TNPSC Thervupettagam

தரணியெங்கும் தமிழ்

January 17 , 2024 224 days 250 0
  • ஒவ்வொரு முறையும் சர்வதேச அளவிலான இலக்கிய விருதுகள் வழங்கப்படும்போது தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு சிறு சலசலப்பு எழுந்தடங்குவதைக் காண முடியும். தமிழில் எழுதும் எத்தனையோ படைப்பாளிகள், உலக அளவிலான படைப்பாளர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்றும், அவர்களுக்குப் போதுமான அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்றும் அங்கலாய்ப்பு நிகழ்வதும் உண்டு.
  • பிற மொழிகளிலிருந்து நமக்கு வந்துசேர்ந்த மொழிபெயர்ப்புகள் அளவுக்கு நம்மவர்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு பிற மொழிகளுக்குக் கொண்டுசெல்லப்படவில்லை. இந்த நிலையை மாற்ற ஓர் அரிய வாய்ப்புதான் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி. இந்நிகழ்வின் புதிய அம்சம் தமிழ் இலக்கிய முகவர்கள்!
  • 2023 சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் தமிழிலிருந்து உலக மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதற்குப் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சில படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாகவும் வெளியாகியுள்ளன. ஆனால், கடந்த முறை வெளிநாட்டுப் பதிப்பாளர்களுடனும் அவர்களது இலக்கிய முகவர்களுடனும் நம்முடைய எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் அவர்களது நண்பர்களுமே மாறிமாறிப் பேசும் நிலை இருந்தது.
  • இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் படைப்பாளியே பதிப்பாளராகவும், எடிட்டராகவும், பிழைதிருத்துபவராகவும் பணிபுரிய வேண்டிய அவலநிலை தொடர்கிறது. இந்நிலையில் தன்னுடைய படைப்பையும் எழுத்தாளரே மற்ற மொழிகளுக்கு விற்கவேண்டிய நிலைக்குச் செல்வது வருத்தத்துக்குரியது. இதற்கு ஒரு தொழில்முறைரீதியிலான ஏற்பாடே இலக்கிய முகவர்கள்.
  • இலக்கிய முகவர்களின் செயல்பாடுகள்: உலக இலக்கியச் சூழலில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய துறையாகவும் வாய்ப்புகள் அதிகமுள்ள வெளியாகவும் இலக்கிய முகவர்கள் துறை கருதப்படுகிறது. இலக்கிய முகவர்களின் முதன்மைப் பணி தம்முடைய மொழியில் இருக்கும் சிறந்த படைப்புகளை எழுத்தாளர், பதிப்பாளர்களின் உதவியோடு வேறு மொழிகளுக்குக் கொண்டுசெல்வது.
  • அந்தப் படைப்புகளை வாசித்து கதைச்சுருக்கம், எழுத்தாளர் குறிப்பு, அட்டைக்குறிப்புகள் ஆகியவற்றை எழுதி பதிப்புரிமைக் கையேடுகள் தயாரிக்க வேண்டும். பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்களில் கலந்துகொண்டு, வெளிநாட்டுப் பதிப்பாளர்களையும் முகவர்களையும் நேரில் சந்திப்பதும் தொடர்பு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு இரு சாரருக்கும் இணைப்புப்பாலமாக இருப்பதும் இம்முகவர்களின் முக்கியப் பணி.
  • தமிழ்ப் படைப்புகளை மற்ற மொழிகளுக்கு எடுத்துச்செல்வதை ஊக்குவிக்கும் வகையில் மொழிபெயர்ப்புக்கான மானியமும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அது போலவே மற்ற மொழிகளில் இருந்து இங்கு மொழிபெயர்க்க விரும்பும் பதிப்பாளர்களுக்கும் அந்தந்த நாடுகளில் மொழிபெயர்ப்பு மானியம் வழங்கப்படுகிறது.
  • இதுவரையில் தமிழில் ஒரு சில பதிப்பகங்களே அவற்றைப் பெற்றுள்ளன. இந்த மானியங்களின் மூலம் சந்தை பன்மடங்கு விரிவடையும். இதற்கு ஆயத்தமாகும் விதமாகவே தமிழ் இலக்கிய முகவர்களுக்கான பயிற்சி முகாம் தமிழக நூலகத் துறை இயக்குநரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • தமிழ் இலக்கியப் பரிச்சயம் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊக்கத்தொகையுடனான இருபது நாள் பயிலரங்கு நடத்தப்பட்டது. பன்னாட்டு புத்தகக் காட்சிகளுக்குச் சென்று திரும்பிய தமிழ்ப் பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் ஆகியோருடன் தொடர்புகளும் கலந்துரையாடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
  • கூட்டுச் செயல்பாடு: தமிழ் இலக்கியத்தை உலக அரங்குக்கு எடுத்துச்செல்வது என்பது எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள், அரசாங்கம் என அனைவரும் பங்குபெற வேண்டிய ஒரு கூட்டுச் செயல்பாடு. இன்றைக்கு தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் பெரிய வெற்றிடம் நிலவுகிறது.
  • .சிங்காரம், அசோகமித்திரன் போன்று தமிழில் எழுதிய உலக எழுத்தாளர்களை மொழிபெயர்க்க வேண்டுமானால், ஆங்கிலத்திலும் இலக்கியப் பரிச்சயம் கொண்டவர்கள் நமக்குத் தேவை. ஆனால், அப்படிப்பட்டவர்கள் நம்மிடையே குறைவு.
  • மாநில எல்லையைத் தாண்டி தமிழ்ப் படைப்புகளைப் பரந்து விரிந்த உலகுக்கு எடுத்துச்செல்வதற்கும், உலகப் பரிசு பெற்ற நாவல் என்று ஒரு தமிழ்ப் புத்தகத்தின் அட்டையில் வெளியிடுவதற்குமான ராஜபாட்டையை சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி எதிர்காலத்தில் ஏற்படுத்திக்கொடுப்பதற்கான தொடக்க அடிகளை தற்போது எடுத்து வைத்திருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories