TNPSC Thervupettagam

தமிழ் மின் நூலகம்: ஓர் அறிவுச் சுரங்கம்

July 2 , 2023 369 days 1418 0
  • ஒரு காலத்தில், புத்தகங்களை வாசிக்க நூலகத்தைத் தேடிச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இன்று அப்படியல்ல. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் வாசகர்களைத் தேடி வருகிறது மின் நூலகம். அனைவரும் இருந்த இடத்தில் இருந்தபடியே நூலகத்தை அணுகலாம்; அரிய புத்தகங்களையும் வாசிக்கலாம்; பதிவிறக்கிக்கொள்ளலாம். அப்படியொரு மின் நூலகத்தைத் (www.tamildigitallibrary.in) தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த மின் நூலகத்தில் அரிய இதழ்களும் நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
  • நூலகம் வளர்ந்த கதை: தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின் நூலகம் ஒரு மிகப் பெரும் ஆவணக் கருவூலம். தற்போதைய தொழில்நுட்பப் புரட்சிக் காலத்தில் மின்னுருவாக்கத் தொழில்நுட்பம் (scan) அச்சுத் துறையில் பல்வேறு வியக்கத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. அந்த மாற்றத்தின் விளைவே இந்த மின் நூலகம். இது ‘தமிழ் இணையக் கல்விக்கழக’த்தின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தை 17.02.2001 அன்று முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தொடங்கிவைத்தார். 2002இல் தமிழ் மின் நூலகம் (www.tamilvu.org) அமைக்கும் முயற்சியில் இறங்கியது தமிழ் இணையக் கல்விக்கழகம்.
  • அதிக எண்ணிக்கையில் நூல்களைக் கொண்டுவருவதற்காகப் பல்வேறு அரசு நிறுவனங்கள், தளங்கள், சிறுசிறு மின்னுருவாக்க முயற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கத் தமிழ் இணையக் கல்விக்கழகம் முடிவெடுத்தது. 2015இல் துறைசார் வல்லுநர்களின் ஆலோசனைப்படி அன்றைய இயக்குநர் த.உதயச்சந்திரனால் மின்னுருவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, கன்னிமாரா நூலகம், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், உ.வே.சா. நூலகம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம், அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, அரசு திரைப்படக் கல்லூரி, இந்திய மருத்துவ இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மின்னுருவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே, பல்வேறுநிறுவனங்களில் மின்னுருவாக்கம் செய்யப்பட்ட ஆவணங்களைச் சேகரிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டன.
  • தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னுருவாக்கப் பணிகளை 2015இன் இறுதியில் ஏற்பட்ட சென்னைப் பெருவெள்ளம் வெகுவாகப் பாதித்தது. அதுவரை பல்வேறுநிறுவனங்களில் பாதுகாக்கப்பட்டுவந்த பல அரிய நூல்கள்,பெருவெள்ளத்தில் காணாமல் போய்விடும் அபாயம் உருவானது. நீரில் மூழ்கிய அறிவுச்செல்வங்கள் சிலவற்றை மீட்டெடுக்கமுடியவில்லை. சென்னை வெள்ளம் மின்னுருவாக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. இதனால்,மின்னுருவாக்கப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. நான்கு ஆண்டுகளில் சுமார் 30,000 நூல்களும், 53 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணப் பக்கங்களும் மின்னுருவாக்கம் செய்யப்பட்டன. இந்தப் பணிகளுக்கிடையே மின் நூலகத்துக்கென்று தனி இணையதளம் (www.tamildigitallibrary.in) அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இது 2017 அக்டோபர் 11 அன்று மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது; இந்த இணையதளம் இதுவரை 5 கோடி முறை பார்வையிடப்பட்டிருக்கிறது; 21 லட்சம் பதிவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
  • அரிய நூல்களின் களஞ்சியம்: தமிழ் மின் நூலகத் தளத்தில் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இணையதளம் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படுகிறது; அரிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.
  • இவற்றுடன் மற்றுமொரு மைல்கல்லாகத் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் உள்ள பல்வேறு துறைகளின் 3,321 ஆவண அட்டவணைகள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு குறித்த 112 வரலாற்று ஆவணத் தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இணையவழிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் மின் நூலகத்தின் ஒருபகுதியாக இருக்கும் தகவலாற்றுப்படை (www.tagavalaatruppadai.in) தளத்தில் தமிழ்நாட்டின் வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுச் சின்னங்கள், நாணயங்கள், அகழாய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்றஅரிய ஆவணங்கள் நிறைந்துள்ளன.
  • தமிழ் மின் நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் பெருவாரியானவை குறிப்பிடத்தக்கவை; சில நூல்கள் மிகவும் முக்கியமானவை. எடுத்துக்காட்டாக, தமிழிலிருந்து லத்தீன் மொழியில் சீகன் பால்கு அச்சிட்ட ‘Grammatica Damulica’ எனும் தமிழ் இலக்கண நூல், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின்அரிய பதிப்புகள், மெட்ராஸ் கூரியர் (தென்னிந்தியாவின் முதல் செய்தித்தாள்), சித்த மருத்துவச் சுவடிகள், தமிழ்நாடு பாடநூல் கழக வெளியீடுகள் ஆகியவற்றைச் சொல்லலாம். மேலும், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொல்லகராதிகள் என ஒரு பெரும் அறிவுக் கருவூலம் இந்நூலகம்.
  • தமிழின் தொன்மை, பண்பாடு, தொல்லியல் தொடர்பான அரிய நூல்களும் இதழ்களும் இங்கே கிடைக்கின்றன. குறிப்பாக, ராபர்ட் கால்டுவெல்லின், ‘A comparative grammar of the Dravidian or South Indian family of languages’, ‘A History of Tinnevelly’, பெரியாரின் ‘குடிஅரசு’, அண்ணாவின் படைப்புகள், ‘திராவிட நாடு’, ‘நம் நாடு’, ‘தென்னகம்’, ‘போர்வாள்’, ‘மன்றம்’ போன்ற பல திராவிட இயக்க இதழ்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக 1 லட்சம் நூல்களை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதே மின் நூலகத்தின் இலக்கு.
  • நூலகம் அடுத்த கட்டம்: அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் நூலகத்தில் உள்ள அனைத்து பிடிஎஃப் ஆவணங்களையும் தேடுதல் வசதி கொண்ட கோப்புகளாக மாற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 16,000 நூல்கள் இப்படி மாற்றப்பட்டுள்ளன. e-pub, daisy போன்ற வடிவங்களில் மாற்றி மாற்றுத்திறனாளிகளும் இந்தத் தளத்தை எளிதாகப் பயன்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
  • இதன் தொடர்ச்சியாக அரிய ஒலி-ஒளி ஆவணங்கள், ஒளிப்படங்கள், நில வரைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்ட பல்லூடக (multimedia) மின் நூலகமாக விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இதில், குறிப்பிடத்தக்க விதமாக பெரியார், அண்ணா, காமராசர் போன்றதலைவர்கள், பல்வேறு தமிழறிஞர்களின் ஒலி-ஒளிப்பொழிவுகள் நவீனத் தொழில்நுட்பத்தில் வன்வடிவத்திலிருந்து மென்வடிவத்துக்கு மாற்றப்பட்டு விரைவில் பொதுப் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட உள்ளன. மேலும், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு தொடர்பான தகவல்களைப்புவிசார் தொழில்நுட்பத்தில் பெறும் விதமாக‘தமிழ்நாடு கலாச்சார மின்நிலவரையேடு’ திட்டப்பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாகமதுரை மண்டலம் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது.
  • வ.உ.சிதம்பரனாரின் 150ஆம் பிறந்தநாள் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் அவர் தொடர்பான 127 நூல்கள்,கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மின்மயப்படுத்தப்பட்டு www.tamildigitallibrary.in/voc என்ற வ.உ.சி. சிறப்பு இணையப் பக்கத்தை 18.11.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அடுத்ததாக, கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் ‘கலைஞர் 100’ இணையப் பக்கம் உருவாகிவருகிறது. இதில் கருணாநிதி தொடர்பான பல்வேறு ஆவணங்களை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் அரிய பல நூல்களையும் ஆவணங்களையும் விரல் சொடுக்கில் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே நினைத்த நேரத்தில் படிப்பதற்கான ஒரு மகத்தான அறிவுக் கருவூலம்தான் தமிழ் மின் நூலகம்!

நன்றி: தி இந்து (02 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories