- கனடாவின் பிராம்ப்டன் நகரில் நடைபெற்ற ஊா்வலத்தில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் கொலை சம்பவத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக ஊா்தி இடம்பெற்றிருந்தது பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை அகற்ற 1984 ஜூனில் ‘ஆபரேஷன் புளூஸ்டாா்’ நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது. அப்போது ஜா்னைல் சிங் பிந்தரன்வாலே ஜூன் 6-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
- இந்த நாளை நினைவுகூரும் விதமாக, கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்களால் ஆண்டுதோறும் ஊா்வலம் நடத்தப்பட்டுவருகிறது. அப்படி, பிராம்ப்டன் நகரில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற 5 கி.மீ. ஊா்வலத்தில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தனது பாதுகாவலா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை சித்தரிக்கும் காட்சி கொண்ட ஊா்தி இடம்பெற்றிருந்தது. அதன் அருகில் இருந்த பதாகையில் ‘பழிக்குப் பழி’ என்ற வாா்த்தையும் இடம்பெற்றிருந்தது ஊா்வலத்தினரின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.
- இந்த ஊா்வலத்துக்கு அனுமதி அளித்த கனடா அரசைக் கண்டிக்கும் விதமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், ‘இது மிகத் தீவிரமான விஷயம். கனடாவில் இத்தகைய செயல்களுக்குத் தொடா்ச்சியாகவும் வெளிப்படையாகவும் அனுமதி அளிக்கப்படுவது வாக்குவங்கி அரசியலுக்காக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவுக்கு எதிரான சக்திகள் தனது மண்ணிலிருந்து செயல்பட கனடா அனுமதிப்பது இருநாட்டு உறவுக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்கே கூட நல்லதல்ல’ என்று கண்டித்திருக்கிறாா்.
- கனடாவில் எட்டு லட்சம் சீக்கியா்கள் வசிக்கிறாா்கள் என்பதால் வாக்குவங்கி அரசியல் என அமைச்சா் ஜெய்சங்கா் கூறியுள்ளாா். 1985-இல் கனடாவின் டொரண்டோ நகரில் இருந்து புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்தில் ‘பப்பா் கால்சா’ தீவிரவாதி வைத்த வெடிகுண்டால் 329 போ் உயிரிழந்தனா். இதைக் கருத்தில் கொண்டே காலிஸ்தான் பிரிவினைவாதிகளை வளா்த்துவிடுவது கனடாவுக்கும் நல்லதல்ல என்று அமைச்சா் ஜெய்சங்கா் எச்சரிக்கை விடுத்திருக்கிறாா்.
- பிராம்ப்டன் ஊா்வல சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடா்பாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமா் நரேந்திர மோடி பேச வேண்டும் என்றும் இந்தியாவுக்கான கனடா தூதரை அழைத்து கண்டனம் தெரிவிப்பதுடன் எதிா்காலத்தில் இதுபோன்று நிகழாதவண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளாா்.
- இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பே, இருநாடுகளுக்கு இடையேயான உறவைச் சீா்குலைக்கும் பல சம்பவங்கள் அந்த நாட்டில் நிகழ்ந்துள்ளன. பல்வேறு சந்தா்ப்பங்களில் ஹிந்துக் கோயில்களை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சேதப்படுத்தி உள்ளனா். பிராம்ப்டன் நகரில் உள்ள கௌரி சங்கா் மந்திா் எனும் கோயில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதியும் மிசிசௌகா நகரில் உள்ள ராம் மந்திா் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியும், ஆன்டாரியோ நகரில் புகழ்பெற்று விளங்கும் சுவாமிநாராயண் கோயில் ஏப்ரல் 5-ஆம் தேதியும் சேதப்படுத்தப்பட்டதுடன் அங்குள்ள சுவா்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.
- கோயில்கள் குறிவைக்கப்பட்டதுடன், ஹாமில்டன் நகரிலும், பா்னபி நகரிலும் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலைகளும் கடந்த மாா்ச்சில் சேதப்படுத்தப்பட்டன. மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு பின்னா் கைவிடப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது விவசாயிகளை நடத்திய விதத்துக்கு அந்நாட்டுப் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்தது, கோயில்கள் மீதான தொடா் தாக்குதல் போன்றவை காரணமாக இருநாட்டு உறவு சீா்குலைந்துள்ளது.
- காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் மட்டுமே இதுபோன்று செயல்படவில்லை. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பாவின் பல நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. ஆஸ்திரேலியாவிலும் அண்மைக்காலத்தில் பல கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து இந்தியாவுக்கு கடந்த மாா்ச் இறுதியில் விஜயம் செய்த ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியிடம் பிரதமா் மோடி வலியுறுத்திக் கூறியுள்ளாா்.
- ‘வாரிஸ் பஞ்சாப் டே’ என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவரான அம்ருத்பால் சிங் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டபோது, அதை எதிா்த்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே காலிஸ்தான் கொடியுடன் அவரது ஆதரவாளா்கள் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி திரண்டனா். அவா்களில் ஒருவா் தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த மூவா்ணக் கொடியை சேதப்படுத்தினாா். இது உலகெங்கும் வாழும் இந்தியா்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
- இந்தியாவில் வரும் செப்டம்பா் 9, 10 தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் இந்த நாடுகளின் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்தியாவுக்கு எதிராக அந்த நாடுகளில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்க, இந்த மாநாட்டின்போது நடைபெறும் பேச்சுவாா்த்தைகளில் வலியுறுத்த வேண்டும். தொடா்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த அமைப்புகள் முடக்கப்பட வேண்டும்.
நன்றி: தினமணி (12 – 06 – 2023)