் தகப்பனார் பெயரும் இரும்பால் அடிக்கப்பட்டுவிட்டது. முன்னதாக இந்தக் கதையைப் படித்திருந்தால் 1995இல் என்னிடம் கேள்வி கேட்ட பெண்மணியிடம்ஆம், ஆம்என்று பதிலளித்திருப்பேன்.

இணைய வெளியிலும் இரட்டைப் பெயர்

  • இந்த இரட்டைப் பெயர் இன்னல் பான் அட்டையிலும் கடவுச்சீட்டிலும் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் தொடர்கிறது. இந்தத் தளங்களில் கணக்குத் தொடங்க வேண்டுமென்றால் முதற்பெயரையும் கடைசிப் பெயரையும் உள்ளிட வேண்டும். தலைப்பெழுத்தை மட்டும் எழுதினால் இணையம் ஒப்புக்கொள்ளாது. ஆக தமிழகத்திற்குள் நிலவும் ஒற்றைப் பெயர், இணையவெளியிலும் கடவுச்சீட்டிலும் பான் அட்டையிலும் வெளிநாடுகளுக்குப் போகிறபோதும் இரண்டு பெயர்களாகிவிடுகின்றன. பெயரைப் பிரித்து எழுதலாம் என்கிற யோசனை முத்துலிங்கத்திற்கே காலங்கடந்துதான் தோன்றியிருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அவரது பெயர் அப்பாதுரை முத்துலிங்கம் என்றுதான் இருக்கிறது.
  • உள்ளூரில் விளையாடுகிறபோது வி.ஆனந்தாக இருந்தவர் சர்வதேச அரங்கிற்குப் போனதும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகிவிடுகிறார். நோபல் விருது பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சிதம்பரத்தில் பிறந்தபோது ஆர்.வெங்கட்ராமன் என்றே அறியப்பட்டிருப்பார். 2020 செப்டம்பர் மாதம் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரும் வெளியுறவு அமைச்சரும் கலந்துகொண்டார்கள்.
  • முன்னவர் உள்நாட்டு ஊடகங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் ராஜ்நாத் சிங் என்றே அழைக்கப்பட்டார். பின்னவரின் பெயர் உள்நாட்டில் எஸ்.ஜெய்சங்கர் எனவும் வெளிநாட்டு ஊடகங்களில் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எனவும் குறிப்பிடப்பட்டது. ஏனெனில் வெளிநாட்டு ஊடகங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பெயர்கள் இருக்க வேண்டும் என்று நம்புகின்றன.

என்ன செய்யலாம்

  • என்ன செய்யலாம்? பலரும் செய்வதுபோலத் தலைப்பெழுத்தை விரித்தெழுதி அதுதான் முதற்பெயரென்றோ குடும்பப் பெயரென்றோ சொல்லிக் கொள்ளலாம்; அல்லது பெயரைப் பிரித்தெழுதி ஒரு பாதி முதற் பெயர் என்றும் மறுபாதி குடும்பப் பெயர் என்றும் சாதிக்கலாம். ஆனால் இவையெல்லாம் குறுக்கு வழிகள். நமக்கு பான் அட்டை வேண்டும், கடவுச்சீட்டு வேண்டும், சமூக வலைதளங்களில் கணக்கு வேண்டும்; அதற்காக ஒற்றைப் பெயருள்ள நாம் இரண்டு பெயர்கள் உள்ளதாக அபிநயிக்கிறோம்.
  • தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று முழங்குவதோடு நிறுத்திவிடாமல், அந்தத் தனிக்குணங்களில் ஒன்றுதான் சாதிப்பெயரைத் துறந்தது, அதன் நீட்சியாகத் தமிழன் ஒரு பெயரோடுதான் நிற்பான் என்று சொல்ல வேண்டும். தமிழக அரசும் தமிழ் அறிவாளர்களும் இதை ஒரு பிரச்சினையாகக் கருதி முன்னெடுக்க வேண்டும். முதற்கட்டமாக பான் அட்டையிலும் கடவுச்சீட்டிலும் தமிழர்கள் தலைப்பெழுத்துடன் தங்கள் ஒற்றைப் பெயர்களைப் பதிவுசெய்ய அனுமதி பெற வேண்டும். அடுத்த கட்டமாக இணையத்திலும் அதற்கு வகை செய்யப்பட வேண்டும். எல்லாப் பெயர்களையும் முதற்பெயர் - குடும்பப் பெயர் என்று பார்க்கும் வெளி நாட்டவர்க்கும் வெளி மாநிலத்தவர்க்கும் இதைப் புரிந்துகொள்வது ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும்.
  • அவர்கள் அதை அங்கீகரிப்பதற்குத் தாமதமாகலாம். ஆனால், நாம் மற்றவர்களுக்காக வலிந்து இல்லாத குடும்பப் பெயரை உருவாக்கிக்கொள்வதைவிட ஒரு சமூகமாக எழுந்து நின்று தமிழர்களுக்கு ஒற்றைப் பெயர்தான் என்று சொல்ல வேண்டும். மனத்தடைகளைக் கடந்துவருகிறபோது அவர்களுக்கும் ஒற்றைப் பெயர் பழக்கமாகும். அதன்பிறகு அவர்கள் தமிழர்களுக்கு எழுதுகிற மின்னஞ்சல்களிலும் சம்பிரதாயமான கடிதங்களிலும் ஒற்றைப் பெயரைப் பயன்படுத்துவார்கள். வெளிநாட்டு ஊடகங்களில் வி.ஆனந்த், ஆர்.வெங்கட்ராமன், .முத்துலிங்கம், எஸ்.ஜெய்சங்கர் போன்ற பெயர்களைப் பார்க்கிற காலமும் வரும்.

நன்றி: அருஞ்சொல் (16 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories