TNPSC Thervupettagam

தமுஎகச 50: தமுஎகச எனும் ஆல விருட்சம்

July 14 , 2024 186 days 174 0
  • தமிழ்க் கலை இலக்கிய உலகில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எனும் ஆல விருட்சத்திற்கு வயது 50. 20,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் ஒரே இலக்கிய அமைப்பு தமுஎகசதான்.
  • 1974 ஆம் ஆண்டில் நவம்பர் 23, 24 தேதிகளில் மதுரை திடீர் நகரில் செம்மலரில் எழுதிக்கொண்டிருந்த 35 எழுத்தாளர்கள் ஒன்றுகூடி எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கத் தீர்மானித்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய எழுத்தாளர்கள் கே.முத்தையா, ஐ.மாயாண்டி பாரதி, கு.சின்னப்ப பாரதி, பேரா. அருணன், எஸ்.ஏ.பெருமாள், டி.செல்வராஜ், அஸ்வகோஷ், காஸ்யபன், நெல்லைச்செல்வன், தணிகைச்செல்வன், மேலாண்மை பொன்னுசாமி, வேல.ராமமூர்த்தி ஆகியோர்.
  • தமுஎகசவின் முதல் அமைப்பு மாநாடு 1975 ஜூலை 12, 13 தேதிகளில் மதுரை மாநகரில் நடைபெற்றது. முதல் பொதுச் செயலாளராக தோழர் கே.முத்தையா தேர்வுசெய்யப்பட்டார்.
  • அன்று தொடங்கி ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு மாநாடு என இதுவரை 15 மாநாடுகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றன. இந்த ஐம்பது ஆண்டுகளில் தமுஎகச படைப்பாளிகள் கதை, கவிதைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கவில்லை. கலை இலக்கிய உலகில் எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கு எதிர்வினை புரிந்தார்கள்.
  • 1987இல், ‘ஆனந்த விகடன்’ அட்டைப்படத்தில் ஒரு கருத்துப்படம் போட்டதற்காக அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலம் அது. அது மட்டுமின்றி, சூப்பர் சினிமா தணிக்கை மசோதா ஒன்றையும் ஆட்சியாளர்கள் கொண்டுவந்தார்கள். இதை எதிர்த்து தமுஎகச தமிழகமெங்கும் கண்டன இயக்கம் நடத்தியது. சென்னை வாணி மகாலில் திரைப்படக் கலைப் பாதுகாப்பு மாநாடு நடந்தபோது, அதில் திரைப்பட ஆளுமைகள் முக்தா சீனிவாசன், கோமல் சுவாமிநாதன், ஆர்.சி.சக்தி, பாலு மகேந்திரா, டி.ராஜேந்தர், அருண்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். அதைத் தொடர்ந்து மாநிலமெங்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றபோது ‘தீபம்’ நா.பார்த்தசாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் வந்த புதிய அரசு இந்த மசோதாவைக் கைவிட்டது.
  • எழுத்தாளர் பெருமாள்முருகன் நாவல் குறித்த சர்ச்சை ஏற்பட்டபோது, மாவட்ட நிர்வாகம் போட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தமுஎகச நீதிமன்றம் சென்று வெற்றிபெற்றது. எழுத்தாளர் பெருமாள்முருகன் மீண்டும் எழுதுகோலைக் கையிலெடுத்தார். கருத்துரிமைக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதில் தமுஎகச அன்றும் இன்றும் முன்னணியில் இருந்து வருகிறது.

கலை இலக்கிய இரவு:

  • ஒரு காலத்தில் வள்ளித் திருமணம், அரிச்சந்திரா நாடகம் போன்றவை மட்டுமே கூத்துக் கலைஞர்களால் விடிய விடிய நடத்தப்பட்டன. அதைச் சற்றே மாற்றி, உரை வீச்சு, கவிச்சரம், பட்டி மன்றம், நாடகம், பறையிசை, தேவராட்டம், ஒயிலாட்டம் என கலை இரவாக விடிய விடிய நடத்திக் காட்டியது தமுஎகச. இந்தப் பெருமை தமுஎகச திருவண்ணாமலை கிளைக்கே சேரும். தமிழகமெங்கும் இந்தக் கலை இரவு நடப்பதையொட்டிப் பல்வேறு விதமான தட்டி போர்டுகள் மக்கள் மனதைக் கவர்ந்தன. இந்தக் கலை இரவு, தமுஎகசவின் அடையாளமாகவே ஆகிப்போனது.

தமுஎகச தந்த படைப்பாளிகள்:

  • நாவலாசிரியர்கள் டி.செல்வராஜ், சு.வெங்கடேசன், மேலாண்மை பொன்னுசாமி ஆகியோர் மத்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான சாகித்ய அகாடமி விருதுகளையும் எழுத்தாளர்கள் உதயசங்கர், மு.முருகேஷ் ஆகியோர் பால சாகித்ய புரஸ்காரையும் பெற்றிருப்பது தமுஎகசவின் பெருமிதம்.
  • மக்கள் மத்தியில், கலை இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளர்கள் கந்தர்வன், பேரா. அருணன், கு.சின்னப்ப பாரதி, ச.தமிழ்ச்செல்வன், தேனி சீருடையான், காமுத்துரை, நா.முத்துநிலவன், உமர் பாருக், கீரனூர் ஜாகிர்ராஜா, லட்சுமணப் பெருமாள், கோவை சதாசிவம், ஆதவன் தீட்சண்யா, பிரேமா அருணாசலம், நீலா, ஷைலஜா ,ஜெய, அ.வெண்ணிலா, கோவை கவிஞர்உமா மகேஸ்வரி போன்றோர் தமுஎகச வினர்தான். மேடைக் கலைவாணர் என்று போற்றப்படும் என்.நன்மாறன், பாரதி கிருஷ்ணகுமார், மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா, மதுரை பாலன், ஜீவி போன்ற பலர் தமுஎகச உருவாக்கிய மேடைப் பேச்சாளர்கள்.
  • இதேபோல நாடகத் துறையில் பிரளயன், மங்கை போன்றோரையும், ஓவியத் துறையில் வெண்புறா, ரசா, பல்லவன் ஆகியோரையும், கலை இரவு மேடைகளில் பாடும் மக்கள் பாடகர்கள் கரிசல்குயில் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, புதுச்சேரி உமா, மேட்டூர் வசந்தி, காலஞ்சென்ற திருவுடையான், பாவலர் ஓம் முத்துமாரி போன்றோரையும், திரைப்படத் துறையில் திரைக் கலைஞர் ரோகிணி, ‘பூ’ ராமு, சீனு ராமசாமி, பாடலாசிரியர் ஏகாதசி, தனிக்கொடி ஆகியோரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களுக்கு, புதிய படைப்புகளை அறிமுகம் செய்தும், எழுதும் நுட்பங்களைத் தெளிவுபடுத்தியும் பல்வேறு இலக்கிய முகாம்களைத் தொடர்ச்சியாக நடத்திப் புதிய தலைமுறைக்குப் பாதை வகுத்தும் தருகிறது தமுஎகச.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories