- பேராசிரியர் ராபர்ட் ஹார்டுகிரேவ் தனது 84ஆவது வயதில் (1939 - 2023) மறைந்துவிட்டார் என்கிற தகவலை அறிய நேர்ந்தவுடன், என் மனதில் அவர் எழுத்துகளை வாசித்து மகிழ்ந்த கணங்கள் ஓடி மறைந்தன. சில நாள்களுக்கு முன்புதான் அவர் மறைந்த செய்தி தாமதமாகப் பரவி இருக்கிறது.
- ஏனென்றால், யாரும் அருகில் இல்லாமல் மூப்பின் காரணமாக இறந்திருக்கிறார். அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று, ‘டெக்சாஸ் பல்கலைக் கழக’த்தின் அரசு, ஆசியவியல் துறையின் வருகைதரு பேராசிரியராக இருந்த ஹார்டுகிரேவ் மே 21, 2023இல் வெஸ்டுலேக் என்ற ஊரில் தனது 84ஆவது வயதில் இறந்தார்’ என்று தெரிவிக்கிறது.
- திராவிட இயக்கங்கள் குறித்து நூல்கள் எதுவும் எழுதப்படாத 60களில் தனது ஆராய்ச்சிக்காகச் சென்னைக்கு வந்து பல மாதங்கள் தங்கி, திராவிட இயக்கத் தலைவர்களை நேரில் சந்தித்தும், திராவிட இயக்க மாநாடுகள் பலவற்றில் கலந்துகொண்டு துண்டறிக்கைகளைத் திரட்டியும், கட்டுரைகளைத் தொகுத்தும் தனது ‘திராவிட இயக்கம்’ என்கிற நூலை 1962இல் எழுதி முடித்தார். அது மும்பையில் 1965இல் நூலாக வெளிவந்தது. தகவல்களைத் திரட்டுவதற்குப் பெரும்பாடுபட்டுள்ளதையும் பதிவுசெய்துள்ளார்.
- ‘‘முன்னணி ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் உள்ள நுண்படங்களை (Microfilm) பத்து ஆண்டுகள் தேடியும் திராவிடர்க் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் குறித்துக் கிடைத்தவை என்னவோ மிகவும் கொஞ்சம்தான். இவ்வாறு தமிழ்த் தேசிய இயக்கங்கள் தமிழ்நாட்டிலேயே திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன என்பதை அறிய நேர்ந்தபோது, அவற்றைக் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பன்மடங்கு கூடியது” என்கிறார்.
- மேலும் “இந்தியாவையும் அதன் பண்பாட்டையும் சமூகத்தையும் அரசியலையும் நான் அனுபவித்து உணர விரும்பினேன். இந்த என்னுடைய விருப்பத்துக்குத் திராவிட இயக்கம் குறித்த ஆய்வு ஒரு கூர்மையான, ஆழமான தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்றும் உணர்ந்தேன்” என்கிறார். இதற்காக அமெரிக்காவிலேயே ஏ.கே.ராமானுஜனிடம் தமிழ் மொழியையும் முறையாகக் கற்றுக்கொண்டுள்ளார்.
- தன்னுடைய முனைவர்பட்ட பி.ஹெச்டி. ஆய்வுக்காக 1964இல் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் பார்த்துள்ளார். மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் நடுவில் நிற்கிற அனுபவத்தைத் திருநெல்வேலியில் பெற்றிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ்த் திரைப்படங்களின் ரசிகராக மாறி, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். போன்ற பெரும் நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் திரைப்பட இதழ் ஆசிரியர்களையும் ரசிகர் மன்ற உறுப்பினர்களையும் சந்தித்துப் பழகியிருக்கிறார். இந்தச் சூழலில்தான் ‘எகனாமிக் & பொலிட்டிக்கல் வீக்லி (EPW)’ இதழில் ‘தமிழ்நாட்டின் திரைப்படங்களும் அரசியல் விழிப்புணர்வும்’ என்ற கட்டுரையை (ஜனவரி 1975) ராபர்ட் ஹார்டுகிரேவ் எழுதியுள்ளார். நவீனத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிவுத் தளத்தில் அதற்குப் பின்னால் எம்.எஸ்.எஸ்.பாண்டியன், கா.சிவத்தம்பி, கோ.கேசவன் முதலியோர் இயங்கி நூல் எழுதுவதற்கு ஹார்டுகிரேவின் முயற்சிகள் பின்புலமாக இருந்துள்ளன.
- நவீனத் தமிழ்ச் சமூகத்தின் சமூகவியல், பண்பாட்டியல், மானுடவியல், சாதியம், வரலாற்றியல் ஆகிய அனைத்துக்கும் ஒரு வரலாற்று ஆவணம்போல விளங்குகிறது ஹார்டுகிரேவ் எழுதிய ‘தமிழ்நாட்டில் நாடார் சமூகம்: ஒரு சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள்’ (1969) என்கிற புகழ்பெற்ற நூல். இந்த நூல்தான் சிலப்பதிகாரம் 20ஆம் நூற்றாண்டில் எவ்வாறெல்லாம் புதுப்புதுவிதமாக வாசிக்கப்பட்டது என்கிற என்னுடைய ஆய்வுக்குத் துணையாக அமைந்தது.
- 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதற்குச் சற்று முன்பும் பின்காலனித்துவ தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு அசைவுகளையும் அடையாள அரசியலின் எழுச்சியையும் துல்லியமாக அறிந்துகொள்ளப் பயன்பட்டது. ஆர்வம் தரும் மொழியில் காட்சி காட்சியாக ஒரு திரைப்படம்போல அவர் எடுத்துரைக்கும் பாங்கு அலாதியானது. மாணவர்கள் விரும்பும் ஒரு மகத்தான கல்வியாளராக, பல கலைகளின் சங்கமமாக விளங்கும் ‘ஓபரா’வில் ஈடுபாடு கொண்டவராக, இயற்கை ரசிகராக, குடும்பத்துக்குள் சிக்காமல் உலகம் சுற்றும் பயணியாக அவர் வாழ்ந்திருக்கிறார். எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட்டிருக்கிறார். எனவேதான், ‘ஒப்பீட்டு அரசியல்’ (1971) குறித்தும், ‘இந்தியா: ஒரு வளரும் நாட்டின் அரசு மற்றும் அரசியல்’ (2007) என்றும், ‘தென் இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகவியல் பற்றிய கட்டுரைகள்’ (1999) என்றும் தொடர்ந்து பல நூல்களை வழங்குபவராக விளங்கியுள்ளார்.
- கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்து தொண்ணூறுகளில் வெளிவந்த ‘சுபமங்களா’ இதழில் ஹார்டுகிரேவிடம் தியடோர் பாஸ்கரன் விரிவான நேர்காணல் எடுத்துப் பிரசுரம் செய்திருக்கிறார். மற்றொரு தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்; திரைப்படம் குறித்த தனது ஆய்வுத் திட்டத்துக்குத் திரட்டிய நேர்காணல்கள், ஒளிப்படங்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், வெளியீடுகள் ஆகியவற்றின் படி ஒன்றினை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்.
- இவ்வாறு பின்காலனித்துவத் தமிழ்ச் சமூகத்தின் இயக்கப் போக்கையும் குறிப்பாகத் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் உலகுக்கு எடுத்துச்சென்ற ஒரு அமெரிக்கப் பேராசிரியரின் நினைவை இந்த நாளில் போற்றிக் கொண்டாடுவது நமது கடமை. எவ்வளவோ வெளிநாட்டினர் இங்கு வந்து ஆய்வு செய்துள்ளனர். ஆனால், ஹார்டுகிரேவ் போல் சமூகத்தின் விளிம்புநிலை மக்களைக் குறித்து ஆய்வு செய்தவர்கள் குறைவு. அந்த ஒன்றுக்காகவே நாம் அவர் நினைவைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (27 – 08 – 2023)