TNPSC Thervupettagam

தமிழுக்கு தஸ்தயேவ்ஸ்கி வந்த கதை

November 14 , 2021 986 days 574 0
  • ஒரு கடலை மிட்டாய் வாங்கக்கூடிய காசில், உயர் தரத்துடன் கூடிய மொழிபெயர்ப்பு நூல்களை சோவியத் யூனியனின் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட காலத்தில் இவான் துர்கனேவ், லியோ டால்ஸ்டாய், சிங்கிஸ் ஐத்மாத்தவ், லெர்மன்தேவ் ஆகியோருடன் தமிழுக்கு அறிமுகமானவர் ஃப்யோதர் தஸ்தயேவ்ஸ்கி.
  • ‘வெண்ணிற இரவுகள்’, ‘சூதாடி’, ‘அப்பாவியின் கனவு’ ஆகிய குறுநாவல்கள் மற்றும் சில கதைகள் வழியாகவே தஸ்தயேவ்ஸ்கியை தமிழில் மட்டுமே படிக்கும் வாசகர்கள் அறியும் சூழ்நிலை இருந்தது.
  • இந்நிலையில், கோணங்கி ஆசிரியராக இருந்து, கவிஞர் சுகுமாரனோடு இணைந்து தஸ்தயேவ்ஸ்கிக்குக் கொண்டுவரப்பட்ட ‘கல்குதிரை’ சிறப்பிதழ், தமிழ் வாசகச் சூழலில் தஸ்தயேவ்ஸ்கி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான செயல்பாடாகும். இதில் சா.தேவதாஸ் மொழிபெயர்த்த ‘மரண வீட்டின் குறிப்புகள்’ குறுநாவல் முக்கியமானது.
  • உலகின் சிறந்த முதல் பத்து நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல் தமிழில் கிடைப்பது 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அருங்கனவாகவே இருந்தது.
  • தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் வாங்கிப் படிப்பதற்கான சூழல் உருவானதைத் தொடர்ந்து, பதிப்புத் தொழிலும் விரிவடைந்ததையொட்டி தஸ்தயேவ்ஸ்கியின் முக்கியமான படைப்புகளை இன்று தமிழிலேயே ஒரு வாசகர் வாசித்துவிட முடியும்.
  • ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலுக்கு தமிழில் இரண்டு மொழிபெயர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. கவிஞர் புவியரசு ஆங்கிலம் வழியாகவும் (என்சிபிஹெச் வெளியீடு), மொழிபெயர்ப்பாளர் அரும்பு நேரடியாக ரஷ்ய மொழியிலிருந்தும் மொழி பெயர்த்துள்ளார் (காலச்சுவடு வெளியீடு).
  • அடுத்த நிலையில் தஸ்தயேவ்ஸ்கியின் மாபெரும் படைப்புகளாகச் சொல்லப்படும் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ நாவல்களை எம்.ஏ.சுசீலா மொழிபெயர்த்திருக்கிறார். அத்துடன் ‘இரட்டையர்’, ‘நிலவறைக் குறிப்புகள்’ ஆகிய படைப்புகளும் எம்.ஏ.சுசீலாவின் மொழி பெயர்ப்பில் வெளிவந்திருக்கின்றன. இவற்றை நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
  • தஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவலான ‘பாவப்பட்டவர்கள்’ கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில், ‘அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய’த்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கிறது.
  • முன்னேற்றப் பதிப்பகம் தொடர்பில் நமக்கு நினைவில் இருக்கும் மொழி பெயர்ப்பாளர்களில் ஒருவரான ரா.கிருஷ்ணய்யா மொழிபெயர்ப்பில் ‘உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்’ நூலை என்சிபிஹெச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ‘வெண்ணிற இரவுகள்’, ‘சூதாடி’, ‘அருவருப்பான விவகாரம்’ போன்ற புகழ்பெற்ற கதைகள் இருக்கின்றன.
  • உலகக் காதலர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயரான நாயகி நாஸ்தென்கா, பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் அழியாப் படைப்பான ‘வெண்ணிற இரவுகள்’ குறுநாவலில் வருபவள்.
  • ‘வெண்ணிற இரவுக’ளின் தாக்கத்தில் எடுக்கப்பட்டதுதான் ஜனநாதனின் ‘இயற்கை’ திரைப்படம். இந்தியில் ரன்பீர் கபூர் நடித்து வெளியான ‘சாவரியா’ படமும் இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டதே. ’வெண்ணிற இரவுக’ளை அழகிய முறையில் நூல்வனம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சா.தேவதாஸ் மொழிபெயர்த்து வெளி வந்திருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் ‘ஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு’ மொழிபெயர்ப்பும் தஸ்தயேவ்ஸ்கியின் வாசகர்களுக்கு முக்கியமானது.
  • நவம்பர் 11, 2021 - தஸ்தயேவ்ஸ்கியின் 200-வது பிறந்த ஆண்டு நிறைவு

நன்றி: இந்து தமிழ் திசை (14 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories