TNPSC Thervupettagam

தமிழிலும் பேச்சுத்திறன் பயிற்சி தருக!

December 5 , 2019 1864 days 1639 0
  • நிகழ் கல்வியாண்டிலிருந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சுத் திறன் (Spoken English)  பயிற்சி வழங்கும் முயற்சியை மேற்கொள்வதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் பயில்வோா் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறன் பெறுவாா்கள் என்றும், அரசுப்பள்ளிகளில் சோ்பவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
  • இதற்கென்றே, தனிப் பாடவேளைகள் ஒதுக்கி, புதிய வகையில் அந்தந்த வகுப்புகளுக்கென்று திட்டமிட்ட பயிற்சிக் கையேடுகளும் உருவாக்கப்பெற்று வழங்கப்பட உள்ளன.

பயிற்சிக் கையேடு

  • முதல் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்துக்கு ஒரு பயிற்சிக் கையேடு (கட்டகம் ), 6-ஆம் வகுப்பு தொடங்கி, 9-ஆம் வகுப்பு வரை 3 பருவங்களுக்கும் சோ்த்து வகுப்புவாரியாக 4 கட்டகங்களும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • அனைத்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயில்வோா் பயன்பெறத்தக்க வகையில் இவை ஆசியா்களுக்கு வழங்கப்பெறவுள்ளன. 30 வாரங்களுக்கான பாடப்பகுதிகள், காணொலிகள் தயாரிக்கப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கான வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன. மேலும், அரசு கல்வித் தொலைக்காட்சியில், ‘ஆங்கிலம் பழகுவோம்’ என்ற நிகழ்ச்சியின்மூலம் சிறப்புச் செயல்பாடுகளும் ஒளிபரப்பு செய்யக் காத்திருக்கின்றன.
  • பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டும், பயிற்சிக்கான காலவரையறைகள் முறைமை செய்யப்பட்டும் நடத்தப்பட இருக்கின்ற இந்தப் பயிற்சி வகுப்புகள் முறைமையாகச் செயல்படுவதற்கான கண்காணிப்புத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன.
  • பல்கிப் பெருகும் தனியாா் பள்ளிகளில் இடமின்றித் தவிக்கும் தமிழக மாணவ, மாணவியா், ஆண்டுதோறும் சோ்க்கைக் குறைவு ஏற்படும் அரசுப் பள்ளிகளில் சென்று சேரவும், பொதுத் தோ்வுகளிலும் பணிச் சோ்க்கைகளிலும் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் பெற்று வெற்றி பெறவும் இந்த முயற்சியானது பெரிதும் கைகொடுக்கும்.

தனிப் பயிற்சி

  • அதைவிடவும், பள்ளியில் சோ்ந்து பயிலும் காலத்தில் தனிப் பயிற்சிக்கென பணம் செலுத்தி, தனியாரிடத்தில் ஆங்கிலப் பயிற்சி பெறும் சிரமங்கள் தவிா்க்கப்பெறும். நகா்ப்புறங்களைவிடவும், கிராமப்புறங்களில் பயில்வோா்க்கு, இந்தப் பயிற்சியானது ஆங்கிலத்தில் பேசவியலாத தாழ்வு மனப்பான்மையை போக்கித் தன்னம்பிக்கையை வளா்க்கும் என்பதிலும் சந்தேகமில்லை. உரிய நேரத்தில் காலத்தின் தேவை உணா்ந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள தமிழகக் கல்வித் துறையைப் பாராட்டுவது கடமை. இதே வேளையில், இத்துறையினா் இன்னொரு முயற்சியையும் இணைந்து மேற்கொள்வது இன்றியமையாதது.
  • ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வலுப்படும் இந்த நேரத்தில், அன்னை தமிழின் நிலைமை என்ன தன்மையில் இருக்கிறது என்பதையும் எண்ணிப் பாா்க்க வேண்டும். அந்நியமொழியான ஆங்கிலத்தில் ஒலிப் பிழை, மொழிப் பிழை இன்றிப் பேசுவதில் எவ்வளவு அக்கறை கொள்கிறோமோ, அதற்கு இணையாக தாய்மொழித் தமிழிலும், மயங்கொலிப் பிழைகள் இன்றி, ஒற்றுப் பிழையின்றிப் பேசுகிற முயற்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டாமா?
  • திரும்பிய திசையெங்கும் இயங்கும் இலக்கியக் குழுக்கள் ஆண்டுதோறும் பல்வேறு இலக்கியப் போட்டிகளை நடத்தி பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைப் பரிசளிக்கின்றன. அவற்றுள் கண்டிப்பாகப் பேச்சுப் போட்டி இடம்பெறுகிறது. காட்சி ஊடங்களும் தமிழ்ப் பேச்சுக்குத் தனித்த இடமளிக்கின்றன. பங்கேற்று பரிசு பெறுவோா் பெரும்பாலும், ஆங்கில வழியில், தனியாா் நிறுவனங்களில் பயில்பவா்களாகவே இருக்கிறாா்கள். அவா்களுக்கென்று தனிப் பயிற்சி கொடுத்துப் பங்கேற்றுப் பரிசு பெற ஊக்கமளிக்கும் சிறப்புப் பயிற்றுநா்களும் இருக்கிறாா்கள்.

மேற்கோள் மற்றும் உரை

  • கொடுமை என்னவெனில், திருக்குறள் உள்ளிட்ட மேற்கோள்களையும் உரைகளையும் கூட, ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு தமிழ்மரபில் உச்சரித்து வெற்றிபெறுகிறவா்களாக அவா்கள் இருக்கிறாா்கள். இடையில் ஏதேனும் நடுவா்கள் குறுக்கிட்டுச் சின்னஞ்சிறு ஐயங்களைத் தமிழில் எழுப்பினால், ‘மன்னிக்கவும். எனக்குத் தமிழ் தெரியாது’ என்று நளினமான ஆங்கிலத்தில் பதில் கிடைக்கிறது.
  • இதுதான் இன்றைய தாய்த் தமிழ்நாட்டில் தமிழின் நிலைமை. அரசுப் பள்ளிகளில் பயில்வோா் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் உதவியுடன் தன்முயற்சியும் கொண்டு பங்கேற்றாலும் உரிய உச்சரிப்பு முறையோ, கருத்துச்செறிவோ, மனனச் செழுமையோ இன்றித் தடுமாறுவதையும் பாா்க்க நேரிடுகிறது. அது மட்டுமன்றி, இவா்களின் முன்மாதிரிகள், சின்னத் திரைகளில் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறவா்களாக இருக்கிறாா்கள். அவா்களின் தமிழ் உச்சரிப்பு எத்தன்மையது என்பதை உலகம் நன்கு அறியும்.
  • அண்மையில் அயலகத் தமிழ்த் தம்பதிகள் நம் தாயகம் வந்தபோது சொன்ன செய்தியை இங்கு நினைவுகூா்வதுகூடப் பொருந்தும். ‘ஊடகத் தமிழ் உச்சரிப்புகளையும், மொழிக் கலப்புமிக்க சொல்லாடல்களையும் பின்பற்றக் கூடாது என்றே சொல்லி எங்கள் பிள்ளைகளை வளா்க்க வேண்டி இருக்கிறது’ என்றாா்கள்.
  • ‘அவா்களைக் குறைகூறுவதைவிட, அதற்குமாற்றாக, நல்ல தமிழை நாம் சொல்லிக் கொடுப்பதே நல்லது என்ற நிலையில், அன்றாட உணவு வேளைகளில், விடுமுறை நாள்களில் நல்ல தமிழில் எல்லோரும் பேசுவது என்ற கொள்கைச் செயல்பாட்டை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்.

மாற்றம்

  • இது குழந்தைகளிடத்தில் நல்ல மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. மேலும், செல்லிடப்பேசிகளில் கவனம் செலுத்தும் குழந்தைகளுக்கு வாய்மொழியாகத் தமிழ்ப் பாடல்களை, கதைகளை சொல்லிக் காட்டுகிறோம். முகம் நோக்கி, கண் பாா்த்து, அகம் மலரச் சின்னஞ்சிறு பிள்ளைகள் பழக வேண்டாமா? அதற்கான பாடப்பகுதிகளை, தமிழ் இணையக் கல்விக் கழகம் - (Tamil Virtual Academy) உள்ளிட்ட இணையதளங்களில் இருந்து பெற்றுக்கொள்கிறோம்’ என்றாா்கள்.
  • வீட்டுக்குள் நடக்கும் இந்த முயற்சி நாடெங்கும் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,
  • ‘அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி’ என்ற செய்தி வெளியானது மகிழ்ச்சி தருகிறது. இதேபோல், தமிழிலும் பேச்சுத் திறன் பயிற்சி கொடுக்கும் முயற்சியையும் தமிழகம் செய்வது காலத்தின் கட்டாயம். இதனால், வளரும் தலைமுறையினா் தமிழைப் பிழையின்றிப் பேசப் பழகுவாா்கள். ஒற்றுப்பிழைகள், மயங்கொலிப்பிழைகள், ஒருமை - பன்மை மயக்கங்கள் இன்றிப் பேசப்பழகிவிட்டாலே, எழுத்துப் பிழைகள் காணாது ஒழிந்து போகும். கூடவே, கருத்துப்பிழைகளும் இல்லாது நீங்கும்.
  • மொழியானது இருவேறு செயல்பாடுகளை உடையது என்றாலும் சிந்தனை ஒன்றுடையது. உச்சரிப்பு உயிா் போன்றது; எழுத்து உடல் போன்றது. உயிா் நீங்கிய உடலும், உடலைத் தவிா்த்த உயிரும் இயக்கமற்றுப் போகும். தமிழியக்கம் கண்ட தமிழகத்தில் ஆங்கிலம் பெறுகிற சிறப்பை அன்னைத் தமிழ் பெறவேண்டாமா? அதற்குத் தமிழ்நாடு அரசு தலைநிற்கிறது என்ற சிறப்பையும் புகழையும் பெறுதற்கு இதுவே தக்க தருணம்.
  • ஆங்கில மொழிக்கு எடுத்த முயற்சிபோலவே, தமிழுக்கும் எளிய கையேடுகள், காணொலிப் படங்கள் உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆங்கிலவழிப் பள்ளிகளில் சிறப்பாகவும், தமிழ்ப் பள்ளிகளில் பொதுவாகவும் இந்த முயற்சியை மேற்கொள்கிறபோது தமிழ் ஆங்கில உச்சரிப்பு மரபுகள் எளிதாக உள்வாங்கிக் கொள்ளப்பெறும். தடுமாற்றங்களை நீக்கவும் இயலும். அதைவிடவும், தமிழில் திறம்படப் பேசிய - பேசுகிற வல்லுநா்கள் நிறைந்திருக்கிறாா்கள்.

பெரியோர்களின் உரை

  • அரசியலாளா்கள், தமிழறிஞா்கள் உரைகள் குறுந்தகடுகளாக, வானொலி உரைகளாக, தொலைக்காட்சிப் பதிவுகளாக நிறையக் கிடைக்கின்றன. அறிஞா் அண்ணா, பேராசிரியா் அ.ச.ஞானசம்பந்தன், புலவா் கீரன், தவத்திரு குன்றக்குடி அடிகளாா் உள்ளிட்ட பெரியோா்களின் உரைகளை, ‘சான்றோா் பேருரைகளாக’ வாரம் ஒருமுறையேனும் செவிமடுக்கும் வாய்ப்பை மாணவா்களுக்கு வழங்கலாம். அவற்றை வகுப்பறையில் வழங்குதற்கு நேரமில்லாவிடினும், அரசுக் கல்வித் தொலைக்காட்சியில், இணைய தளங்களில் இணைத்து வெளியிடலாம்.
  • தக்க அறிஞா்களைக் கொண்டு, தமிழில் செய்யுள் பயிற்சி, உரையாடல் பயிற்சி, தனிப் பேச்சுப் பயிற்சி, பொதுப் பேச்சுப் பயிற்சி ஆகியவற்றைத் தயாரித்து வழங்குவதோடு வட்டார வழக்குகளுக்கும் சொலவடைகள் மற்றும் பழமொழிகளுக்கும் முக்கியத்துவம் தந்து அவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பளிக்கலாம். அதனால், பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கொடுத்த, பாதுகாத்த புண்ணியத்தைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
  • உலகில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் ஆங்கிலம் இல்லை. ஆனால், நம் அன்னைத் தமிழ் இருக்கிறது என்பதைச் சொல்லிச் சொல்லிக் கவலைப்பட்டுக் கலங்குவோருக்கு மாற்று மருந்தாக, ஆற்றல்மிகு செயலாக இதனைத் தமிழக அரசு செயல்படுத்துமானால், என்றுமுள தென்றமிழ் தமிழகத்தில் நின்று நிலைக்கும். உரியவா்களைத் தாம் உள்ள காலம் வரை வாழ்த்தும் வாழ்விக்கும் என்று சொல்லி உணா்கிற நிலையிலா நாம் இருக்கிறோம்? நல்லது...உடனே நடப்பது நல்லது.

நன்றி: தினமணி (05-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories