- மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’, ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்துமுடிந்திருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இம்மாநாட்டை நடத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று பெருமளவிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6,64,180 கோடி ரூபாய்க்கு முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.
- இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டில், மிக அதிகளவு முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் டாடா பவர் (ரூ.70,800 கோடி), அதானி குழுமம் (ரூ.42,768 கோடி), சிங்கப்பூரின் செம்ப்கார்ப் (ரூ.36,238 கோடி) ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவை செயல்வடிவம் பெறும்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் 26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- மிகப் பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தனியாருடன் இணைந்து மேற்கொள்வதற்கு வழிசெய்யும் ‘பொதுத் துறை-தனியார் கூட்டுப் பங்காண்மைக் கொள்கை’; இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு 40% பங்களிக்கும் நிலையில், ‘செமிகண்டக்டர் - மேம்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கொள்கை 2024’ என முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகள் மாநாட்டில் வெளியிடப்பட்டன.
- தமிழ்நாட்டின் தொழில்துறையை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும் முன்னெடுப்பாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில்தான், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.
- கடந்த ஆண்டு, தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த வழிசெய்யும் மசோதாவை நிறைவேற்றிக் கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு திரும்பப் பெற்றது திமுக அரசு. உலக முதலீடுகளை ஈர்ப்பதில் அக்கறை காட்டும் அதே வேளையில், தொழிலாளர்களின் நலன்களை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை.
- தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-31 நிதியாண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை எட்டுவதற்குத் தேவைப்படும் வளர்ச்சி விகிதம் அடுத்த 7-8 ஆண்டுகளில் 18%ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவை ஒருபுறம் இருக்க, ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்கை எட்டுவதற்குச் சுற்றுச்சூழல்ரீதியாகத் தமிழ்நாடு கொடுக்கவிருக்கும் விலை என்ன என்பது ஆழமான ஆய்வுக்குரியது. மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் தொழிற்சாலைகள் மிகப் பெரிய பாதிப்புகளைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவருகின்றன.
- வளர்ச்சி என்னும் ஒருவழிப் பாதையில், இயற்கைப் பேரிடர்களால் தொழில்கள் பாதிக்கப்படாமலும், தொழில் வளர்ச்சி சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காத வகையிலும் அரசு நடைபயில வேண்டியது காலத்தின் கட்டாயம்!
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 01 – 2024)