TNPSC Thervupettagam

தமிழுக்குத் தனிப் பல்கலைக்கழகம் கண்ட எம்.ஜி.ஆர்.

December 24 , 2024 28 days 88 0

தமிழுக்குத் தனிப் பல்கலைக்கழகம் கண்ட எம்.ஜி.ஆர்.

  • “நாடோடி மன்னன், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் – எந்த அடைமொழியும் எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியையும் பெருமையையும் வெளிப்படுத்த முடியாது.
  • “அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களை சினிமா, அரசியல் இரண்டு வகையிலும் கட்டிப்போட்டு வைத்திருந்த இந்தப் பெயர் தமிழக சரித்திரத்தின் ஏடுகளில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது”.
  • தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான எம்.ஜி.ஆர். மறைந்த நாளில் முதல் பக்கத்தில் எம்.ஜி.ஆர். என்று தலைப்பிட்டு எழுதப்பட்ட ‘தினமணி’ தலையங்கத்தின் தொடக்க வரிகள் இவை.
  • டிச. 24 - மறைந்து 37 ஆண்டுகளானபோதிலும், அவரைப் பார்த்தறியாத தலைமுறைகள் உருவாகிவிட்டபோதிலும் இன்னமும் மக்கள் மத்தியில் உயிர்த்திருக்கும் பெயர் எம்.ஜி.ஆர்.
  • எம்ஜிஆர் மறைந்த நாள் மாலையில்தான், எம்ஜிஆரும் பங்கேற்க, சென்னையில் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமன் திறந்துவைக்கும் விழா திட்டமிடப்பட்டிருந்தது.
  • இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்து பெருமெடுப்பில் அதிமுக தொண்டர்கள் சென்னையில் திரண்டுகொண்டிருந்தனர். ஆனால், பெருந்துயரமாக அத்தனை பேரும் அவருடைய இறுதி யாத்திரையில் கலந்துகொள்ளும்படியாக மாறிவிட்டது.
  • சில விஷயங்களில் முரண்பட்டவராகத் தோன்றினாலும் எதையும் விட்டுக்கொடுக்காதவராகத் திகழ்ந்தவர் எம்ஜிஆர். கொல்லூர் மூகாம்பிகை  கோவிலுக்குச் சென்று அடிக்கடி வழிபட்டு வருபவராக இருந்தாலும் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையிலும் பிடிப்புக் கொண்டிருந்தார்.
  • பெரியார் நூற்றாண்டு விழாவின்போது, இனிமேல் அரசு நடைமுறைகள் உள்பட அனைத்திலும் பெரியார் சீர்திருத்த எழுத்துகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தியதுடன் பள்ளிப் பாட நூல்களிலும் மாற்றினார்.
  • புதிய எழுத்துகளைப் பயன்படுத்தச் சிலர் தயங்கியபோது, சீர்திருத்த எழுத்துகளில் இருந்தால் மட்டுமே நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தார். இன்றைக்குக் கணினிப் பயன்பாட்டுக்கும் மிகப் பொருத்தமானதாக உலகளாவியதாக மாறிவிட்ட எழுத்துகள் அவரால் நடைமுறைக்கு வந்தவை.
  • அவர் பற்றுக் கொண்டிருந்த பெரியார் மறைந்தது டிசம்பர் 24 ஆம் தேதிதான். அதே நாளில்தான் எம்ஜிஆரும் மறைந்தார். இப்போது இருவரும் ஒரே நாளில் நினைவுகூரப்படுகிறார்கள்.
  • அண்ணாவின் பெயரால் இயக்கம் கண்ட எம்ஜிஆருக்கும் அண்ணாவுக்கும் அவர்களுடைய மறைவிலும் பொருந்திவிட்ட ஒரு விஷயம் – முதல்வராக இருந்த அண்ணா கடைசியாகக் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகர் வாணி மகால் சந்திப்பிலுள்ள கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலைத் திறப்பு விழா.
  • எம்ஜிஆர் கடைசியாக (டிச. 21)  கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி, கத்திப்பாரா சந்திப்பிலுள்ள நேரு சிலைத் திறப்பு விழா.
  • சிலையை, பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி திறந்துவைத்தார். பிரதமரைக் கொண்டு நேருவின் சிலையைத் திறக்கச் செய்ய வேண்டும் என்பது எம்ஜிஆரின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. அது இன்று நிறைவேறுகிறது என அப்போது வரவேற்புரையாற்றிய அமைச்சர் இரா. நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.
  • டிச. 22 ஆம் தேதி தமிழக சுற்றுப்பயணம் முடிந்து புறப்பட்டபோது, விமான நிலையத்துக்குச் சென்று பிரதமர் ராஜீவ் காந்தியை வழியனுப்பிவைத்தார் எம்ஜிஆர்.
  • ஆனால், சில நாள்களிலேயே மறைந்த எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்த மறுபடியும் வர நேரிட்டுவிட்டது பிரதமர் ராஜீவ் காந்திக்கு.
  • எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகிக்கு ஆறுதல் கூற ராமாவரம் இல்லத்துக்கு ராஜீவ் காந்தி சென்றபோது, நெகிழ வைப்பதாக இருந்தது ஒரு காட்சி – எம்ஜிஆரின் உடல்நிலையை விசாரித்து ராஜீவ் காந்தி எழுதியிருந்த கடிதத்தை சட்டமிட்டுத் தன் படுக்கையறையில் மாட்டி வைத்திருந்தார் எம்ஜிஆர் - ‘நீங்கள் கவலைப்படத் தொடங்கினால், பின்னர் உங்கள் உடல்நிலை பற்றி நாடு கவலையுறும்’ என்பது கடிதத்தில் இருந்த ஒரு வரி.
  • எம்ஜிஆரின் இறுதிச் சடங்கில் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டது. மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்திலிருந்து அடக்கம் செய்வதற்காக மெரீனா கடற்கரையை இறுதி ஊர்வலம் சென்றடைய சுமார் 3 மணி நேரமானது.
  • அந்தக் காலத்திலேயே தமிழுக்காகவும் மகளிருக்காகவும் தனிப் பல்கலைக்கழகங்களை உருவாக்கியது எம்ஜிஆருடைய தனிப் பெரும் சாதனை.
  • தமிழுக்கெனத் தனியே தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைத்ததுடன் ராஜராஜன் பெயரில் விருதும் அறிவித்தார். கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். இதுபோல எம்ஜிஆரின் சாதனைகளாக எத்தனை வேண்டுமானாலும் பட்டியலிடலாம்.
  • ‘தினமணி’ தலையங்கத்தில் மேலும் சில வரிகள்:
  • “மதிய உணவுத் திட்டமும் ஏழைகளுக்கான பல இலவசத் திட்டங்களும் அவரது ஆட்சியின் தனிச்சிறப்பான அம்சங்கள்.
  • “தமிழுக்கும் தமிழினத்திற்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகளைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் உண்மையிலேயே அவரால் முடிந்தவரை பாடுபட்டார். அவை பலனளிக்காமல் போனது எம்.ஜி.ஆரின் குற்றமல்ல.
  • “தமிழ்நாட்டில் தமிழை அரியாசனத்தில் ஏற்றிவைத்து தமிழ் மொழி தொடர்பான அனைத்து முயற்சிகளுக்குமே ஆதரவும் ஊக்கமும் தந்துவந்தார்”.
  • மறைந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இன்னும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் நினைவுகூரப்படுகிறார் எம்ஜிஆர்.
  • [டிச. 24 – எம்.ஜி.ஆர். நினைவு நாள்]

நன்றி: தினமணி (24 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories