TNPSC Thervupettagam

தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களின் 1 டிரில்லியன் டாலர் இலக்கு எப்போது நிறைவேறும்

January 22 , 2024 218 days 210 0
  • இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிக்கும் காலகட்டத்தில் தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்கள் 1 டிரில்லியன் டாலர் (ரூ.83 லட்சம் கோடி) பொருளாதாரத்தை நோக்கி தங்களுக்கான திட்டங்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.
  • 2023-24 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு மாநில உற்பத்தியானது 354 பில்லியன் டாலரை (ரூ.28.3லட்சம் கோடி) தொடும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. 2030-ம் ஆண்டில் இது 1 டிரில்லியன் டாலரைத் தொட வேண்டுமென்பது இலக்காகும். இந்த இலக்கைத் தொடவேண்டுமெனில் ஆண்டுதோறும் 18 சதவீத அளவுக்குப் பொருளாதரம் வளர்ச்சியடைய வேண்டும்.
  • தமிழ்நாடு தவிர, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களும் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளன.
  • இந்த இலக்கை அடைய இம்மாநிலங்கள் உலக முதலீட்டை ஈர்ப்பதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தர பிரதேசத்தில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு 30 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.6 லட்சம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • எனினும், இந்த நான்கு மாநிலங்களும் 1 டிரில்லியன் டாலர் இலக்கை 2030-க்குள் அடைவது சிரமம் என்று எர்ன்ஸ்ட் & யங் இண்டியா அதன்இண்டியன் எகானமி வாட்ச்அறிக்கையில் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா அதன் இலக்கை 2034-ம் ஆண்டிலும், தமிழ்நாடு 2037-ம் ஆண்டிலும்தான் அடைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவும், உத்தர பிரதேசமும் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை 2038-ம் ஆண்டில்தான் அடையும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, 1 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய இம்மாநிலங்கள் நிர்ணயித்துள்ள கால அளவைவிட 5 ஆண்டுகள் தாமதமாகும் என்று அறிக்கை கூறுகிறது.
  • தமிழ்நாடு தன் இலக்கை எட்டுவதற்கு செமிகண்டக்டர், மருத்துவத் தொழில்நுட்பம், மருந்துத் தயாரிப்பு மற்றும்பயோ டெக்னாலஜி, ஏரோஸ்பேஸ் & டிஃபென்ஸ், திறன் மேம்பாடு, சிறு, குறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.
  • 2047-ம் ஆண்டில் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு வைத்திருக்கிறது. அதன்படி, அடுத்த 23 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரமானது 9 மடங்கு வளர்ச்சி அடைய வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சி வழியாகவே ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும். எனவே, தங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல கொள்கை மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories