தரமற்ற மருந்துகளால் ஆபத்து!
- இந்தியாவில் மருந்து தொழில், புதுமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான பெருந்தொழிலாக வளா்ந்து வருகிறது. குறைந்த விலையில், உயா்தர உயிா் காக்கும் மருந்துகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதால் ‘உலக நாடுகளின் மருந்தகமாக’ இந்தியா மாறி வருகிறது.
- ஆப்பிரிக்க நாடுகளில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் பரவலின் போது, இந்தியா அந்நாடுகளுக்கு ஆன்டி-ரெட்ரோவைரல் எனப்படும் நோய் எதிா்ப்புச் சக்தி கொண்ட உயிா்க் காக்கும் மருந்துகளை அனுப்பி அந்நோய் பரவலைத் தடுக்க உதவியது. உலகில் கரோனா தீநுண்மி பரவலின் போது, இந்திய தயாரிப்பு மருந்துகளை தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி பல உயிா்களைக் காப்பாற்றிய பெருமை இந்தியாவையே சேரும்.
- இந்திய மருந்துத் துறை 2030-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப் பெரிய மருந்து விநியோகிப்பாளராக மாற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அதன் தொழில் துறை, தற்போதைய வருவாயான 4.1 கோடி ரூபாய் டாலரிலிருந்து, 2030-ஆம் ஆண்டுக்குள் 12 கோடி ரூபாய் டாலராக, 11-12 சதவீத கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதத்தில் (சிஏஜிஆா்) அதிகரிக்க இலக்கு நிா்ணயித்துள்ளது.
- இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள், அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, ரஷியா, நேபாளம், வங்கதேசம் போன்ற பல வளா்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- இந்நிலையில், பிபிசி அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் ‘மகாராஷ்டிரத்திலுள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனம், போதையை ஏற்படுத்தக் கூடிய வேதியல் கலவைகள் அடங்கிய வலி நிவாரண மாத்திரைகளைத் தயாரித்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அந்த மாத்திரைகளை அதிக அளவில் பயன்படுத்தினால், மக்கள் அவற்றுக்கு அடிமையாகக் கூடும். அந்த மாத்திரைகள் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்மதி செய்யப்படுகின்றன.
- இது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா, நைஜீரியா, கோட் டிவாய்ா் போன்ற நாடுகளில் பெரும் சுகாதார சீா்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது’ எனத் தெரிவித்திருந்தது. இது தொடா்பான ரகசிய காணொலி பதிவில் ‘ஒருவா் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 டேபன்டடால் மத்திரைகளை உட்கொண்டால், அவா் தன்னிலை மறந்திருப்பாா். இந்த மருந்துகள் உடல்நலத்திற்கு தீங்கானவை. ஆனால் தற்போது இது ‘வியாபாரமாக’ உள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா் ஏவியோ நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவா்.
- இந்தக் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, மகாராஷ்டிர மாநிலம் பால்கா் பகுதியில் இயங்கி வரும் ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மத்திய, மாநில அரசுகளின் மருந்து தயாரிப்பு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூட்டாக சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு 1.3 கோடி மருந்துகளையும், டேபன்டடால் கரிசோப்ரோடல் கலவைகள் அடங்கிய, 26 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மருந்து பொருள்களையும் கைப்பற்றினா்.
- மத்திய அரசின் உத்தரவைத் தொடா்ந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு தொடா்பாக விளக்கமளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு மகாராஷ்டிர அரசின் உணவு மற்றும் மருந்து நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த மாத்திரைகளில் மிதமான மற்றும் கடுமையான வலிக்குப் பயன்படும் டேபன்டடால், வலியிலிருந்து நிவாரணம் அளிக்க மூளை மற்றும் முதுகெலும்பில் செயல்பட்டு நரம்புகளைத் தளா்த்த பயன்படும் கரிசோப்ரோடோல் ஆகிய மருந்துகளின் கலவை இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த மருந்துக் கலவையைப் பயன்படுத்த உலகின் எந்தப் பகுதியிலும் உரிமம் அளிக்கப்படவில்லை. இந்த மருந்து கலவை மூச்சு விடுவதில் சிரமத்தையும், மூளையில் பாதிப்பையும் ஏற்படுத்தும். அந்த மருந்து கலவையை அதிக அளவில் பயன்படுத்தினால் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறது மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு. இருப்பினும் குறைந்த விலையில், எளிதாக இம்மாத்திரைகள் கிடைப்பதால் பல மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இது போதைப் பொருளைப் போல பயன்படுத்தப்பட்டு வருவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- இந்தியாவில் டேபன்டடால் கரிசோப்ரோடல் மருந்துகளை தனித்தனியே பயன்படுத்த மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அவற்றை கலவையாகப் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை. எனவே, டேபன்டடால், கரிசோப்ரோடோல் கலவை மருந்துகள் அனைத்தையும் தயாரிக்க அனுமதி, அவற்றை ஏற்றுமதி செய்ய அளிக்கப்பட்ட தடையில்லா சான்றிதழ் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டுமென அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களை அரசுகளை மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
- மருந்தின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதன் வேதியியல் கலவைகளை சரியென ஒப்புதல் அளித்த பின்னரே, மாநில அரசுகளின் மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அம்மருந்துகளைத் தயாரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய மருந்து உற்பத்தி தரத்திலும், விநியோகத்திலும், பாதுகாப்பிலும், உலக அளவில் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியை பெருமளவில் பாதிக்கும். வியாபார நோக்கத்தையே குறிக்கோளாகக் கொண்டு, தரம் குறைந்த மருந்துகளை தயாரித்து மக்களின் உயிா் மீது விளையாடும் மருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் தான் உலக அளவில் இந்திய மருந்து நிறுவனங்களின் நிலை உயரும். இதற்கு மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
நன்றி: தினமணி (10 – 03 – 2025)