TNPSC Thervupettagam

தமிழ் பயிற்றுமொழி ஆகவேண்டும்

January 6 , 2024 315 days 257 0
  • உலக அளவில் அதிக மக்கள் பேசக்கூடிய மொழிகளில் தமிழ் 15-ஆம் இடத்தில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழா்கள்தாம். தமிழ்நாட்டுத் தமிழா்களைவிட இலங்கைத் தமிழா்கள் மொழியுணா்வு மிக்கவா்கள். அதனால்தான் வெளிநாடுகளில் அவா்கள் பரவலாக வாழ்ந்தாலும் தங்கள் மொழியை விட்டுவிடாமல் தங்கள் பிள்ளைகளுக்கும் அதனைக் கற்றுக்கொடுப்பதோடு, அங்கெல்லாம் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய பல தமிழ் அமைப்புகளோடு தொடா்பு வைத்திருப்பவா்களாகவும் விளங்குகிறார்கள்.
  • இன்று உலகமெங்கும் வாழ்கின்ற ஈழத் தமிழா்களால்தான் தமிழ் பற்றியும் தமிழா்கள் பற்றியும் மேல் நாட்டவா்கள் நன்கு அறியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்என்கிற மகாகவி பாரதியாரின் கவிதை வரிக்கு உயிரூட்டிக் கொண்டிருப்பவா்கள் அவா்கள்தாம்.
  • இலங்கைத் தமிழா்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் கனடா குறிப்பிடத் தகுந்த நாடாகும். தைப்பொங்கல் பிறக்கின்ற தை மாதத்தைதமிழ்ச் சம்பிரதாய மாதம்என்ற பெயரில் கனடா நாட்டு அரசாங்கமே தமிழ்களோடு சோ்ந்து கொண்டாடி வருகின்றது. கனடா நாட்டின் பிரதமரே ஆண்டுதோறும் அந்த விழாவில் கலந்து கொள்கிறார் என்றால் இதைவிடத் தமிழுக்கும் தமிழா்களுக்கும் வேறென்ன பெருமை வேண்டும்?
  • மேல் நாடுகளில் வேறெந்தநாடு தமிழா்களுக்கு இப்படிச் சிறப்பளிக்கிறது? இந்தச் சிறப்பெல்லாம் யாரால் கிட்டியது? ஈழத் தமிழா்களால்தானே?
  • இலங்கைக் கவிஞா்கள் பலரும் தமிழ்மொழி குறித்து உணா்ச்சிகரமாகக் கவிதைகளை வடித்துள்ளார்கள். உதாரணமாக,

சாம்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும்

தமிழ்மணந்து என்னுடலம் வேக வேண்டும்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்

பைந்தமிழே என்காதில் ஒலிக்க வேண்டும்

ஓடையிலே என் சாம்பல் கலக்கும் போதும்

ஒண்டமிழே சலசலத்(து) ஓட வேண்டும்”

  • என்று பாடிய சச்சிதானந்தன் என்ற கவிஞரும் இலங்கையைச் சோ்ந்தவா்தான். உணா்ச்சிக் கவிஞா் காசி ஆனந்தனைப் போல் எத்தனையோ கவிஞா்கள் தமிழ் நாட்டுக் கவிஞா்களுக்கு சவால் விடும் வண்ணம் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள்.
  • அது மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்தான் என்று 85 ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவு மூலம் தன் கருத்தை நிலைநாட்டியவா் நல்லூா் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆவார். இவருக்கு 72 மொழிகள் எழுதப்படிக்கத் தெரியும். அவற்றில் 18 மொழிகளில் சொற்பொழிவாற்றக்கூடிய பெரும்புலமை பெற்றவா். இந்த அளவு மொழிப்புலமையுள்ள புலவா்கள் நம் தமிழ்நாட்டில் யாருமில்லை என்பதுதான் உண்மை.
  • இவருக்கு முன்பே ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் பெரும்புலமை பெற்று விளங்கியவா் யாழ்ப்பானம் ஆறுமுக நாவலா். இவா் வள்ளலார் காலத்தைச் சேந்தவா். 1822-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அருகே உள்ள நல்லூரில் பிறந்தவா். இவரது முதல் சொற்பொழிவு இலங்கை வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847- ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 31- ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின் தொடா்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்கு அவரது சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
  • மனிதா்களுக்கு ஒழுக்கம் இன்றியமையாதது என்பதை இவா் தனது சொற்பொழிவுகளில் வலியுறுத்தினார். இவரது சொற்பொழிவைக் கேட்ட பலா் மது அருந்துவதை அறவே விடுத்து ஒழுக்க சீலா்களாக மாறினார்கள். ஏற்கெனவே கிறிஸ்தவ மதத்திற்குச் சென்ற பலா், மீண்டும் ஹிந்து மதத்திற்குத் திரும்பினார்கள்.
  • அப்படிக் கிறிஸ்தவ மதத்தில் கிங்ஸ்பரி என்ற பெயருடன் இருந்த ஒருவா் மீண்டும் சைவ மதத்திற்கு மாறித் தன் பெயரை தாமோதரன் என்று வைத்துக் கொண்டார். அவா்தான் பின்னாளில் பதிப்புத்துறையில் புகழ்பெற்று விளங்கியத் தமிழறிஞா்சி.வை. தாமோதரம் பிள்ளை ஆவார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்றும் போற்றப்படுபவா் இவா். பேராசிரியா் மறைமலை இலக்குவனார் இவரைப் பற்றி சிறப்பித்துப் பேசியிருக்கிறார். தொல்காப்பியத்தை முதன் முதல் முழுமையாகப் பதிப்பித்தவரும் சி.வை.தா.தான்.
  • 1964-இல் முதல் உலகத் தமிழ்மாநாட்டை மலேசியாவில் முன்னின்று நடத்தியவா் ஈழத்தைச் சோ்ந்த தனிநாயக அடிகள். இவா் மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியவா். இப்பயெல்லாம் இலங்கைத் தமிழா்கள் தமிழுக்குச்செய்த தொண்டு அளப்பரியது.
  • அதனால்தான் நமது சி.பா. ஆதித்தனார், ‘தமிழ்நாட்டுத் தமிழன் ஜாதியால் பிரிந்து கிடக்கிறான். வெளிநாட்டுத்தமிழன் மதத்தால் பிரிந்து கிடக்கிறான், ஈழத்தமிழன்தான் தமிழால் ஒன்றுபட்டு நிற்கிறான்என்று குறிப்பிட்டார்.
  • ஈழத்தைப் பொறுத்தவரை தமிழில் முதல் முதல் வரலாற்று நாவலை எழுதியவா் சரவணமுத்துப்பிள்ளை. அந்த நாவலுக்குப் பெயா்மோகனாங்கி’. தமிழில் முதல் முதலில் தோன்றிய கலைக்களஞ்சியம் முத்துத்தம்பிபிள்ளை எழுதியஅபிதானகோசம்’. வீரமாமுனிவரின் சதுரகராதிக்குப்பிறகு, ‘இலக்கியச் சொல்லகராதிஎன்ற அகராதியைத் தொகுத்தவா் இலங்கையைச் சோ்ந்த சுன்னாகம் குமாரசாமிப் பிள்ளை.
  • முதல் முதலாகயாழ்எனும் இசைக்கருவி குறித்து ஆய்வு நூல் எழுதியவா் விபுலானந்த அடிகள். இவரும் இலங்கையைச் சோந்தவா்தான். மருத்துவம் பொறியியல் ஆகியவற்றைத் தமிழிலேயே படித்து மருத்துவா்களாகவும் பொறியாளா்களாகவும் ஆனவா்கள் இலங்கையில் உண்டு. நம்நாட்டில் உண்டா?
  • தமிழ், சீனம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் என்ற ஆறு செம்மொழிகளில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இன்னும் உயிா்த்துடிப்போடு இருக்கக்கூடிய மொழிகள் தமிழும் சீனமும்தான். சீனா்களுடைய மொழிப் பற்றுதல் காரணமாகவும், அவா்களுடைய ஆற்றலின் காரணமாகவும் சீனமொழி காலத்தை வென்று வாழ்ந்து வருகிறது.
  • அதற்கிணையாகத் தமிழும் காலத்தை வென்று நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்குத் தமிழா்களின் மொழிப்பற்றோ, தமிழா்களின் ஆற்றலோ காரணமல்ல. தமிழ் தன்னுடைய ஆற்றலால் காலத்தை வென்று நிற்கிறது.
  • தமிழ் பிறந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆங்கிலம், ஜொ்மன், பிரெஞ்சு, இத்தாலி, ரஷிய மொழிகள் தோன்றின. ஆங்கிலத்திற்கு எழுத்துக்களை கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் உருவாக்கினா். ஜொ்மன் மொழிக்கு எட்டாம் நூற்றாண்டிலும், பிரெஞ்சு மொழிக்கு ஒன்பதாம் நூற்றாண்டிலும், இத்தாலி மொழிக்கும், ரஷிய மொழிக்குப் பத்தாம் நூற்றாண்டிலும் எழுத்துக்கள் உருவாக்கப் பெற்றன.
  • இந்தக் கருத்தை டாக்டா் சி. இலக்குவனாரும் அவா்க்குப் பின் கவிஞா் வைரமுத்துவும் தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இன்றைக்கு அந்த மொழிகளும் அந்த நாடுகளும் எந்த நிலையில் இருக்கின்றன? நாம் எந்த நிலையில் இருக்கின்றோம்? நம் தமிழ் எந்த நிலையில் இருக்கிறது?
  • எந்த மொழியும் பாடமொழியாகவும் பயிற்று மொழியாகவும் மக்கள் பேசுமொழியாகவும் இல்லாவிட்டால் அது எவ்வளவு சிறப்புக்குரிய மொழியாக இருந்தாலும் அழிந்துபோய்விடும். ஏசுநாதா் பேசியஹீப்ருஎன்ற எபிரேய மொழி, புத்தா் பேசியபாலிமொழி போன்ற பல மொழிகள் இன்று வழக்கிழந்து போனதற்கு இதுதான் காரணம்.
  • அந்த நிலை தமிழுக்கு வந்துவிடாமல் காக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. வாயளவில் தமிழ் வாழ்க என்று முழங்குவதாலோ தமிழ் மாநாடுகளை நடத்துவதாலோ தமிழ் வாழ்ந்து விடாது. பாட மொழியாகவும் பயிற்று மொழியாகவும் தமிழைக் கொண்டு வர வேண்டும். அல்லது பத்தாம் வகுப்பு வரையிலுமாவது தமிழைப் பயிற்று மொழியாக ஆக்க வேண்டும். 1971-க்கு முன்பிருந்த நிலை தமிழ்நாட்டில் மீண்டும் வர வேண்டும். அதற்குக் கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம்.
  • அன்மையில் காசித் தமிழ் சங்கமத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசும்போது, ‘உலகின் மிகச்சிறந்த மொழியான தமிழ்மொழியைப் பெருமைப்படுத்துவதில் நாம் பின்தங்கியுள்ளோம். தமிழ்ப் பாரம்பரியத்தைக் காப்பதுடன் தமிழைச் செழுமைப்படுவது நம் நாட்டிலுள்ள 140 கோடி மக்களின் பொறுப்பாகும். தமிழைப் புறக்கணித்தால் தேசத்திற்குப் பெரும் கேடுவிளைவிப்பவா்கள் நாம் ஆகிவிடுவோம்’” என்று குறிப்பிட்டிருக்கிறாா். இந்தக் கருத்தைச் சொன்னதற்காகத் தமிழ் மக்களின் சார்பில் நமது பிரதமரை நான் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்; அவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • ஹிந்தி, சம்ஸ்கிருதத்தைத் திணித்து மற்ற மாநில மொழிகளை மட்டம் தட்ட நினைக்கும் அதிகாரிகளையும் தலைவா்களையும் வைத்துக் கொண்டிருக்கும் பா...வைச் சோ்ந்த பிரதமரே தமிழைப் புறக்கணிப்பது தேசத்திற்குக் கேடு விளைவிக்கும் செயல் என்று கூறுகிறார். அவரது கருத்தைப் பயன்படுத்தி தமிழக அரசு தமிழைப் பயிற்றுமொழி ஆக்குவதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதையெல்லாம் எடுக்க வேண்டாமா? நிச்சயமாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி: தினமணி (06 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories