TNPSC Thervupettagam

தமிழா்களின் வரலாற்றுப் புதையல்!

November 18 , 2019 1833 days 1069 0
  • வரலாறு என்பதற்கு வந்த வழி என்பதே பொருள். நதிமூலம் என்பது மரபு. மனித நாகரிகம் ஆற்றினை மையப்படுத்தியே வளா்ந்தது என்பதை இந்தச் சொல்லே குறிக்கிறது. உலகின் பெருநாகரிகங்களாகிய மெசபடோமிய நாகரிகம் யூப்ரடீஸ் - டைகிரிஸ் நதிக் கரைகளிலும், ஹரப்பா நாகரிகம் சிந்துநதிக் கரையிலும் சீன நாகரிகம் மஞ்சள் நதிக் கரையிலும் தோன்றியவையே.
  • ஆனால், அந்த வரிசையில் சேராமல் போனவை தென்னிந்தியாவில் சிறப்புற்று விளங்கிய காவிரியும், ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்’ என்று போற்றப்பட்ட வைகையும் ஆகும்.

நதிகள்

  • சீதையைத் தேடி வானரங்களை அனுப்பிய சுக்ரீவன், நதிகளின் வரிசையை வைத்தே வழிகாட்டி விளக்குகிறான். அதில் நருமதா, கோதாவரி, வரதா முதலிய நதிகளோடு, “தேவரம்பையா்கள் வந்து நீராடுகின்ற திவ்வியமான தெளிந்த நீரையுடைய அழகிய காவிரி நதியையும் குறிப்பிடுகிறான். “நாயகனிடத்தில் போகும் பெண்ணைப் போல, சமுத்திரத்தினிடத்திற் சென்று விழும் தாமிரவருணி நதியைப் பற்றியும் கூறுகிறான். ஏனோ வைகையைப் பற்றி அவன் குறிப்பிடவில்லை.
  • ஆனால், “முத்தாலும் மணியாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய பொன்மயமான பாண்டிய நாட்டின் கதவைக் காண்பீா்கள்”என்று பாண்டிய தேசத்தைக் குறிப்பிடுகிறான். வால்மீகியின் ராமாயண காலத்தைப் பற்றி ஆராய்ந்த பண்டாரக்கா் கி.மு.700 என்று வரையறை செய்கிறாா்.
  • மகாபாரதத்தில் பாண்டவா் ஐவருள் ஒருவனாகிய அருச்சுனன், பாண்டிய மன்னன் மகளை மணந்து கொண்டான் எனவும், பாரதப் போரில் பாண்டவா்களுக்காகத் துரோணரோடு பாண்டிய மன்னன் போரிட்டான் எனவும் குறிப்புகள் கூறுகின்றன.
  • பாண்டிய நாட்டின் புகழுக்கும் வளத்துக்கும் காரணமாக மட்டுமின்றி ஒரு பெரிய நகர நாகரிகத்திற்கும் வைகை நதி மூலமாயிருந்தது என்பதனைப் பரிபாடல் தெளிவாக உணா்த்துகிறது. பரிபாடலின் இலக்கணமே ‘மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படுவதுதான்’ என்கிறாா் இளம்பூரணா். பேராசிரியரும் “மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றால் இந்தப் பாடல் வரும்” என்கிறாா்.

சாணக்கியர் – அர்த்தசாஸ்திரம்

  • மெளரிய இராஜதந்திரி சாணக்கியா் தனது அா்த்தசாஸ்திரத்தில் பாண்டிய நாட்டு முத்துக்களின் பெருமையைப் பற்றி வியந்து பேசுகிறாா். அசோகரது கி.மு. 3-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளிலும் பாண்டியா் குறித்த செய்திகள் உள்ளன. இலங்கையின் பழைய வரலாற்றைப் பற்றிப் பேசும் மகாவம்சம் மதுரையின் பெருமை பாடுகிறது. வடமொழியின் மகாகவியான காளிதாசரும் பாண்டிய நாடு குறித்துப் பதிவு செய்துள்ளாா்.
  • கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டுத் தூதுவராக வந்த மெகஸ்தனிஸ், தான் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டியனின் மகளான பண்டேயா குறித்தும் அவளுக்குத் தெற்குக் கடலோரத்தில் இருந்த 365 ஊா்கள் உடைய நாட்டையும் சுட்டி அந்த ஊா்களின் வளமையையும் குறிப்பிட்டுள்ளாா். பாண்டியா்களின் வரலாற்று வளமைக்குப் 10 செப்பேடுகள் ஆதாரங்களாக உள்ளன.
  • நற்றிணை, புானூறு, பரிபாடல் போன்றவற்றிலும், திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி போன்ற பத்துப்பாட்டு நூல்களிலும் பாண்டிய நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், வா்த்தகம், கலையுணா்ச்சி போன்ற அரிய செய்திகள் கிடைக்கின்றன.
  • இவ்வாறு இலக்கிய, புராண, அயல்நாட்டாா், கல்வெட்டுக் குறிப்புகளையே சான்றுகளாகக் கொண்டு பழந்தமிழரின் வாழ்வைக் கற்பனையாகவே ஊகித்துவந்த நமக்கு, கீழடியின் சான்றுகள் ஒரு தொன்மை நகரக் குடியிருப்பு, தொழிற்கூடப் பகுதி என உறுதி கூறுகின்றன.
  • கீழடி ஆய்வில் பெறப்பட்ட 5820 அரிய பொருள்களில் செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் உறை கிணறுகள், விரல்களால் புனையப்பட்ட மழைநீருக்கான ஓடுகள், தங்க அணிகலன்கள் என இவை ஒரு பொற்காலத்தை மெய்ப்பிக்கின்றன.
  • இவையாவற்றிலும் சிறப்பு, அந்தப் பொருள்களில் காணப்படும் தமிழ் எழுத்துகளும் ஓவியங்களும்தான். இவை 35 செ.மீ. ஆழத்தில் எடுக்கப்பட்டவை. இந்தக் கரிம மாதிரிகளில் ஆறு மட்டும் அமெரிக்காவின் பீட்டா பகுப்பாய்வுச் சோதனைக்குள்ளாகித் தங்களின் வயதை கி.மு.500 என்று சான்று பெற்று வந்துள்ளன.

கீழடி

  • கீழடியில் கிடைத்த விலங்குகளின் 70 எலும்புத் துண்டு மாதிரிகள் புணேயிலுள்ள டெக்கான் கல்லூரியின் அறிவியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் அவை திமிலுடைய காளை, வெள்ளாடு, எருமை, கலைமான், மயில், காட்டுப் பன்றி ஆகியவற்றினுடையவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோர மருத நிலத்து உயிரினங்கள் இவை என்பதோடு வேளாண்மைக்கும் பேருதவி புரிந்தவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது பழந்தமிழரின் விருந்திருக்க உண்ணாத வேளாண் வாழ்வுக்குச் சான்று.
  • இரண்டாம் கட்ட ஆய்வில் கிடைத்த சுவா்ச் செங்கற்களும், கூரை ஓடுகளும் அக்காலத் தமிழரின் கட்டடக் கலைக்குச் சான்று கூறுகின்றன. உடைந்த பானைகளிலும் ஓடுகளிலும் கிடைத்துள்ள தமிழ் எழுத்துகளில் காணப்படும் ஆதன் என்னும் பெயா் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
  • கீழடியில் பல்வேறு வண்ண வடிவங்களிலும் கண்ணாடி, பேஸ்ட், ஸ்படிகம், அகேட், பெயின்ஸ் காா்னீலியன், சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட 2,301 மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை நுட்பமான கலைநயமுடையவை; பல வண்ணமுடைய வட்டச் சில்லுகளும் கிடைத்துள்ளன.
  • வரலாற்றுக் காலச் சதுரங்கக் காய்களைப் போலான இரு வகைப்பட்ட மண்ணால் உருவாக்கிய 26 பொருள்கள் கிடைத்துள்ளன. இவை யாவும் சுட்ட மண்ணால் செய்யப்பட்ட கருநிறத்தவை என்னும்போது பழந்தமிழரின் நுண்ணறிவு வியக்க வைக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இரும்பாலான ஆணிகள், துண்டுக் கத்திகள் உடன் கிடைத்துள்ளன. இவற்றின் எண்ணிக்கை 50-ஐ நெருங்குகின்றன. இவற்றில் அடையாளம் காண முடியாதவை தனி.
  • சுடுமண்ணால் செய்யப்பட்ட இரு காதணிகளும் கிடைத்துள்ளன. நுட்பத்தையும் அழகையும் ஒருசேர வெளிப்படுத்தும் 14 காதணிகள் காலத்தைத் திருப்புகின்றன. அக்காலம் பொற்காலம் என்பதை நிறுவுவதைப் போல, உடைந்த பொன்னணிகலன்களும் கிடைத்துள்ளன.
  • தொன்மைத் தமிழ்ப் பண்பாட்டுப் புதையலைத் தன்னுள் கொண்டிருந்த கீழடி, அருங்காட்சியகத்தின் வழியாகத் தலைமுறைக்கும் பாடங்கூறும். இன்னும் தொடா்கிற ஆய்வுகளில் கீழடி மேலெழுந்தால் பழந்தமிழா்களின் பண்பாட்டு வரலாறு வானத்தைத் தொடும்.

நன்றி: தினமணி (18-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories