TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் தலித், முஸ்லிம் துணை முதல்வர்கள் எப்போது பதவி ஏற்பார்கள்

February 3 , 2024 343 days 249 0
  • இந்தி மாநிலங்களில் புதிதாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்களின் பெயர்கள் விவாதங்களை உண்டாக்கி இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மூன்றிலுமே முற்றிலும் புதியவர்களை வெவ்வேறு சமூகங்களிலிருந்து தேர்ந்தெடுத்தது பாஜக. கிட்டத்தட்ட நாட்டின் சரி பாதி மாநிலங்களில் இன்று துணை முதல்வர்கள் எனும் முறைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சமூகப் பிரதிநிதித்துவமே அதன் அடிப்படையாக இருக்கிறது. அரசமைப்பு சார்ந்த பதவி இல்லை என்றாலும், அதிகாரப் பரவலாக்கலில் இது முக்கியமானது.

என்னென்ன கணக்குகள்

  • பல கணக்குகள் இதன் பின்னணியில் இயங்குகின்றன. சமீபத்தில் தேர்தல் நடந்த மூன்று இந்தி மாநிலங்களை எடுத்துக்கொள்வோம்.
  • ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகான், சத்தீஸ்கரின் ரமன் சிங் மூவரும் கிட்டத்தட்ட குஜராத்தில் மோடி தலையெடுத்த அதே காலகட்டத்தை ஒட்டி தத்தமது மாநிலங்களில் தலையெடுத்தவர்கள்.
  • ராஜஸ்தானில் 2003-2008, 2013-2018 இரு முறை முதல்வராக இருந்தவர் வசுந்தரா ராஜே. மத்திய பிரதேசத்தில் 2005-2008, 2008-2013, 2013- 2018, 2020–2023 நான்கு முறை மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்தவர் சிவராஜ் சௌகான். சத்தீஸ்கரில் 2003-2008, 2008-2013, 2013-2018 மூன்று முறை முதல்வராக இருந்தவர் ரமன் சிங். குஜராத்தில் 2002-2014 நான்கு முறை முதல்வராக இருந்தவர் மோடி.
  • தனக்கு இடையூறாக உள்ள மூத்த தலைவர்களை ஓரங்கட்டுவது மோடிக்கு வழக்கம். அத்வானி, ஜோஷி இருவரையும்மார்கதர்ஷ் மண்டல்என்று ஒரு குழுவுக்குள் அடைக்கப்பட்டதையும் 75 வயதுக்கு மேற்பட்டோருக்குப் பதவி அளிப்பதில்லை என்று பாஜக எடுத்த முடிவையும் இதற்கு உதாரணம் ஆக்கலாம்.
  • இந்த மூன்று தலைவர்களும் அப்படியல்ல. மூவருமே மோடியைக் காட்டிலும் வயது குறைந்தவர்கள். அதிலும் மோடியைக் காட்டிலும் 10 வயது குறைந்தவர் சிவராஜ் சௌகான். மூவருமே தங்கள் மாநிலங்களைத் தாண்டி பெரிய செல்வாக்கு அற்றவர்கள். ஆகையால், மோடிக்குப் போட்டி என்பதால், இவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் என்ற பேச்சில் அர்த்தம் இல்லை. எனில், ஏன் இவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்?
  • தேர்தல் களத்தில் பெரிய பலன் தராதவர்களைப் பலி கொடுக்க மோடி தயங்குவதே இல்லை. மூன்று மாநிலங்களிலுமே இந்தத் தலைவர்கள் செல்வாக்கு 2018 தேர்தலிலேயே வெளிப்பட்டது.
  • அப்போது மூன்று மாநிலங்களிலுமே ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது பாஜக. மூன்றுமே பாஜக வலுவான கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்கள். மாநிலத் தலைமை மீதான அதிருப்தியே முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அப்போதே இவர்கள் மூவரும் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டு, தேசிய அரசியல் நோக்கி கை காட்டப்பட்டனர்.
  • அடுத்த ஆறே மாதங்களில் வந்த 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் இதை நிரூபிப்பதுபோல் அமைந்தன. மூன்று மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும், மொத்தமுள்ள 65 மக்களவைத் தொகுதிகளில் 62இல் வென்றது பாஜக. சத்தீஸ்கரில் 50%, மத்திய பிரதேசத்தில் 58%, ராஜஸ்தானில் 59% என்று மூன்று மாநிலங்களிலுமே மொத்த வாக்குகளில் பாதிக்கும் மேல் பாஜக பெற்றது.
  • தேர்தலுக்குப் பிந்தைய லோக்நீதிசிஎஸ்டிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கருத்தாய்வு முடிவுகள் சட்டமன்றத் தேர்தலைவிடவும் கூடுதல் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்க மோடிக்கு இந்தி மாநிலங்களில் உள்ள செல்வாக்கே முக்கியமான காரணம் என்று கூறின. தொடர்ந்து, இந்த மாநிலங்களில் புதிய தலைவர்களை பாஜக முன்னிறுத்தியது.
  • 2023 சட்டமன்றத் தேர்தல் சமயத்திலேயே மூவரும் ஓரங்கட்டப்பட்டனர். செல்வாக்கான மக்களவை உறுப்பினர்கள் பலர் சட்டமன்றத் தேர்தலில் நுழைக்கப்பட்டனர். இந்தத் தேர்தலில் பாஜக வென்றாலும், இவர்கள் முதல்வர்கள் இல்லை என்பதை அப்பட்டமாகவே அக்கட்சியின் தேசிய தலைமை உணர்த்தியது.
  • மூன்று மாநிலங்களிலும் மோடியின் முகமே முன்னிறுத்தப்பட்டது. மூன்று மாநிலங்களிலும் இப்போது பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் மோடியின் செல்வாக்கு பங்களித்திருப்பதைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்தாய்வு முடிவுகள் சொல்கின்றன.
  • வரவிருக்கும் தேர்தல்களில் புதிய தலைவர்கள் கூடுதல் பலன் தரலாம் எனும் வகையிலேயே ஜாம்பவான்கள் மோடியால் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
  • புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் எவரும் ஜாம்பவான்கள் அளவுக்கு செல்வாக்கு இல்லாதவர்கள். கீழே உள்ளவர்கள் தொடர்ந்து ஒத்துழைக்கவும் ஆட்சி நீடிக்கவும் கட்சியின் தேசிய தலைமையின் அனுசரணை இவர்களுக்கு முக்கியம். அந்த வகையில் 2024இல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர இவர்கள் கடுமையாக உழைப்பதோடு, தேர்தலில் பாஜக தோற்றாலும், கட்சியிலும் தொடர்ந்து அவர் தலைமையே நீடிக்க உதவியாக இருப்பார்கள்.

சமூக நீதிக்கான முயற்சியா

  • மூன்று மாநிலங்களிலும் முதல்வர்கள், துணை முதல்வர்களாகப் பதவியேற்றிருப்பவர்கள் வெவ்வேறு சமூகங்களைப் பிரதிபலிப்பவர்கள்.
  • ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா, பிராமணர். துணை முதல்வர்கள் தியா குமாரி, ராஜபுத்திரர்; பிரேம்சந்தர் பைரவா தலித்.
  • மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ், பிற்படுத்தப்பட்டவர். துணை முதல்வர்கள் ஜகதீஸ் தேவுடா, தலித்; ராஜேந்திர சுக்லா, பிராமணர்.
  • சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணுதேவ், பழங்குடி. துணை முதல்வர்கள் அருண் சாஹு, பிற்படுத்தப்பட்டவர்; விஜய் சர்மா, பிராமணர்.
  • மூன்று மாநிலங்களிலும் முற்பட்ட சமூகம், பிற்படுத்தப்பட்ட சமூகம், தலித் சமூகம், பழங்குடி சமூகம் இடையே பிரதிநிதித்துவ சமநிலையை பாஜக முயன்றிருக்கிறது. அதேசமயம், இந்தத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் வலியுறுத்திய சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் சமூக நீதி அரசியலுக்கும் கிடைத்திருக்கும் பலன் இதுவென்றும் சொல்லலாம். சமூகநீதி விஷயத்தில் பாஜக மேற்கொண்டுவரும் அடையாள அரசியலின் தொடர்ச்சிதான் இதுவும் என்று சொல்லலாம். அதேசமயம், அடையாளபூர்வமாகவேனும் சமூக பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து மோடியின் காலகட்டத்தில் பாஜக கையாள்வது ஒரு முக்கியமான மாற்றம்.

அர்த்தமற்றதா அடையாள அரசியல்

  • சுதந்திர இந்தியாவில் காங்கிரஸைக் காட்டிலும் பாஜக முதல்வர்களிலேயே பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வாளர் நிஷாந்த் ரஞ்சன் சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட ஆய்வறிக்கையை இங்கே சுட்டிக்காட்டலாம். காங்கிரஸ் முதல்வர்களில் 17.2% பிற்படுத்தப்பட்டோர் என்றால், பாஜக முதல்வர்களில் 30.9% பிற்படுத்தப்பட்டோர். ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பேசியது போன்று, ‘சுதந்திர இந்தியாவில் அமைக்கப்பட்ட அமைச்சரவையிலேயே மோடியின் இந்த அரசில்தான் அதிகபட்சமாக பிற்படுத்தப்பட்டோர் 27 பேர் அமைச்சர்களாக இருக்கின்றனர்.’
  • பாஜக அடையாள நிமித்தமாகவே சமூகப் பிரதிநித்துவத்தைக் கையள்கிறது என்று இந்த விஷயத்தை நீண்ட காலத்துக்கு எதிர்க்கட்சிகள் புறந்தள்ள முடியாது. ஏனென்றால், காலங்காலமாக அதிகாரத்திலிருந்து வெகு தூரமாக வைக்கப்பட்ட சமூகங்கள் அடையாளப்பூர்வமாகவேனும் அதிகாரத்தை எதிர்பார்கின்றன. அதன் நிமித்தம் நடக்கும் அரசியல் நடவடிக்கைகளிலும் சில பலன்கள் கிடைக்கவே செய்கின்றன.
  • தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவராகவும், பிற்பாடு மத்திய இணை அமைச்சராகவும் எல்.முருகன் நியமிக்கப்பட்டபோது, ‘தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை இப்படி நியமிப்பது பாஜகவின் வெற்று தலித் அடையாள அரசியல்என்று ஏனைய கட்சிகள் விமர்சித்தன.
  • உண்மைதான்! ஆனால், முருகன் சார்ந்த அருந்ததியின சமூகத்தினர் மத்தியில் இது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்வது முக்கியம்
  • 2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கோவை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தேன். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பலரிடம் அப்போது பேசும் வாய்ப்பு கிடைத்தது. “ஐயா! எங்க அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு இங்கெ வேல கவுண்டருங்க வயல்லேயும், வீட்டுலேயும்தான். அப்படியும் நாங்க வீட்டுக்குள்ள நுழைய முடியாது. சமையல் வேலை பார்த்தால்கூட கொல்லைப்புறமாதான் போய் வரணும். பஸ்ல நாங்க உட்காந்துருக்கப்ப எங்கவூரு கவுண்டமாருங்க ஏறினா இருக்கைலேர்ந்து எழுந்து, அவங்க உக்கார இடம் கொடுக்கணும். அரசுப் பள்ளிக்கூடத்துல அருந்ததியின பெண் சமைச்சா சத்துணவே வேணாம்னு கூப்பாடு போடுற ஊர்தானே இது! எங்கள்லேர்ந்து ஒருத்தர் கட்சித் தலைவர் ஆகிறார், மந்திரி ஆகிறார். அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவுண்டருக்கு இணையா உக்காந்து தொகுதி உடன்பாடு பேசுறார். அப்படினா அது எங்களுக்கும்தானே மதிப்பு! அப்பறம் திமுக, அதிமுக, காங்கிரஸுல மட்டும் தலித்துகளுக்கு என்ன இடம் கொடுக்குறாங்க? அங்க கொடுக்குற இடமும் அடையாள இடம்தானே?”
  • இந்தக் கேள்வியின் பின்னுள்ள வலியும் நியாயமும் புறந்தள்ளக்கூடியன என்று நீதி உணர்வுள்ள எவரும் கூறிட முடியாது. உண்மையான சமூகப் பிரதிநிதித்துவத்துக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் அதேசமயம், அதற்குச் சாத்தியமில்லாத இடங்களில் எல்லாம், மாற்றத்துக்கான முதல் படியாகக் கருதி அடையாளபூர்வ சமூகப் பிரதிநிதித்துவத்தை வரவேற்பதே நியாயமானதாக இருக்க முடியும்.

தமிழ்நாட்டில் எப்போது

  • இந்திய அரசியலில் சமூக நீதிக்கான முன்னோடி இயக்கம் தமிழ்நாட்டின் திராவிட இயக்கமும் அதன் நீட்சியான திராவிடக் கட்சிகளும். குறிப்பாக திமுக பல முன்னெடுப்புகளைக் கடந்த காலத்தில் எடுத்திருக்கிறது. தன்னுடைய கட்சி அமைப்பில் எல்லா நிலைகளிலும் துணைச் செயலர் பதவிகளில் ஒன்றை தலித்துகளுக்கு இடஒதுக்கீடு செய்த கட்சி அது.
  • தமிழ்நாடு அதிகாரப் பகிர்வில் அடுத்த கட்டம் நோக்கி நகர இப்போது தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுக முன்னடவடிக்கையை எடுக்கலாம். அடையாளபூர்வமாக அல்லாமல், உளமான அதிகாரப் பகிர்வு நோக்குடனேயே குறைந்தது இரு துணை முதல்வர் பதவியிடங்களை அறிவித்து, தலித் அல்லது பழங்குடி; முஸ்லிம் அல்லது கிறிஸ்தவர் என விளிம்புநிலைச் சமூகத்தினருக்குச் சுழற்சி முறையில் இந்தப் பதவிகளை அளிக்கலாம். பாஜகவுக்கு எதிராக இன்று காங்கிரஸ் தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியில் அர்த்தபூர்வ அதிகாரப் பகிர்வுக்கு இதன் வழி திமுக குரல் கொடுக்கலாம்.
  • சமூக நீதியும் கூட்டாட்சியும் சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம், எல்லாச் சமூகங்களையும் அதிகாரப்படுத்துவது தவிர வேறில்லை; யாரால், எப்படி நடந்தால் என்ன? பின்னே நிற்கும் சமூகங்கள் முன்னே நகர வழி பிறக்கட்டும்!

நன்றி: அருஞ்சொல் (03 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories