TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் ஏன் தமிழ் இல்லை?

August 20 , 2019 1983 days 1535 0
  • அண்மையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10-ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32-ஆம் ஆண்டுத் தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா ஆகிய மூன்று வகையான தமிழ்ப் பெருவிழாக்கள் பெரும் பொருட்செலவில் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அடுத்து நடத்தப்பட வேண்டிய 11-ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தமிழ்நாட்டில் சிதம்பரம் நகரில் நடத்தப்பட வேண்டுமென அங்கே முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
  • மேலும், வரும் செப்டம்பர் 21, 22 ஆகிய நாள்களில் கம்போடியாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு, அக்டோபர் 5-ஆம் நாள் சுவிட்சர்லாந்தில் சர்வதேசக் கம்பன் மாநாடு, அதற்கடுத்து ஆஸ்திரேலியாவில் சிலம்ப விளையாட்டு விழா, அதற்குப்பிறகு வளைகுடா நாடுகளில் பல்வேறு வகையான தமிழ் விழாக்கள் என்றெல்லாம் உலகின் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து தமிழ் மொழி சார்ந்த விழாக்களை நடத்த ஆங்காங்கே உள்ள தமிழ் அமைப்புகளைச்  சார்ந்த நிர்வாகிகள் மிகத் தீவிரமாக முனைந்துள்ளனர். இப்போதுதான் என்றில்லாமல் எப்போதும் போலவே இது போன்ற விழாக்கள் உலக அளவிலும், இந்திய அளவிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்ச் சங்கங்கள்
  • உலகில் மொத்தமுள்ள 195 நாடுகளில், 136 நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள், தாங்கள் வாழுகின்ற நாடுகளில் தமிழ்ச்  சங்கங்களைத் தோற்றுவித்து, அவற்றின் வாயிலாகத் தமிழ் சார்ந்த விழாக்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தித் தங்களுக்கும் தங்களது தாய்மொழியான தமிழுக்கும் உள்ள மரபுறவை உயிர்ப்போடு தக்கவைத்துக் கொள்கின்றனர். புலம் பெயர்ந்து வாழுகின்ற கோடிக்கணக்கான நமது தமிழர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் அவசியமானதும், தவிர்க்க முடியாததும், தமிழ் இனம்,மொழி என்னும் அடையாளச் சிறப்புகளை அவர்களுக்குச் சேர்க்கக்கூடியதும் ஆகும்.
  • தமிழ் மொழியின் தாயகமான தமிழ்நாட்டிலும் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன, இன்றளவும் தொடர்ந்து நடத்திக் கொண்டும் இருக்கின்றன. நமது தமிழறிஞர்களும், பல்வேறு வகையான சொற்பொழிவாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் தமிழ்நாட்டிற்குள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்தும் தமிழ்ப் பணியாற்றி வருகின்றனர்.
  • மேலும் தமிழ் மொழி, தமிழர் வரலாறு தொடர்பான அரிய ஆய்வு நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளியிடப்படுகின்றன. அவ்வகையான நூல்கள் தருகின்ற அறிவார்ந்த பயன்களை மறுக்க முடியாது. அதுபோலவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதவிதமான தமிழ் விழாக்கள், நமது தொன்மையான மரபின் மேன்மைகளை நினைவூட்டுகின்ற வகையில் அமைந்து, பார்வையாளர்களின் தமிழுணர்வுக்கு வலிமை சேர்க்கின்றன என்பதையும் மறக்க முடியாது.
விழாக்கள்
  • அதே வேளையில், அதுபோன்ற விழாக்களின் கண்கூசும் வெளிச்சங்களுக்குப் பின்னால் மண்டியிருக்கின்ற பேரிருளில், தமிழ் மொழிக்கான பல உண்மையான தேவைகள் கேட்பாரின்றிக் கிடக்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.
  • உலக மொழிகளின் பட்டியலில் தன்னிகரற்று விளங்குகின்ற நமது தமிழ் மொழியானது தமிழர்களாகிய நம்மிடம் தனக்காக விதவிதமான விழாக்களைக் கோருகின்றதா அல்லது இந்த பூமிப் பெருவெளியில் தனக்கானதொரு தாயகத்தையும், அந்தத் தாயகத்தில் தனக்கெனவொரு நிலையான வாழ்க்கையையும் கோருகின்றதா என்னும் இருபெரும் கேள்விகள் இன்று நம்முன் நிற்கின்றன. ஏனெனில், மொழி சார்ந்து நடத்தப்படுகின்ற விழாக்களின் வெற்றியானது, மொழியின் வெற்றியாக மாறுவதில்லை, மாற்றப்படுவதுமில்லை என்பதே நமது 50 ஆண்டுக்காலத் தமிழ்நாட்டின் மொழி வரலாறாக இருக்கிறது. 
  • மொழி விழாக்களின் நோக்கம் மொழிக்கு நேர்ந்திருக்கின்ற ஆபத்துகளை உணர்ந்து பேசுவதற்காக அல்ல என்கிற எழுதப்படாத ஒரு மெளன விதியை பல விழா அமைப்புகள் கடைப்பிடிக்கின்றன. எனவேதான் மொழியின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்குமான குறைந்தபட்சத் தீர்மானங்கள், பல பெருந்தமிழ் மாநாடுகளில்கூட நிறைவேற்றப்படுவதில்லை. முப்பெரும் விழா என்றால் கூட்டமாகக் கூடுவது, கொண்டாடுவது, கலைந்து செல்வது என்றே நாமும் முப்பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
தமிழ் மொழி
  • நமது தமிழ் மொழியானது அதன் தாயகமான இந்தத் தமிழகத்தில் நிர்வாக, நீதிமன்ற, வணிக, வழிபாட்டு மொழியாக, மிகவும் குறிப்பாகக் கோடிக்கணக்கான வளரிளம் பருவத்துப் பள்ளிப் பிள்ளைகளின் கல்வி மொழியாக விளங்க வேண்டும். தமிழ் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு இயங்குகின்ற பல்லாயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும் அவற்றுக்குச் செறிவூட்டவும் வேண்டும் என்பன போன்ற எத்தகைய மொழியியல் கோட்பாடுகளையும் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தாமல், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் இடையூறுகளாக இருக்கின்ற எந்தவொரு சிக்கலின் மீதும் கைவைக்க விரும்பாமல், மொழியைச் சுவைபடப் பாராட்டிப் பேசிப் பார்வையாளர்களிடையே பொழுதுபோக்கு மனோபாவத்தை வளர்த்தெடுக்கின்ற ஒரு கலாசாரம் நிகழ்காலத் தமிழுலகில் வேகமாகப் பெருகிக் கொண்டிருக்கிறது.
  • இந்தக் கலாசாரம் தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களிடையே வேகவேகமாகப் பரவிக் கொண்டும் இருக்கிறது. தமிழ்நாட்டின் காட்சி ஊடகங்கள் இத்தகைய பொழுதுபோக்குக் கலாசாரத்துக்குப் பெருந்துணை புரிகின்றன. 
    சென்னைக்கும் ஜெர்மனிக்கும் பறக்கின்ற லூப்தான்சாவுக்கும், மலேசியா போன்ற வேற்று நாட்டு விமானங்களுக்கும் தெரிந்திருக்கின்ற வரவேற்பு மற்றும் அறிவிப்புத் தமிழை, தமிழ்நாட்டுக்குள் பறக்கின்ற விமானங்களுக்கும் சாத்தியப்படுத்த வேண்டும் என்கிற ஒரு சாதாரணச் செயல்பாட்டில்கூட இன்றுவரை நம்மால் வெற்றியடைய முடியவில்லை.
  • எந்தவொரு மொழி மாநாட்டிலும் இது குறித்துக் கண்டனங்களோ அல்லது அறப்போராட்ட அறிவிப்புகளோ வெளியிடப்பட்டு அவை அரசுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும்  தெரியவில்லை. தமிழ்நாட்டிற்குள் பறக்கின்ற விமானங்களில், தமிழில் அறிவிப்பு செய்கின்ற விமானங்களில் மட்டும்தான் பயணிப்போம் என்று அடிக்கடி பறக்கின்ற தமிழ் அறிஞர்களும், பிற தமிழ் உணர்வாளர்களும், தமிழ் மக்களும் என்றைக்காவது ஒருநாள் முடிவெடுப்பார்கள் என்கிற நம்பிக்கை மட்டுமே இப்போதைக்கு நம்மிடம் எஞ்சியிருக்கிறது.
அரசுப் பள்ளி நூலகங்கள்
  • ஒரு சில மாணவர்கள்கூட சேராத அரசுப் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும். அது போன்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் அங்கேயே நூலகர்களாகச் செயல்படுவார்கள் என்கிற தமிழக அரசின் அறிவிப்பானது வெறும் அறிவிப்பல்ல! அது தமிழ்வழிக் கல்வி முறையின் மீது விழுந்திருக்கின்ற பேரிடி என்பது யாராலும் உணரப்படவில்லை.
  • இந்நிலையில் படகர் இனமொழியைக் காப்பாற்றுவதற்காக யுனெஸ்கோவிடம் நிதி கோருகிறது நமது தமிழக அரசு. ஒரு மலைமொழியின் மீதான இத்தகைய வினோதமான அக்கறைக்குப் பின்னால் நமது மாநில மொழியான தமிழ்மொழி பரிதாபமாக மரணப் படுக்கையில் படுத்துக் கிடப்பதை யாரும் கவனிக்கத் தயாராக இல்லை.
  • உலக அளவில் தற்போது பயன்பாட்டில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள 7,105 மொழிகளில் ஆங்கில, சீன, ரஷிய, ஸ்பானிஷ், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட வெறும் 13 மொழிகள்தான் ஏறக்குறைய 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்பட்டு வருகின்ற வெகுமக்கள் மொழிகளாக விளங்குகின்றன. இந்த 13 மொழிகளில் நமது தமிழ் மொழி ஒன்றைத் தவிர மற்ற 12 மொழிகளும் அதனதன் நாட்டின் அனைத்துக் களங்களிலும் பெற்றிருக்கின்ற சிறப்பிலும், செல்வாக்கிலும், வளர்ச்சியிலும், பயன்பாட்டு முறைகளிலும் வெறும் 10 விழுக்காடு அளவைக்கூட நமது தமிழ்மொழி இன்றுவரை பெறவில்லை.
சிறப்பு
  • ஆனால், மேற்குறிப்பிடப்பட்டுள்ள 12 மொழிகளைக் காட்டிலும் மாநாடுகள், முப்பெரும் விழாக்கள், ஆய்வரங்குகள், பட்டிமன்றங்கள், தனிச் சொற்பொழிவுகள், கவியரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல் போன்றவை நமது தமிழ் மொழியில்தான் மிக மிக அதிக அளவில் களைகட்டுகின்றன என்பது ஒரு துயர்முரண் அன்றி வேறென்ன?
  • காமராஜரின் ஆட்சிக்காலம் வரைக்கும் பல லட்சக்கணக்கான பிள்ளைகளின் கல்வி மொழியாக வகுப்பறைகளில் இருந்த தமிழை, பின்னர் படிப்படியாக விழா மேடைகளுக்கு ஏற்றிப் புகழ்ந்துரைத்த முன்னிரவுகளில்தான் நமது தமிழ் தனது மற்ற நிலைகளில் இருந்து வேக வேகமாக கீழே இறங்கத் தொடங்கியது. 
  • இதுவரை உலகின் பல்வேறு இடங்களில் 10 உலகத் தமிழ்  மாநாடுகள், இடையே மிகப்பெரியதொரு செம்மொழி மாநாடு போன்றவையெல்லாம் முடிந்து 11-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு இயங்குகின்ற ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் மரண ஓலம், நமது தமிழ் விழாக்களின் மங்கள இசையில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை. தமிழர்களும் தமிழர்களாக இல்லை.
அறம்
  • அறிவியல் மொழியான தமிழ் மொழியை, உலகிலேயே அதிக அளவில் அறம் உரைக்கின்ற மொழியாக மட்டுமே உயர்த்திப் பிடித்துப் பெருமைபேசி அது கல்வி, நீதி, நிர்வாகம், வணிகம் உள்ளிட்ட எதையும் உரைக்கிற மொழியாகிவிடாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்ற அவலத்தை இனியேனும் தமிழுலகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் என்ன இல்லை என்பதல்ல, தமிழ்நாட்டில் ஏன் தமிழ் இல்லை என்பதே இன்றைய தமிழர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

நன்றி: தினமணி(20-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories