தமிழ்நாடு: 2024-ல் கவனம் ஈர்த்தவர்கள்
செஸ் நாயகன்:
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம், இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீரர் ஆனார் குகேஷ். நார்வே செஸ் போட்டித்தொடரில் பிரக்ஞானந்தா மூன்றாம் இடத்தைப் பெற்றாலும், உலகளவில் முதலிடம் வகிக்கும் மாக்னஸ் கார்ல்சனை இத்தொடரின் ஓர் ஆட்டத்தில் வென்றதும் ஷ்யாம் நிகில் உலக அளவில் 85ஆம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றதும் தமிழகத்துக்குக் கிடைத்த கூடுதல் பெருமிதங்கள்.
துணை முதல்வர் உதயநிதி:
- இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி, செப்டம்பர், 2024இல் துணை முதலமைச்சரானார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவின் முதலாவது இரவு நேர ‘ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 வகை கார் பந்தயத்தைச் சென்னையில் வெற்றிகரமாக நடத்தினார். வெள்ள நிவாரணப் பணிகளிலும் வேகம் காட்டினார். வாரிசு அரசியல் சார்ந்த விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.
பாரா ஒலிம்பிக்கில் அபாரம்:
- பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற 29 பதக்கங்களில் தமிழகத்தின் பங்கே அதிகம். மாரியப்பன் தங்கவேலு இம்முறை வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் துளசிமதி முருகேசன் வெள்ளியும், நித்யஸ்ரீ சிவன், மணிஷா ராமதாஸ் வெண்கலமும் வென்றனர். பாராலிம்பிக்கில் பாட்மிண்டனில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆனார் துளசிமதி.
கட்சி கண்ட விஜய்:
- திரைத் துறையில் உச்சத்தில் இருக்கும்போதே, அரசியலில் இறங்கிக் கவனம் ஈர்த்தார் நடிகர் விஜய். விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அதிரடியாகப் பேசினார். ஃபெஞ்சல் புயல் நிவாரண உதவியை - பாதிக்கப்பட்டவர்களைத் தன் கட்சி அலுவலகத்துக்கு - வரவழைத்து வழங்கியதும், தலைவர்களின் படங்களுக்கும் தன் அலுவலகத்திலேயே மாலையிட்டு அஞ்சலி செலுத்தியதும் விமர்சிக்கப்பட்டன.
கேரம் நாயகி:
- சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர், இரட்டையர், குழு ஆகிய பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். மழையால் பாதிக்கப்படுகிற ‘சென்னை நகர கேரம் பயிற்சி மைய’த்தை அரசு மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தார். சமூக ஊடக விமர்சனத்துக்குப் பிறகு தமிழக அரசு காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்தது.
எங்கிருந்தோ வந்தார்:
- கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்னும் குரல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து வலுவாக ஒலித்தது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான இவருக்குத் திருமாவளவன் தந்த முக்கியத்துவம் பேசுபொருளானது.
- திமுகவுக்கு எதிராகப் பேசி வந்த ஆதவ், கட்சியில் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றார். அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் திமுக மீது கடும் விமர்சனத்தை ஆதவ் முன்வைக்க, சில நாடகத்தனமான திருப்பங்களுக்குப் பிறகு அவருக்கும் விசிகவுக்குமான உறவு முடிவுக்கு வந்தது.
அதிரவைத்த கொலை:
- பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. தனது தேர்தல் தோல்விகளைப் பொருட்படுத்தாமல், பல்வேறு தரப்பினரின் நலன்களுக்காகச் செயல்பட்டவராகப் பார்க்கப்பட்ட அவரது கொலை, உளவுப்பிரிவின் தோல்வியாக ஊடகங்களில் பேசப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களாகக் கூறப்பட்ட இரண்டு பேர் என்கவுன்டரில் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டதும் சர்ச்சைக்கு உள்ளானது.
காவு வாங்கிய கள்ளச்சாராயம்:
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தது தமிழகத்தையே வேதனையில் ஆழ்த்தியது. அந்தப் பகுதியில் கள்ளச்சாராய மாஃபியாவைக் கட்டுப்படுத்தக் காவல் துறை தவறியிருப்பதும் அடித்தட்டு மக்களை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதையும் இந்தத் துயரம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
67 ஆண்டுக் கனவு:
- கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் 67 ஆண்டுக் கனவாகவும் அரசியல் கட்சிகளின் வாக்குறுதியாகவுமே நீடித்த அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் நனவானது. வெள்ளக் காலங்களில் பவானி ஆற்றின் உபரிநீரை வறட்சியான பகுதிகளுக்குத் திருப்பும் இந்தத் திட்டம், நிலம் கையகப்படுத்துதல், தங்கள் நிலம் வழியே குழாய் பதிக்கச் சில விவசாயிகளின் எதிர்ப்பு உள்ளிட்ட பல தடைகளைக் கடந்திருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 12 – 2024)