TNPSC Thervupettagam

தமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை?

February 24 , 2020 1788 days 936 0
  • தேஜஸ் என்பது சம்ஸ்கிருதச் சொல். வேகம், பொலிவு, ஒளி என்றெல்லாம் பொருள்படும். மதுரையிலிருந்து சென்னை செல்லும் புதிய விரைவு ரயிலுக்கு தேஜஸ் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில். சில மாதங்களுக்கு முன் இதில் பயணம் செய்தேன்.
  • ரயில் புறப்படும் முன் ஒரு வெள்ளுடை ஊழியர் எல்லோருக்கும் செய்தித்தாள் கொடுத்துக்கொண்டே வந்தார். ‘விசிறிக்கொண்டே’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். என் அயல் இருக்கைப் பயணிக்கு அது பொறுக்கவில்லை. அவர் தன்மையாகத்தான் சொன்னார். ‘பதவிசாகக் கொடுக்க வேண்டும், தம்பி’. தம்பி காந்தச் சிரிப்பொன்றைப் பதிலாகக் கொடுத்தார். ஆனால், அடுத்த இருக்கையை நோக்கி இன்னும் சற்று வேகமாக விசிறினார். அப்போதுதான் தெரிந்தது. அந்த ஊழியருக்குத் தமிழ் தெரியவில்லை. அவருக்கு மட்டுமில்லை, அடுத்தடுத்து குடிநீர், தேநீர், சிற்றுண்டி என்று ஒவ்வொன்றாகப் பரிமாறிய பரிசாரகர்களில் எவருக்கும் தமிழ் தெரியவில்லை.

தமிழையே காணோம்

  • சென்னைக்கு வருகிற சர்வதேச விமானங்கள் பலவற்றிலும் தமிழ்ப் படங்களையும் தெரிவு செய்து, இருக்கைக்கு முன்னால் உள்ள எல்சிடி திரையில் பார்க்கலாம். தேஜஸ் ரயிலிலும் இருக்கைக்கு முன்னால் எல்சிடி திரை இருந்தது. ஆனால், வேலை செய்யவில்லை. உள்நாட்டு விமானங்களிலும் தமிழ்ப் படங்கள் பார்த்துவிட முடியாது. உள்நாட்டு விமான சேவைகளுக்கும் ஏனோ தமிழ் ஆகி வருவதில்லை.
  • விமானம் புறப்படும் முன் சில அறிவித்தல்கள் இருக்கும். விமானத்துக்குள் கடைப்பிடிக்க வேண்டியதும், அவசரகாலத்தில் மேற்கொள்ள வேண்டியதுமான பாதுகாப்பு எச்சரிக்கைகள். உள்நாட்டு விமானங்களில் இவை இந்தியிலும் ஆங்கிலத்திலும் அறிவிக்கப்படும். திருச்சியிலிருந்து தூத்துக்குடி போகிற விமானம் என்றாலும் இதுதான் நிலை. விமானத்துக்குள் செய்யப்படும் அறிவித்தல்கள்போலவே விமான நிலையத்துக்குள் செய்யப்படும் அறிவித்தல்களிலும் தமிழ் இராது.
  • ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இது ஓராண்டுக்கு முன்னர் நடந்தது. சென்னையிலிருந்து மதுரை போகிற தனியார் விமானத்தின் கவுன்ட்டரில் எனது இருக்கைச் சீட்டைப் பெற்றுக்கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் நீண்ட வரிசை இருந்தது. வரிசை, அந்த நிறுவனத்தின் எல்லா விமானங்களுக்கும் பொதுவானது. பல ஊர்களுக்குப் போகிறவர்களும் வரிசையில் இருந்தார்கள். இப்போது கவுன்ட்டரில் இருந்த ஓர் இளைஞர், ஒலிவாங்கியைக் கையில் எடுத்தார். மதுரைக்குச் செல்லவிருக்கும் பயணிகள் வரிசையில் நிற்க வேண்டாம், கவுன்ட்டருக்கு நேரடியாக வரலாம் என்று அறிவித்தார். அவரது குரலும் உச்சரிப்பும் செறிவாக இருந்தன. ஆனால், அறிவிப்பு ஆங்கிலத்தில் இருந்தது. அவரது பெயரை எழுதி சட்டையில் குத்தியிருந்தார். அசல் தமிழ்ப் பெயர். சென்னையிலிருந்து மதுரை செல்லும் பயணிகளுக்கான அறிவித்தலைத் தமிழில் சொல்லக் கூடாதா என்று கேட்டேன். என்னைப் பார்த்துச் சிரித்தார். அவரது கண்களில் இயலாமை மின்னியது.

கண்களில் மிரட்சி

  • அப்போது ஓர் ஊழியர், வரிசையின் கடைசியில் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்மணியை கவுன்ட்டருக்கு அழைத்துவந்தார். அந்தப் பயணி கண்டாங்கிச் சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார். 50 வயது இருக்கலாம். கண்களில் மிரட்சி தெரிந்தது. கையில் ஒரு துணிக் கடையின் கட்டைப்பை வைத்திருந்தார். வேறு பயணப்பொதிகள் இல்லை. அவருக்கு உடன் இருக்கைச் சீட்டு வழங்கினார்கள். பாதுகாப்புச் சோதனைகள் முடிந்ததும் அவரை உள்ளே அழைத்துப்போனேன். விமானத்துக்குள் பயணிகளை அனுமதிக்கச் சில நிமிடங்கள் இருந்தன. நான் பேச்சுக் கொடுத்தேன். இதுதான் அவரது முதல் விமானப் பயணம்.
  • அவருக்கு சமயநல்லூர் பக்கத்தில் ஒரு கிராமம். அவரது அண்ணன் மதுரையில் அன்றைய தினம் அதிகாலையில் ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்துவிட்டார். இவர் திருவேற்காட்டில் ஒரு வழிபாட்டுக்காக வந்தவர். வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டது. இன்று மாலையே அடக்கம் செய்ய வேண்டும். எல்லோரும் இவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். வரிசையின் கடைசியில் நின்றுகொண்டு இருந்தவரை, ஓர் ஊழியர் மதுரைக்குப் போகிறீர்களா என்று கேட்டு, முன்னால் அழைத்துவந்தார். அந்தத் தம்பி நல்லா இருக்கணும். காலமான அண்ணன் இவரைவிட ஆறு வயது மூத்தவர், இவரை ஆளாக்கியவர். மிகுந்த பிரயாசையோடு அவர் அழுகையைக் கட்டுக்குள் வைத்திருந்தார். அவருக்குக் கொடுப்பதற்கு என்னிடத்தில் சில தமிழ்ச் சொற்கள்தான் இருந்தன. அந்த நேரத்தில் அவருக்கு அவை போதுமானதாக இருந்தன.
  • சமயநல்லூர் பெண்மணியை வரிசையை முறித்து அழைத்துவந்த ஊழியரைப் போன்ற தமிழ் பேசத் தெரிந்தவர்களை விமான நிலையங்களில் பார்க்கலாமே தவிர, விமானத்துக்குள் பார்க்க முடியாது. அல்லது என்னால் பார்க்க முடிந்ததில்லை. விமானம் புறப்படும் முன் பணிப்பெண்களுக்கு என்னென்ன மொழிகள் தெரியும் என்று அறிவிப்பார்கள். நான் பயணம் செய்த எல்லா உள்நாட்டு விமானங்களிலும் அவர்கள் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்களாக இருந்தார்கள். சில விமானங்களில் உபரியாக பஞ்சாபி, மராத்தி, நேபாளம் பேசுகிறவர்களும் இருந்தார்கள். தென்னிந்திய மொழிகள் தெரிந்த விமானப் பணிப்பெண்டிரை நான் இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

சிங்கப்பூரில் விமானத்தில் தமிழ்!

  • இந்தச் சூழலில்தான் கடந்த மாதம் சென்னையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் ஒன்றில் தமிழ் ஒலித்தது. “வணக்கம், இன்னும் சிறிது நேரத்தில் சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கும். சிங்கப்பூரில் வானிலை மேகமூட்டமாக உள்ளது.” அறிவிப்பு தொடர்ந்தது. இந்தச் செய்தியை உலகத் தமிழர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டே இருந்தார்கள். 40,000 அடி உயரத்தில் தேமதுரத் தமிழோசையைக் கேட்கும் கொடுப்பினை எப்போதாவதுதான் வாய்க்கும். அதுவும் தமிழ்நாட்டுக்கு வெளியேதான் வாய்க்கும்.
  • வணிக மேலாண்மைக் கல்வியில் வாடிக்கையாளர் மொழி என்றொரு சொல்லாடல் உண்டு. வாடிக்கையாளரிடம் பணிவாகப் பேச வேண்டும், அவர்தம் மனதறிந்து பேச வேண்டும், அப்போதுதான் அவர்களை நெருங்க முடியும் என்பதாக அந்தப் பாடம் இருக்கும். சர்வதேச விமானங்கள் தமிழ் உணவு வழங்குவதும் தமிழ்ப் படங்களைத் திரையிடுவதும் தமிழ் வாடிக்கையாளர்களை நெருங்கிவருகிற முயற்சிதான். உள்நாட்டு விமானங்களுக்கும் தேஜஸ் போன்ற சிறப்பு ரயில்களுக்கும் அப்படியான தேவை இல்லை போலும். அவற்றில் தமிழ் உணவு இல்லை, தமிழ்ப் படங்கள் இல்லை, பரிசாரகர்கள் தமிழ் பேசுவது இல்லை, அறிவித்தல்களில் தமிழ் இல்லை. என்ன செய்யலாம்? அந்த நிறுவனங்களிடம் நாம்தான் சொல்ல வேண்டும்: ‘பல்சான்றீரே! இந்த ஊரில் வாடிக்கையாளர்கள் பேசுவது தமிழ் என்றறிக!’

நன்றி: இந்து தமிழ் திசை (24-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories