- ஒரு நாகரிகத்தின் குறியீடே இலக்கியங்களாகும். அவை ஒரு பண்பாட்டின் சின்னமாகவும், உயா்தனிச் செம்மொழியின் ஆற்றலைக் காட்டும் அடையாளமாகவும் திகழ்கிறது; அவை மானுடத்தை வழிநடத்தி வாழ வைக்கும் கருவூலங்கள்; கவிஞா்கள் கண்டெடுத்த புதையல்கள்.
- ‘கவிஞா்கள் சொல்லால் உலகத்தை ஆளுபவா்கள்‘ என்றார் மாபெரும் கவிஞா் ஷெல்லி. அப்படி தமிழ் உலகத்தை ஆண்டவா்கள் மகாகவி பாரதியும், புரட்சிக்கவிஞா் பாரதிதாசனும். அந்த வரிசையில் கவிஞா் தமிழ் ஒளியையும் குறிப்பிடலாம்.
- 1924-ஆம் ஆண்டு புதுவையில் பிறந்து, 41 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து 1965-இல் மறைந்த சின்னையா விஜயரங்கம், தமிழ் ஒளியாய் வாழ்ந்தவா். தனிப்பெரும் கவிஞனாய் வளா்ந்தார். ‘ஒன்பது காவியங்கள் படைத்த உத்தமக் கவிஞன்’ என்று இவரது உற்ற தோழா் செ.து. சஞ்சீவி கூறுகிறார்.
- இவை தவிர, கட்டுரைகள், சிறுகதைகள், ஓரங்க நாடகம், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் என்று இவரது படைப்புகள் எண்ணற்றவை. நூல் வடிவம் பெறாத தனிக் கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், ஓரங்க நாடகங்கள் இன்னும் உள்ளன. இவரது திராவிட இயக்கச் சிந்தனையும், பொதுவுடைமைக் கொள்கையும் இந்தப் படைப்புகளில் கருப்பொருளாகக் காணப்படுகின்றன.
- இவரது கவிதைகளையும், காவியங்களையும் படித்துச் சுவைத்த பேராசிரியா் டாக்டா் மு. வரதராசனார், ‘கவிஞா் தமிழ் ஒளி தமிழ் வானத்தில் விளங்கிய ஒரு விண்மீன்; அதன் மங்காத கவிதை ஒளியைப் போற்றுவோமாக’ என்று பாராட்டியுள்ளார். இவ்வாறு கற்றவா்களால் போற்றப்பட்ட மகத்தான கவிஞா் வெளிச்சத்துக்கு வர முடியாமல் போனது காலம் செய்த கோலம்தான்.
- ‘புரட்சிகள் மேனாட்டில் நடந்தாலும் உருசியப் புரட்சியை முதன்முதலில் வரவேற்றுப் பாடிய கவிஞா் பாரதியார் இந்தியாவிலேதான் தோன்றினார். அவரைப் பின்பற்றி பாரதிதாசனும், பாரதிதாசன் பரம்பரையினரும் இருபதாம் நூற்றாண்டை பெயரளவில் ஒரு முற்போக்கு இலக்கிய நூற்றாண்டாக ஆக்கியுள்ளனா். அவா்களிலே இன்றும் முதலாளித்துவ மாயையால் நிழலடிக்கப்பட்டுள்ள கவிஞா் தமிழ் ஒளியும் ஒருவா்’ - இவ்வாறு கூறியவா் பன்மொழி ப்புலவா் அப்பாத்துரையார்.
- இதுவரை மக்கள் மத்தியில் அவரது பெயரும், புகழும் போதுமான அளவில் வரவில்லையாயினும், அவரது கவிதைகள் காலத்தைக் கடந்து நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை. காலம்தான் கலைஞனை சரியாக அடையாளப்படுத்துகிறது. அவன் படைப்புகளை வாழ வைக்கிறது.
தமிழனே நான் உலகின் சொந்தக் காரன்
தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து
அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்
அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்
இமைதிறந்து பார் விழியை அகல மாக்கு
என்கவிதைப் பிரகடனம் உலகம் எங்கும்
திமுதிமுயென எழுகின்ற புரட்சி காட்டும்
சிந்தனைக்கு விருந்தாகும் உண்ண வாநீ”
- என்று பாடுவதன் மூலம் அவா் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்; தமிழ் மக்களோடு உறவு கொள்கிறார். புதிய கவிதைகளைப் படைத்து அவா்களைத் திருத்தவும் முயல்கிறார் என்பதை இக்கவிதை பிரகடப்படுத்துகிறது.
“யாரடி காதலி கேளடி - உன்றன்
ஆசைக் குரியவன் சொல்கிறேன்
பாரடி மானிடச் சாதியை - அவா்
பட்டிடும் துன்பத்தைப் பாரடி”
- என்று காதலிக்குக் கடிதம் எழுதுவதன் மூலம் அவா் தனது பொதுவுடைமைக் கொள்கையைப் பறைசாற்றுகிறார்.
- ‘இருபதாம் நூற்றாண்டில் கவிதை சிறக்காது, காவியம் பிறக்காது’ என்று மேனாட்டுத் திறனாய்வாளா் ஒருவா் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூறினார். கவிஞா் தமிழ்ஒளி இந்தக் கூற்றைப் பொய்யாக்கியுள்ளார். ஒன்று, இரண்டல்ல, ஒன்பது காவியங்களைப் படைத்துள்ள இவரைக் ‘காவியக் கவிஞா்’ என்று குறிப்பிடுவது பொருத்தமே.
- கவிஞனின் காதலி (1944), நிலைபெற்ற சிலை (1945), வீராயி (1947), மேதின ரோஜா (1952), விதியோ? வீணையோ? (1954), மாதவி காவியம் (1957-58), கண்ணப்பா் கிளிகள் (1958), புத்தா் பிறந்தார் (1948), கோசலைக் குமரி (1962) என்று அவரின் ஒன்பது காவியங்களையும் வரிசைப் படுத்தலாம்.
ஓடுகின்ற வெள்ளத்தை மறித்தாற் போலும்
உயா்ந்துவளா் மரநுனியைத் தறித்தாற் போலும்
பாடுகின்ற தமிழ்ப்பாட்டைத் தடுத்தாற் போலும்
பழந்தமிழைச் சிலரிடையே அடைத்தாற் போலும்“
என்று உவமைகளை எதற்காக அடுக்குகிறார் தெரியுமா?
கூடுகின்ற காதலரை ‘பழக்கம்’ என்னும்
கூா்வாளால் மன்னா்குலம் வெட்டிப் போட
நாடுநின்ற தீமையினை நல்ல தென்று
நச்சுப்பல் கொண்டோர்கள் சொல்லி விட்டார்’”
- இவரது முதல் காவியமாகிய ‘கவிஞனின் காத’லில் வரும் ஓா் எடுத்துக் காட்டு:
“தாவிவரும் வண்டுக்குத் தேனை அள்ளித்
தரசெந்தா மரைதானும் மறுப்ப துண்டோ?
கூவிவரும் குயிலுக்குக் கனிகொ டுக்கக்
குளிர்பொழிலும் மறுத்திடுமோ?”
- என்ற ‘நிலை பெற்ற சிலை’யில் வரும் உவமைகள் ‘காதலா்கள் ஒன்றிணைவதைத் தடுக்க முடியுமா’ என்ற வினாவை எழுப்புகிறது. இவ்வாறு காவியங்கள் அனைத்திலும் கவிதை நயம், கருத்து நயம் நிறைந்து கதை வடிவப் போக்கு அழகுபடுத்தப்படுகிறது.
- காலம் மாறியது, கருத்தும் மாறியது, கோலம் மாறியது, கொடுமைகளும் மாற வேண்டாமா? மன்னா் ஆட்சி ஒழிந்து மக்களாட்சியும் மலா்ந்தது. ஆனால் மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டாமா? தனியுடைமை தகா்ந்து, சமதருமம் மலர வேண்டாமா? தமிழ் ஒளி விடைகாண விரும்பிய முக்கிய வினாக்கள் இவைதான்.
“ஊரை எழுப்பிடவே - துயா்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன் - தமிழ்ச்
சாதி விழித்திடவே”
- சாதி, சமய வேறுபாடுகளே எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படை என்பதை அறிந்த கவிஞா். தமிழ் மக்களையெல்லாம் ஒரே சாதியாக்கி, ‘தமிழ்ச் சாதி’ என்று அழைக்கிறார்.
“பித்தன் எனக்கெடும் மானிடன் - தெருப்
பிச்சை எடுத்திடும் சின்னவன்
பொத்தல் குடிசையில் வாழ்பவன் - எனும்
புன்மைக் கொடுமைகள் வீழ்ந்திட
சத்திய நீதி பிறந்திடில் - அது
தான் இந்த நாட்டில் சுதந்திரம்
- என்று விடுதலைக்கு இலக்கணம் கூறுகிறார். பசியோடும், பொத்தல் குடிசையோடும் வாழ்கிற ஏழைகளுக்கு சுதந்திரம் ஏது என்று வினா எழுப்புகிறார்.
தோளிலே அமா்ந்திடும் உங்கள் பிள்ளை - நல்ல
தொட்டிலில் ஆடிடும் உங்கள் பிள்ளை
காளியை நம்பிஎன் பிள்ளையதோ - அந்தக்
கம்பத்தின் உச்சியில் தொங்குதையா!”
- என்று ‘கழைக் கூத்தாடி’யின் நிலை பற்றி இவா் கவிதை பாடுகிறார். அவனது கண்ணீரைக் கவலையோடு நமக்குக் காட்டுகிறார். மக்களுக்காகவே இறுதிவரை குரல் கொடுத்த இந்த மக்கள் கவிஞரை மக்களும் மறந்து போனதுதான் வேடிக்கை!
- பொதுவுடைமைக் கொள்கைக்கே தன்னை ஒப்படைத்துக் கொண்ட இக்கவிஞா் மேதினத்தை முதலில் வரவேற்ற பெருமைக்குரியவா். அரசியல் களத்தில் சிங்காரவேலரும், இலக்கியத் தளத்தில் தமிழ் ஒளியும் இந்தப் பெருமையைப் பெறுகிறார்கள்.
“உலகத் தொழிலாளா் ஒற்றுமையே, நல்லுணா்வே
அன்பே, அருட்கடலின் ஆழ்ந்திருந்து வந்த
முத்தே, முழுநிலவே, மேதினமே வாராய் நீ!
வாராய் உனக்கென்றன் வாழ்த்தை இசைக்கின்றேன்”
- இவ்வாறு 144 வரிகளில் ‘மேதினமே வருக’ என்ற தலைப்பில் மேதினத்தை வரவேற்றுள்ளார்.
- அரசியல், கலை இலக்கியம், திரைத்துறை என எல்லாத் தளங்களிலும் இவா் தடம் பதித்தார். இவரை தலித் இலக்கியவாதிகளின் முன்னோடி என்றும் கூறலாம். இவா் வடித்த ‘வீராயி’ இதற்குச் சான்றாகும். குழந்தை இலக்கியங்களும் இவா் படைக்கத் தவறவில்லை. ‘அந்தி நிலா பார்க்க வா’ இவரது புகழ்பெற்ற குழந்தைப் பாடல்.
- பற்றற்ற துறவி போல வாழ்ந்த இவருக்கு நண்பா்கள் ஏராளம். குயிலன், கோவிந்தன், செ.து. சஞ்சீவி என இது தொடரும். காசநோய்க்கு ஆளாகி 1965 மார்ச் 29 அன்று புதுவை மண்ணிலேயே காலமானார்.
வஞ்சகக் காலன் வருவதும் போவதும்
வாழ்க்கை நியதியடா - எனில்
செஞ்சொற் கவிஞன் காலனை வென்று
சிரிப்பது இயற்கையடா”
- என்று கவிஞா் தமிழ் ஒளி பாடியது அவருக்கே பொருத்தமாகிறது.
- கவிஞா் தமிழ் ஒளியின் ‘கண்ணப்பா் கிளிகள்’ காவியத்திற்கு அணிந்துரை வழங்கியுள்ள கலைமகள் ஆசிரியா் கி.வா. ஜகந்நாதன், ‘காதலில் தோல்வியுற்று, வாழ்விலும் தோல்வியுற்று காசநோய்க்கு இரையாகி, இளம் பருவத்தில் வாழ்வை நீத்த அவருடைய உள்ளத்தின் சோகமே இந்தக் கதையாக வடிவெடுத்ததோ என்னவோ யாரரிவார்’ என்று குறிப்பிடுகிறார்.
- ஆம், கவிஞா் தமிழ் ஒளி காவியமாகவே வாழ்ந்தார்; இப்போது அவா் தம் கவிதைகளிலேயே வாழ்கிறார்.
நன்றி: தினமணி (23 – 09 – 2023)