தமிழ்நாட்டுக்குத் தேவை, தடையற்ற உள்ளாட்சித் தேர்தலே!
- ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துப்பேழை பகுதியில், 21.11.2024 அன்று ‘தமிழ்நாட்டுக்குத் தேவை ஒருங்கிணைந்த உள்ளாட்சித் தேர்தல்’ கட்டுரை வெளியாகியிருந்தது. தமிழ்நாட்டில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், வரும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டியிருப்பதையும் அதற்கான உரிய அறிவிப்புகள் மாநிலத் தேர்தல் ஆணையத்திடமிருந்து இதுவரை வராமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி இருப்பதோடு, அரசின் நகர்வுகளுக்காக மாநிலத் தேர்தல் ஆணையம் காத்துக்கொண்டிருப்பதையும் இக்கட்டுரை கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.
உருவாக்கப்பட்ட குழப்பம்:
- நகர்ப்புற உள்ளாட்சிகளைத் தரம் உயர்த்தும்போது அருகில் உள்ள ஊராட்சிகளை இணைப்பது வழக்கமான நடவடிக்கைதான் எனவும், அதனால் ஏற்படும் வார்டுகளின் மறுவரையறைப் பணிகள் முடியும் வரை தேர்தல் நடத்துவது தள்ளிப்போகலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார் கட்டுரையாளர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகளை வலுக்கட்டாயமாக நகரங்களோடு இணைக்கும் முயற்சி என்பது வழக்கமான நடவடிக்கை அல்ல.
- இது தேர்தல் நேரத்தில், அரசு உருவாக்கியிருக்கும் குழப்பம் என்றே கருத வேண்டியுள்ளது. வார்டு மறுவரையறையைக் காரணமாகக் குறிப்பிடும்போது, நீதிமன்றம்கூட அதில் தலையிட முடியாது என்ற வாய்ப்பினைப் பயன்படுத்தித்தான் கடந்த முறை (2016ஆம் ஆண்டு) அஇஅதிமுக அரசு மாவட்டங்களைப் பிரிக்கிறோம் என்ற பெயரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தியது.
- தற்போது திமுக அரசு, உள்ளாட்சிகளைப் பிரிக்கிறோம் என்ற பெயரில் வார்டு மறுவரையறை என்ற அதிமுக எடுத்த அதே குறுக்குவழியைக் கையில் எடுத்திருக்கிறது. ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளோடு இணைக்கும் நடவடிக்கைகூட, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கான அரசின் ஓர் உத்தியோ என்ற சந்தேகம் சமூகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உள்ளது.
தனி அலுவலர்கள் மூலம் நகரமயமாக்கல்:
- எந்த ஒரு கிராம ஊராட்சியின் கிராமசபையிடமும் ஒப்புதல் பெறாமல், வலுக்கட்டாயமான நகரமயமாக்கல் முயற்சி நடந்துவருவதாகத் தகவல்கள் வருகின்றன. பல கிராம ஊராட்சிகளில் மக்கள் தங்கள் ஊராட்சியை நகரங்களோடு இணைக்கக் கூடாது; ஊராட்சியாகவே அது இருக்க வேண்டும் எனப் போராடி வருகிறார்கள். மேலும், தேர்தலை நடத்தாமல், வட்டார வளர்ச்சி அலுவலர்களைத் தனி அலுவலர்களாக நியமித்துத் தீர்மானங்களை இயற்றி, மக்களின் எதிர்ப்பையும் மீறி, கிராம ஊராட்சிகளை நகரங்களோடு அரசு இணைத்துவிடுமோ என்கிற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவிவருகிறது.
- மேலும், 2016 முதல் இருந்த தனி அலுவலர் காலத்தில், ஊழல்கள் அதிகரித்தன என்கிற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். ஒரே நேரத்தில் அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களும் கடந்த காலங்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படும் ‘தனி அலுவலர் நிர்வாக முறை’ என்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மாற்றான தீர்வாக எந்த விதத்திலும் இருக்க முடியாது. மேலும், இது ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவாது.
- எனவே, அரசுகள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திக்கொள்ளலாம்; இடைப்பட்ட காலத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாற்றாகத் தனி அலுவலர்களைக் கொண்டு நிர்வாகம் செய்துவிடலாம் என்கிற அரசியல் கணக்குகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. அரசியல் காரணங்களுக்காக மீண்டும் மீண்டும் தனிஅலுவலர் நிர்வாகத்தை இயல்பாக்குவதை ஜனநாயக சக்திகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. உள்ளாட்சியில் தனி அலுவலர்கள் நிர்வாகம் என்பது மாநிலத்தில் ஆளுநர் நிர்வாகம் செய்வதற்கு ஒப்பானதாகும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் போலவா?
- வெவ்வேறு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் வெவ்வேறு காலத்தில் நடைபெற்றாலும் வளர்ச்சிப் பணிகள் முழுக்க முழுக்க உள்ளூர் அளவில் நிர்வாகம் சார்ந்ததாகவே இருக்கின்றன.தேர்தல் வெவ்வேறு காலத்தில் நடப்பதால், கிராம அளவிலோ நகர உள்ளாட்சி அளவிலோ திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.
- மேலும், கடந்த முறை 27 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்குமான ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வெறும் இரண்டு - மூன்று மாத இடைவெளியில் நடைபெற்று முடிந்தன. அவற்றை ஒரே வேளையில் நடத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
- இந்தியா போன்ற பன்மைத்துவச் சமூகத்தில் ஒரே நேரத்தில் எல்லாத் தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்கிற ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற முன்வைப்புகளோ அல்லது ஒருங்கிணைந்த உள்ளாட்சித் தேர்தல் என்கிற முன்வைப்போ அடிப்படையில் ஜனநாயகத்துக்கு எதிரானவை.
தடையற்ற உள்ளாட்சித் தேர்தல்:
- உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் அவற்றைத் தள்ளிப்போடுவது என்பது ஜனநாயக விரோதமானது; நம் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பரவல் நோக்கங்கள், ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றுக்கு எதிரானது. நாடாளுமன்றத் தேர்தல்களையும், சட்டமன்றத் தேர்தல்களையும் இப்படித் தள்ளிப்போட முடியுமா? எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் சும்மா இருந்துவிடுமா? மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், ‘தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநில அரசுகளின் விருப்பத்துக்கு ஏற்ப அல்லது ஆளுங்கட்சியின் அரசியல் கணக்குகளுக்கு ஏற்ப நடைபெறும் என்ற சூழலை நாம் அனுமதிக்கப் போகிறோமா?’ என்பதுதான்.ஒருங்கிணைந்த உள்ளாட்சித் தேர்தல் என்பதல்ல, மாறாக, ‘தடையற்ற உள்ளாட்சித் தேர்தல்’ என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை. அதுவே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரின் விருப்பமும்கூட.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 11 – 2024)