TNPSC Thervupettagam

தமிழில் அரசமைப்பு: வளர்ந்துவரும் தனி வரலாறு

November 26 , 2021 975 days 796 0
  • தமிழ்நாட்டில் நாடு போற்றும் வழக்கறிஞர்கள் பலர் உண்டு என்றாலும் சட்டம் குறித்த விவாதங்களைத் தமிழிலும் நிகழ்த்துபவர்கள் மிகச் சிலரே. சட்ட அறிவும் தமிழ் உணர்வும் ஒன்றுசேர்ந்த அத்தகைய ஒருசிலரில் எழுத்தாளரும் வழக்கறிஞருமான ‘சிகரம்’ ச.செந்தில்நாதனும் ஒருவர்.
  • இந்திய அரசமைப்பு குறித்த நூலொன்றை அவர் எழுதியிருக்கிறார். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் விளக்கங்கள், விமர்சனங்கள், தீர்ப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
  • வழிபாட்டு உரிமைகள் பற்றிய சட்ட விளக்க நூல்களை எழுதியுள்ள செந்தில்நாதன், நீதிமன்றப் பின்னணியில் ‘நீதியரசர் மா.மாணிக்கம்’ என்ற நாவல் ஒன்றையும் எழுதியவர்.
  • அரசமைப்பு குறித்து அண்மையில் வெளிவந்திருக்கும் அவரது நூலில், இந்திய அரசமைப்பின் சுருக்கமான வரலாறு, அரசமைப்பு நிர்ணய சபை, முக்கியமான தீர்ப்புகள் ஆகியவற்றுடன் ‘சில விமர்சனங்கள், சில பார்வைகள்’ என்ற தலைப்பிலான சிறப்புக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
  • அரசமைப்பு குறித்த விரிவான விவாதங்கள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஆதார நூல்களும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
  • இந்திய அரசமைப்பின் அதிகாரபூர்வமான தமிழாக்கத்தில் பெரும்பங்கு வகித்த தமிழறிஞர் கு.சிவமணி, 90 வயதைக் கடந்த நிலையில், கிரான்வில் ஆஸ்டின் எழுதிய ‘இந்திய அரசமைப்பு வரலாறு’ குறித்த ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்.
  • தமிழறிஞர்களின் பங்களிப்புகளைப் பாராட்டுகிற நேரத்தில், இத்துறையில் நம்முடைய போதாமைகளையும் தேக்க நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
  • இந்திய அரசமைப்பு விவாதிக்கப்பட்டபோது, அந்த அவையில் இடம்பெற்றிராத அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அது குறித்து வெளியிட்ட கருத்துகள் என்ன என்பதும் தொகுத்து ஆராயப்பட வேண்டியது.
  • இந்திய அளவிலேயே அதற்கான ஆய்வுத் தேவை உள்ளது என்றபோதிலும், அரசமைப்பு நிர்ணய அவையில் தென்னிந்தியாவின் மொத்தப் பிரதிநிதியாகவும் காங்கிரஸ் கட்சியே இருந்தபோது, திராவிட இயக்கம் கொண்டிருந்த பார்வையும் பின்பு அதில் ஏற்பட்ட மாற்றங்களும் தனித்துப் பார்க்கத் தக்கவை.
  • செந்தில்நாதன் தன்னுடைய நூலில், அரசமைப்புத் திருத்தங்களுக்கும் அவற்றின் பின்னணிக்கும் சிறப்புக் கவனம் கொடுத்துள்ளார்.
  • இதுவரையிலுமான அனைத்துத் திருத்தங்களையும் உள்ளடக்கிய நூலாக அது அமைந்துள்ளது.
  • இந்திய அரசமைப்பின் முதல் திருத்தங்களில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்குத் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களே வழிவகுத்தன.
  • 1957-ல் நடந்த அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டங்கள் குறித்து மட்டுமே ஏறக்குறைய 2,500 பக்க அளவில் திருச்சி என்.செல்வேந்திரன் புத்தகம் எழுதியிருக்கிறார்.
  • அரசமைப்பின் முகப்புரையில் 1976-ல் ‘சோஷலிஸம்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டபோது, அதை ஆதரித்து தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் அ.இராமமூர்த்தி ‘சோஷலிஸ்ட்’ என்ற பெயரில் தனி மாத இதழே நடத்தியிருக்கிறார்.
  • இந்திய அரசமைப்புத் திருத்தங்கள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட விவாதங்களும்கூடத் தனியாகத் தொகுக்கப்பட வேண்டியவை.
  • காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்திலும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலத்திலுமாக நடந்த அத்தகைய விவாதங்கள் மத்திய-மாநில உறவுகளுக்கு இடையிலான வரலாற்று ஆதாரங்களும்கூட.

ஷரத்து மாறி கூறு ஆனது

  • அரசமைப்பு குறித்து தமிழில் நூல்கள் நிறைய உண்டு. சட்ட மொழிபெயர்ப்புகள் தவிர, அறிமுக நூல்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலிருக்கும்.
  • பெரும்பாலும் அவை போட்டித் தேர்வுக்கான பாடக்குறிப்புகளாக மட்டுமே உள்ளன. செந்தில்நாதனின் நூல் மாணவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் பயன்படத்தக்கது என்றாலும், இந்திய அரசமைப்பு குறித்த ஆழமான அரசியல் புரிதலை வேண்டி நிற்போருக்கும் பயன்படக்கூடியது.
  • சட்டத் துறை சார்ந்த சொற்களால் வாசகர்களை விலகி நிற்க வைத்துவிடாமலும் எளிமை கருதி, சாரம் நீர்த்துப் போகாத வகையிலும் கவனத்தோடு இந்தப் புத்தகத்தை செந்தில்நாதன் எழுதியிருக்கிறார்.
  • இந்திய அரசமைப்பு இயற்றப்பட்ட காலத்திலிருந்தே அது குறித்துத் தமிழில் புத்தகங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
  • ஐம்பதுகள் தொடங்கி வெளிவந்த புத்தகங்களை ஒருசேர இன்று திரும்பப் பார்க்கையில், மொழியாக்கங்களில் நிகழ்ந்துவரும் செம்மையாக்கம் வியப்பளிக்கிறது. ‘ஆர்ட்டிகிள்’ (Article) என்ற சொல்லை செந்தில்நாதன் ‘கூறு’ என்று மொழிபெயர்த்துள்ளார்.
  • வழக்கமான சட்டங்களின் ‘பிரிவு’ என்ற வார்த்தையிலிருந்து அதை வேறுபடுத்திக் காட்டுவதற்குச் சில ஆண்டுகள் முன்புவரை ‘ஷரத்து’ என்றே குறிப்பிடப்பட்டுவந்தது. கூறு என்ற சொல்லைப் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததில் பத்திரிகைகளின் பங்கும்கூடக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.

காலம்தோறும் முகப்புரை

  • அரசமைப்பின் முகப்புரை குறித்த அத்தியாயத்தில் 42-வது திருத்தத்தில் சேர்க்கப்பட்ட சமயச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய சொற்களுக்கு முறையே பகுத்தறிவுவாதிகளும் மார்க்ஸியவாதிகளும் கொள்ளும் பொருளிலிருந்து மாறுபட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பொருள்கொள்வதை செந்தில்நாதன் சுட்டிக்காட்டுகிறார்.
  • ‘ப்ரியாம்பி’ளை (preamble) முகப்புரை என்று சொல்வது இன்று பொதுவழக்காகிவிட்டது. ஆனால், அரசமைப்பு இயற்றப்பட்ட காலத்தில், ‘பிரஸ்தாவனம்’ என்றுதான் அது குறிப்பிடப்பட்டது.
  • ஆங்கிலத்தில் இயற்றப்பட்ட அரசமைப்பு முதலில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தி மொழிபெயர்ப்பையொட்டியே மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
  • அதன் விளைவாக, முகப்புரை ‘சம்பூர்ண பிரபுத்துவ சம்பன்ன லோக தந்தராத்மக கன ராஜ்யமாக அமைத்து’ என்று மொழிபெயர்க்கப்பட்டது.
  • தமிழ் மொழிபெயர்ப்பில் ஊடுருவிய இந்திமயமாக்கலை எதிர்த்து, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் தாங்களே ஒரு மொழிபெயர்ப்பை வெளியிட்டனர்.
  • ‘சுதேசமித்திரன்’ உதவி ஆசிரியர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பில் சுதேசமித்திரன் காரியாலயம் வெளியிட்ட மொழிபெயர்ப்பில், அரசு மொழிபெயர்ப்பின் ‘பிரஸ்தாவனம்’, ‘பூர்வ பீடிகை’ என்றானது.
  • ‘பூர்வ சுதந்திரத்தோடு கூடிய ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிப்பதென்பது இந்திய ஜனங்களாகிய நமது உறுதியான தீர்மானம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டது.
  • முகப்புரை என்ற தலைப்பின் கீழ் ‘இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநலச் சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும்..’ என்று நற்றமிழில் இன்று நாம் படிப்பதற்கு, மேற்கண்டவாறு பல மொழியாக்கங்களைக் கடந்துவந்திருக்கிறோம் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.
  • சட்டத் தமிழ் வரலாற்றில் அதுவும்கூடத் தனித்து எழுதப்பட வேண்டிய அத்தியாயம்தான். இந்திய அரசமைப்புத் தத்துவம்போலவே, அரசமைப்பின் தமிழாக்கமும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த மொழியாக்க வரலாற்றில் ‘சிகரம்’ ச.செந்தில்நாதனும் இப்போது இடம் பிடித்து விட்டார்.
  • நவம்பர் 26: இந்திய அரசமைப்பு நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories