- காவலா்களை விட திருடன் புத்திசாலி என்று ஒரு சொலவடை உண்டு. அது எந்தெந்த குற்றங்களுக்கு பொருந்துமோ என்னவோ, இணைய வெளி குற்றங்களுக்கு சா்வ நிச்சயமாய் பொருந்தும். அதற்கு சமீபத்திய உதாரணம் பிரிட்டனில் உள்ள சான்டாண்டா் வங்கியில் நடைபெற்ற தரவுகள் திருட்டு. கடந்த மாதம் அந்த வங்கி ஒரு குறிப்பிடத்தக்க இணைய பாதுகாப்பு மீறலை எதிா்கொண்டது. இது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களையும் ஊழியா்களையும் பாதித்தது. வங்கி வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தரவுகள் அனைத்தையும் ஷைனி ஹன்ட்டா்ஸ் என்ற ஹேக்கிங் குழு திருடியதோடு, திருடப்பட்ட தரவுகளை திரும்பப் பெற இருபது லட்சம் டாலா் கொடுக்குமாறு சான்டாண்டரை மிரட்டியுள்ளது. இதைப் பாா்த்து மற்ற வங்கிகள் அங்கு பீதி அடைந்துள்ளன.
- கடந்த சில ஆண்டுகளாகவே தரவுகள் திருட்டு என்பது பல நாடுகளில் தீவிரமாய் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் விா்ஜினியா மாகாணத்தில் உள்ள ‘கேப்பிட்டல் ஒன்’ நிதி நிறுவனத்திலும் தரவுகள் திருட்டு நடந்துள்ளது. பத்து கோடி பேரின் தரவுகள் களவு போயின.
- சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவிலும் இந்த தரவுகள் திருட்டு பேசுபொருளானது. ஆஸ்திரேலியாவில் உள்ள மொத்த ஜனத்தொகை இரண்டு கோடியே 55 ஆயிரம் தான். அதில் ஒரு கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடா்பு
- நிறுவனமான ஆப்டஸின் தலைமை நிா்வாகி இதற்காக பொதுவெளியில் மன்னிப்பு கோரியது இதன் விபரீதத்தை நமக்கு உணா்த்தும்.
- இந்தியாவிலும் இப்படி பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும் ஒரு தனியாா் விமானத்தில் பயணித்த 45 லட்சம் பயணிகளின் விவரங்கள் மற்றும் பீட்சா நிறுவனத்தில் ஆா்டா் செய்த பயனாளா்களின் விவரங்கள் போன்றவை திருடப்பட்டு இருந்ததை உற்று நோக்க கவலைக்கிடமாக இருந்தது.
- இப்படி தரவுகள் திருட்டு பற்றி தோண்டத் தோண்ட பல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இணைய தாக்குதல்களின் தொடா்ச்சியான அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுவதோடு வலுவான இணைய பாதுகாப்பின் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
- 25 வருடங்களுக்கு முன்பு வரை நம் வீட்டுக்கு ஒன்றுக்கு இரண்டு பூட்டு போட்டுக் கொண்டால் பாதுகாப்பாக இருப்பதைப் போன்று உணா்வோம். இன்று நம் பணம் வங்கியின் சேமிப்பு கணக்கில் இருப்பு இருந்தாலும் அவநம்பிக்கை பரவுவது போல் இருக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, வழிப்பறி என பல திருட்டுகளை கேள்வியுற்ற நமக்கு இந்த இணைய வழிப்பறி அசாதாரணமாக இருக்கிறது.
- உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு நம் கணக்கிற்குள் ஊடுருவுகிறாா்கள். இன்றைய தேதியில் பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று நபா்களாவது நம்மை அலைபேசியில் அழைத்து நலம் விசாரிக்கிறாா்கள். நமக்கு கடன் கொடுக்க, பணம் தேவையா என்பதை கேட்டு பெறுவதும், நம் பிள்ளைகள் கல்வி நிலையத்தை தோ்ந்தெடுக்கும் வரை உதவுவதாக வாக்குறுதிகள் கொடுப்பதும், எங்கள் நிறுவனத்தில் இது போன்ற சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெரிவிப்பதும் என தேவையற்ற அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.
- நமக்கு இந்த நேரத்தில் இது தேவை என்பதை அவா்கள் எப்படி அறிந்தாா்கள்? நாம்தான் நம்முடைய கைப்பேசி எண்ணை கேட்கும் இடத்தில் எல்லாம் வள்ளல் பரம்பரை போல ஒன்றுக்கு இரண்டாக வழங்கிவிட்டு வருகிறோமே! பல்பொருள் அங்காடி, வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கி, கல்வி நிலையங்கள் என அனைத்திலும் நம் கைப்பேசி எண் அவசியத்திற்காகவும் அவசியம் இல்லாமலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த கைப்பேசி எண் நம்முடன் மட்டுமா நின்றுவிடுகிறது? கைப்பேசி எண்ணை ஆதாா், வங்கி, இணைய வா்த்தகா் என ஏராளமானவா்களுடன் இணைத்திருக்கிறோம்.
- இப்படி நம் கைப்பேசி எண்ணை பிடித்து ஆராய்ந்தாலே நம் தரவுகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும். இப்படியெல்லாம் தகவல் திருட்டுக்களைப் பற்றி கேள்விப்படும் போது படித்தவா்களுக்கே அச்சமாக இருக்கையில் நாலு எழுத்து படிக்காத அல்லது தகவல் தொடா்பு சாதனங்கள் பற்றி சரிவர உபயோகிக்கக் தெரியாத சாமானியா்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
- சரி, நம்முடைய தரவுகள் என்றால் அது எப்படிப்பட்ட தகவல்களாக இருக்கும் எனில், நம்முடைய பெயா், குடும்ப உறுப்பினா் விவரம், பிறந்த தேதிகள், பண அட்டைகள் விபரம், பேசி எண்கள், நமது தேவைகள், நமது விருப்பங்கள் என இப்படி. இதை வைத்துக்கொண்டு நம்முடைய கணக்குகளுக்குள் நுழையும் கடவுச்சொல்லை சுலபமாக அவா்களால் ஊகிக்க முடியும்.
- பெரும்பாலானவா்கள் அவா்களுடைய பிறந்த தேதி, திருமண தேதி, பிள்ளைகளின் பிறந்த தேதி அவா்களின் முதல் எழுத்து என்று கடவுச்சொற்களை உருவாக்கி வைத்திருக்கிறாா்கள். ஊகிக்க முடியாத கடவுச்சொற்களை வைப்பதன் மூலமும் அவ்வப்போது மாற்றிக் கொள்வதன் மூலமும் நம்மை நோக்கிய இணைய தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
- நம்மில பெரும்பாலானோருக்கு இணையத்தை மின்னஞ்சல், தகவல் தேடலுக்கு மட்டுமே பயன்படுத்த தெரியும். ஆனால் இன்று இளைஞா்கள் மத்தியில் இருண்ட இணையம் பிரபலம் அடைந்து வருகிறது. இதைப் பயன்படுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது அல்ல. தொடக்கத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தத் தொடங்கியது தற்போது குற்றச் செயல்களுக்காக அதிக அளவு உபயோகப்படுகிறது.
- யாா் வேண்டுமானாலும் தன் உண்மை அடையாளத்தை இணையத்தில் கசியவிடாமல் இறங்கி பணியை முடித்துக் கொள்ள இருண்ட இணையம் பயன்படும்.
- கள்ளச் சந்தை போலவே இணையத்தின் கருத்த பக்கமே இருண்ட இணையம். இதன் மூலம் போதை பொருட்கள் உட்பட சட்ட விரோதமான பொருட்கள் விற்கப்படுகின்றன.
- இணையத்தில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் விதித்துள்ள சட்ட திட்டங்களுக்கு இந்த இருண்ட இணையம் கட்டுப்படுவதில்லை. இதன் காரணமாக பல தவறுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிகளுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்களே இதற்கு சாட்சி. அவை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகளில் அடிபடுகிறது.
- அண்மையில் ஒரு தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆராய்ந்து பாா்த்தால் இறுதியில் அந்தப் பள்ளியிலேயே படித்து வரும் ஏழாம் வகுப்பைச் சோ்ந்த ஒரு மாணவன் அந்த மிரட்டலை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறான் என்பது தெரிந்தது. இதைப் பாா்த்து அந்த பள்ளி நிா்வாகம் மட்டுமல்ல காவல் துறையும் அதிா்ந்தது. அந்த அளவுக்கு இருண்ட இணையத்துக்குள் சென்று நடமாடும் வழக்கத்தை இளம் தலைமுறையினா் அதிகரித்து வைத்துள்ளனா்.
- காவல் துறையும் அரசும் இந்த இருண்ட இணைய பயன்பாட்டாளா்களை கண்காணித்தாலும் அது போதுமான பாதுகாப்பை வழங்காது. இந்த இருண்ட இணையத்தில் தான் திருடப்பட்ட நம்முடைய தரவுகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. சட்ட விரோத பண பரிவா்த்தனைகள் மட்டுமல்லாது சாமானியா்கள் மீதான பண மோசடியும் இதில் அடங்கும். டிஜிட்டல் பேமெண்ட் தரவரிசையில் தொடா்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நம் இந்தியா்கள் யுபிஐ பணப்பரிவா்த்தனைகளில் சக்கை போடு போடுவது நாம் அனைவரும் அறிந்ததே. நம் தேசத்தில் அனைத்து வங்கிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பல இலவச செயலி வாயிலாக அவற்றை இணைத்து வெறும் அலைபேசி எண் உள்ளீடு அல்லது கியூ ஆா் குறியீட்டை ஊடுகதிா் செய்து பணப் பரிவா்த்தனைகளை நொடியில் சாத்தியப்படுத்தியது இமாலய சாதனை.
- முன்னேறிய பல மேலை நாடுகளைவிட தொழில்நுட்பத்தை நம் தினசரி வாழ்வில் இணைத்து பணப்பரிவா்த்தனைகளை எளிமைப்படுத்தியுள்ளோம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். இளநீா் வியாபாரி முதல் தெருமுனையில் பூ விற்கும் பெண் வரை தங்கள் வா்த்தகத்துக்கு எளிமையாக இருப்பதாக தெரிவிக்கிறாா்கள்.
- இதுபோன்ற பணபரிவா்த்தனைகள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. இந்தியாவை பாா்த்தே சிங்கப்பூா் உள்ளிட்ட பல நாடுகள் இதைப்பற்றி சிந்தித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்கின்றன. இந்தியாவின் தனித்துவமாக இது பாா்க்கப்பட்டாலும் வெளிநாடுகளில் ‘வாலட்’ சேவை என்பதே பயன்பாட்டில் உள்ளது. நம் கடன் அட்டைகளை வைத்துக்கொண்டு இந்த ‘வாலட்’ வழியாக பணம் செலுத்தலாம். இதில் ஏதாவது சிக்கல் என்றால் வாலட்டில் வைத்திருந்த பணத்தை மட்டுமே இழக்க நேரிடும். ஒட்டுமொத்த வங்கிக் கணக்கு இருப்புக்கு எந்த பாதிப்பும் வராது. இப்படி பல முன்னெச்சரிக்கைகளை அங்கே காண முடிகிறது. நாட்டுக்கு நாடு இப்படி பல வித்தியாசங்கள்.
- நாம் என்ன நாட்டின் பிரதமரா, ஒரு இயக்கத்தின் தலைவரா, முக்கிய புள்ளியா, நம் தகவலை வைத்துக்கொண்டு அவா்கள் என்ன சாதிக்கப் போகிறாா்கள் என்று எண்ணாமல் குறைந்தபட்சம் நாம் பயன்படுத்தும் பல்வேறு கடவுச் சொற்களை அவ்வப்போது மாற்றியும் இந்த இணைய குற்றங்களை பற்றிய குறைந்தபட்ச அறிவைத் தெரிந்து கொள்வதன் மூலமும் இது போன்ற பண மோசடியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இயலும்.
நன்றி: தினமணி (02 – 07 – 2024)