TNPSC Thervupettagam

தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற முடியாதா

June 9 , 2023 535 days 415 0
  • அண்மையில் வெளியான பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில், ஆங்கிலப் பாடத்தில் 89 பேர், கணக்கில் 3,649 பேர், அறிவியலில் 3,584 பேர், சமூக அறிவியலில் 320 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள். தமிழில் ஒருவர்கூட நூற்றுக்கு நூறு பெறவில்லை.
  • பன்னிரண்டாம் வகுப்புத் தேர்விலும், பிற 11 பாடங்களில் ஏறத்தாழ 25,000 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றிருக்க, இரண்டு பேர் மட்டுமே தமிழில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பாக நிறைய கேள்விகள் எழுகின்றன. தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாதா? முழு மதிப்பெண் பெற முடியாத அளவில் பாடத்தில் குறை உள்ளதா? பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் குறை உள்ளதா? பாடம்நடத்தும் முறையில் குறை உள்ளதா? மாணவர் உள்வாங்குவதில் குறை உள்ளதா? திருத்தும் ஆசிரியர் மனப்பான்மையில் குறை உள்ளதா?

தவறான யோசனைகள்:

  • முதல் மூன்று கேள்விகளில் உள்ள - மாற்றக்கூடிய - குறைகளைவிடவும் 4, 5ஆவது கேள்விகளைத்தான் பலரும் சொல்வார்கள். இதில் உண்மையும் உள்ளது. பெற்றோர் முதல், ஆசிரியர்கள் வரை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவரிடம் என்ன சொல்கிறோம்? “சப்ஜெக்டை படிப்பா, லாங்குவேஜ் எல்லாம் ஜஸ்ட் பாஸ் பண்ணா போதும்” என்றுதானே? தமிழ், உயர் கல்விக்கான பாடம் இல்லை என்பது அவர்கள் கருத்து.
  • இது மாணவர் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது. பள்ளியைக் கடந்துவிட்டால் உயர் கல்வியில் தமிழுக்கு வேலை இல்லை என்று பலரும் நம்புகிறார்கள். “கடந்த ஆண்டு தமிழில் 46,000 பேர் தோல்வி, இந்த ஆண்டு 36,000 தான்” என்று பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத் தோல்விக்கான மூல ஊற்று இங்கேதான் இருக்கிறது. அரசுப் பொதுத் தேர்வில் தமிழ்த் தேர்வே முதல் தேர்வாக இருப்பதும் அச்சத்துடன் எழுதுவதற்குத் தொடக்கமாகிவிடுகிறது.

நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள்:

  • தொழிற் கல்வியில் இப்போதுதான் தமிழைச் சேர்க்கும் முடிவு வந்துள்ளது. பயிற்று மொழியாக மட்டுமல்ல, வயிற்று மொழியாகவும் தமிழ்ப் பாடம் வேலைவாய்ப்புக்கு அவசியம் என்னும் கருத்தை மாணவர் நெஞ்சில் ஆழமாக விதைத்து, அதை வளர்க்கவும் வேண்டும். தமிழைப் பற்றிய அலட்சியம் முதலில் போக்கப்பட வேண்டும். தமிழில் கலை-இலக்கியத்தில் மாணவருக்கு ஆர்வமூட்டும், ஆற்றுப்படுத்தும், நல்ல சில முயற்சிகளைப் பள்ளிக் கல்வித் துறை எடுத்தது. பள்ளிதோறும், மாவட்டம் தோறும் கலை-இலக்கியப் போட்டிகளை நடத்தியது. இதன் நல்விளைவுகளை வருங்காலத்தில் பார்க்கலாம்.
  • இதன் அடுத்தகட்டமாக, கலை-இலக்கியத் தமிழ் உணர்வால், வேலைவாய்ப்பும் வருமானத்துக்கான வழியும் இருக்கிறது என்று நம்பிக்கையூட்டும் வகையில் அடுத்தடுத்துத் திட்டமிட வேண்டும். கல்வித் துறையும் தமிழ்ப் பண்பாட்டுத் துறையும் இதில் இணைய வேண்டும். அப்போது, பெற்றோர்களும் தமிழ்வழிக் கல்வி, தமிழில் உயர் கல்வி, தமிழ்ப் பண்பாட்டுக் கல்வி எனத் தமிழின் பக்கம் திரும்புவார்கள்.

தமிழாசிரியர்களின் தவறுகள்:

  • அடுத்து, தமிழ்ப் பாடத் தேர்வுத் தாளைத் திருத்தும் ஆசிரியர் மனப்பான்மையும் மாற வேண்டும். பொதுவாகவே, தமிழாசிரியர்கள் கட்டுரையைத் திருத்தும்போது, அதில் உள்ள எழுத்துப் பிழைகள்தான் முதலில் தெரியுமாம்! பெரும்பாலும் எழுத்துப் பிழை என்பது, கை வேகத்துக்கும் மன வேகத்துக்குமான பிறழ்வுதானே? ஆனால், தமிழாசிரியர் சிலரின் பார்வை அதிலேயே தேங்கிவிடுவது, அந்தப் படைப்பின் கருத்துகளை மறந்துவிடச் செய்கிறது. பிற மொழிப் பாடத்தை எடுத்தால்தான் அதிக மதிப்பெண் பெறலாம் எனும் மாணவர்களின் கருத்தோட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.
  • பிற மொழி ஆசிரியர்களைப் போல தாராள மனப்பான்மை இல்லாத, கெட்டித்தட்டிப்போன, இலக்கண இறுக்கம் நிறைந்த, ‘குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர் குணம்’ தமிழாசிரியர் கைகளைப் பிடித்து இழுத்து, முழு மதிப்பெண் போடவிடாமல் தடுக்கிறதா?!
  • இன்றைய பன்னாட்டுப் பண்பாட்டுச் சூழலில், நமது மாணவர்கள் போட்டி போட்டு வெற்றிபெற வேண்டுமானால், தமிழாசிரியர்கள் தேர்வுத் தாள் திருத்துவதில் சில இளகிய முறைகளைக் கையாள வேண்டும். தமிழ்த் தேர்விலும் முழு மதிப்பெண் பெறும் மாணவர்கள், தமிழின்பால் கவனம் திரும்பி – எந்தத் துறையில் உயர் கல்வி கற்றாலும், எந்தப் பணிக்குப் போனாலும் தமிழ் வளர்ச்சியில் ஈடுபடுவார்கள்.

மாணவர்களைக் கைவிட வேண்டாம்:

  • சமூக உணர்வுள்ள தமிழாசிரியர்கள்தாம் இந்த அவலச் சூழ்நிலையை மாற்றியமைக்க வேண்டும். 1960களில் நிகழ்ந்த தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்தவர்கள் பெரும்பாலும் தமிழாசிரியர்களே என்பது வரலாற்று உண்மை. அந்தக் கடமை இன்றும் தொடர வேண்டாமா? அதற்காகத் தகுதியற்ற தாள்களுக்கு முழு மதிப்பெண் தர வேண்டியதில்லை, தகுதியான மாணவர்களுக்குத் தர மறுப்பதுதான் தவிர்க்கப்பட வேண்டும். தமிழின், தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் சிறக்க, நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

நன்றி: தி இந்து (09 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories